அமிதாப், சைஃப் அலி நடித்த இடஒதுக்கீட்டு எதிர்ப்புப் படம்

பிரபாகரன் அழகர்சாமி

ஆரக்ஷன் (Aarakshan) என்றொரு இந்தி படம். 2011ஆம் ஆண்டு வெளியானது. அமிதாப்பச்சனும் சைஃப் அலிகானும் முதன்மைக் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர். ஆரக்ஷன் என்றால் இடஒதுக்கீடு என்று பொருள். படத்தின் மையப் பொருள் இடஒதுக்கீடு கொள்கை குறித்தது.

அமிதாப் ஒரு பிரபலமான தனியார் கல்லூரியின் முதல்வர். சைஃப் அந்தக் கல்லூரியில் ஒரு ஆராய்ச்சி மாணவர். அமிதாப் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர், சைஃப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அமிதாபின் பிரியத்திற்கும் நம்பிக்கையும் உரிய மாணவர் சைஃப். எந்த அளவுக்கு என்றால், அமிதாபின் மகள் தீபிகா படுகோனை, அமிதாபின் ஆதரவுடனே சைஃப் காதலிக்கும் அளவுக்கு.

படத்தில், சைஃப் வெளிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கை ஆதரவாளர். அமிதாப் வெளிப்படையாக இடஒதுக்கீட்டுக் கொள்கையைத் தான் ஆதரிப்பதாக எங்கும் சொல்லம்மாட்டார். ஆனால் அவர் மனதிற்குள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர் போலதான் காட்டப்பட்டிருப்பார்.

படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பதைப் போல அமைக்கப்பட்டிருந்தாலும், படத்தின் கதை இடஒதுக்கீட்டின் நியாயங்களை முறையாகப் பதிவு செய்யாமல், இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் நியாயங்களை முறையாகப் பதிவு செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அந்தக் கல்லூரியில் பியூனாக வேலை பார்க்கும் ஏழை பார்ப்பனருடைய மகனுக்கு இடஒதுக்கீடுக் கொள்கையினால், பொறியியல் கல்லூரியில் சேர வாய்ப்புக் கிடைக்காமல் போவதை உருக்கமாகக் காட்டியிருப்பார்கள். அந்த மாணவர் தற்கொலை முயற்சிகூடச் செய்வார்.

இன்னொரு காட்சியில், இடஒதுக்கீடு கொள்கைக்காகப் போராடுகிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மோசமானவர்களாகவும் சமூக விரோதிகளாகவும் காட்டப்பட்டிருப்பார்கள்.

இடஒதுக்கீடு ஆதரவுத் தோற்றத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடு எதிர்ப்பு படம் இது. படத்தின் முடிவுதான் வினோதமானது. இன்றைய சூழலில் நாம் கவனிக்கவேண்டியதும் அதுதான்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையின் முன்னோடியான தமிழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப் படுவதில்லை. நுழைவுத்தேர்வை தமிழகம் கைவிட்டதே, அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பை (level playing field) வழங்க வேண்டும் என்கிற சமூகநீதிப் பார்வையில்தான்.  ஆரக்ஷன் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில், படம் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தில் இருந்து விலகி நுழைவுத்தேர்வு குறித்து பேச ஆரம்பிக்கிறது.

அமிதாப் பச்சனை இடஒதுக்கீடு ஆதரவாளர் என்று முத்திரை குத்தி, கல்லூரியின் முதல்வர் பதவியில் இருந்து விலகச்செய்கிறார் அந்தக் கல்லூரியின் துணை முதல்வராக இருப்பவர். அந்த நபர், கல்லூரிக்கு ஒழுங்காக வேலைக்கு வராமல் தனியார் நுழைவுத்தேர்வுப் பயிற்சி வகுப்புகள் நடத்திவருபவர். அந்த ஊரிலேயே பிரபலமான நுழைவுத்தேர்வுப் பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருபவர். இடஒதுக்கீட்டு எதிர்ப்பும் நுழைவுத்தேர்வுத் திணிப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. நடைமுறையில் இரண்டுமே  சமவாய்ப்பை மறுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

அமிதாப்பும் அவருடைய நம்பிக்கைக்குரிய மாணவர்களும் சேர்ந்து பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு இலவசமாக நுழைவுத்தேர்வுப் பயிற்சி கொடுத்து அவர்களைத் தயார்படுத்துவதாக முடிகிறது படம். இடஒதுக்கீடு என்று படத்திற்கு பெயர் வைத்துவிட்டு இடஒதுக்கீடு குறித்து எந்த முடிவான கருத்தையும் கொடுக்காமல், மறைமுகமாக இடஒதுக்கீட்டைவிட பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுப் பயிற்சி முக்கியமானது என்று சொல்லிப் படம் முடிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.