சி.இராவணன்
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலம் என அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதியைச் சார்ந்த வேட்டுவக்கவுண்டர் சமூக மக்களைத் தவிர, அனைவரும் வணங்கும் தெய்வமாக அண்ணன்மார்சாமி உள்ளது. இதில் அதிகமாக அண்ணன்மார்சாமியை வணங்குபவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள் மற்றும் சக்கிலியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆகும். அண்ணன்மார் சாமியின் கதையை முதலில் கள்ளழகர் அம்மானை என்பவரும் அவரைத்தழுவி பிச்சன் என்பவரும் எழுதிய கதைப் பாடலுக்கு ஒரு விரிவான ஆய்வு நூலை ‘பொன்னர் சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு’ என்ற தலைப்பில், வரலாற்று ஆய்வாளர் பரணன் அவர்கள் எழுதிய நூலை காட்டாறு வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.
500 பக்கங்களில் பெரும் ஆய்வு நூலாக வந்துள்ளது. 50 பக்கங்களில் வண்ணப் படங்களாகவும், 70 பக்கங்களில் கருப்பு வெள்ளைப் படங்களாகவும், மீதம் உள்ள பக்கங்களில் யாரும் மறுக்க முடியாத அளவுக்கு வரலாற்று ஆதாரங்களுடனும், நீதிமன்ற ஆவணங்களுடன் எழுதப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் 44 தலைப்பு களுடனும், இரண்டாம் பாகத்தில் நான்கு தலைப்புகளுடனும் உள்ளது.
கொங்கு மண்டலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பெரும்பான்மை மக்களாகிய கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அண்ணன்மார்சாமியை வணங்குகின்றனர். அதே போல் மற்ற சமூகமாகிய சாணார், வண்ணார், நாவிதர், சக்கிலியர் சமூக மக்களும் வணங்குகின்றனர். இதில் உள்ள வேறுபாடு என்னவென்றால் கொங்கு வேளாளர்கள் பன்றி பலியிடுவதில்லை. மற்ற சமூக மக்கள் வணங்கும் இடங்களில் பன்றி பலியிடும் நிகழ்வு உள்ளது. இந்த விழாக்களுக்கு அடிப்படையாக இருப்பது அண்ணன்மார்சாமி கதைகள்தான். உடுக்கையடிப் பாடல்களாக அண்ணன்மார் கதைகள் 18 நாள் முதல் 30 நாள்வரை நடக்கும். உடுக்கையடிப்பாடல்களின் தொகுப்பே அண்ணன்மார்சாமிக் கதைகள்.
உடுக்கையடிப் பாடல்கள் அனைத்தும் கற்பனையானவை. இட்டுக்கட்டியும், முன்னோர்கள் சொன்னதைச் செவிவழிச் செய்தியாகக் கேள்விப்பட்டதையும் வைத்துப் பாடப்பட்ட பாடல்கள் ஆகும். பிச்சன் என்பவர் தொகுத்த அண்ணன்மார் சாமிக் கதையை, சென்னைப் பல்கலைக்கழகம் ஆய்வு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது.
கற்பனையும், மூடநம்பிக்கையும், ஜாதிவேறுபாடும் நிறைந்த ஒரு நூலை எப்படிப் பாடத் திட்டத்தில் சேர்க்கலாம் என்பது வரலாற்று ஆசிரியர் பரணன் அவர்களின் கோபம் ஆகும். அந்த கோபத்தின் வெளிப்பாடும், இயல்பாகப் பெரியார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்று இருக்கும் சமூகப் பொறுப்பும்தான் அவரை ஒருமிகப் பெரிய ஆய்வுநூலை எழுதத் தூண்டியுள்ளது.
இந்த நூலின் 17ம் பக்கத்தில் ‘வளநாடு – 1’ என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில், “உடுக்கையடிப் பூசாரிகள் பலரையும் வேடிக்கையாக இதுபற்றி கேட்ட போது, 5000 ஆண்டுகள் இருக்கும் என்றனர். தெருக்கூத்துக் கலைஞர்கள் 2000 ஆண்டுகள் என்றனர். உடுக்கைப் பூசாரிகளும் இதையே சொன்னார்கள். இவர்களின் பொய்யையே மாயனூர்க் கோவிலில் எழுதியும் வைத்து விட்டனர்.”
மேற்கண்ட செய்தி பிழையானது என நிருபிக்க நூலாசிரியர் பல்வேறு கல்வெட்டுக் களிலும் சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய ‘பிற்காலச் சோழர் சரித்திரம்’ என்ற நூலையும் ஆதாரமாகக் காட்டி பொன்னர் – சங்கர் கதை நடந்த காலம் கி.பி 1450 – 70 வரை தான் என்று ஆதாரத்துடன் நிறுவி உள்ளார்.
மேலும், பொன்னர் – சங்கர் மற்றும் அவருடைய முன்னோர்களும் நாடுகாவல் அதிகாரியாக இருந்தவர்களே தவிர, மன்னர்கள் அல்ல எனவும் நிருபித்துள்ளார். பொதுவாக புராண இதிகாசங்கள் தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை கற்பனை கலந்து எழுதுவதுதான் இலக்கியம் எனக் கூறித் தாங்கள் எழுதும் பொய்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர். புராணங்களில் காலங்களைக் கணக்கிட ஒரு யுகம், இரண்டு யுகம் என சொல்லுவது போல் உடுக்கையடிப் பாடல் பாடுபவர்களும் தங்கள் எண்ணம் போல் அளந்து விட்டுள்ளனர் என்பதே உண்மை.
இரத்தக்கட்டிகள் என்னும் தலைப்பில் 211 ம் பக்கம் உள்ள கட்டுரையில் “வளநாட்டின் அழிந்த இடங்களில் கருத்த கற்கள் அரை கிலோ, கால் கிலோ எடைகளில் சிதறிக்கிடக்கின்றன. கரும்பழுப்பு நிறத்தில் பொடிக்கற்கள் வரை பரவி உள்ளன. படுகளத்திலும் பாறைகளுக்கு அருகே மேற்குப் பகுதிகளில் கரும்பழுப்புக்கற்கள் பல்வேறு அமைப்புகளில் குவியலாகவும் தனித்தனியாகவும் சிதறிக் கிடக்கின்றன. இதைப் போரிட்டவர்களின் இரத்தக் கட்டிகள் என்று எல்லாரும் எடுத்துப் பார்த்துவிட்டு போட்டுவிட்டுச் செல்கின்றனர்.”
பதினான்காம் நூற்றாண்டில் நடைபெற்ற சண்டையில் சிந்திய இரத்தம் இன்னமும் கற்கட்டிகளாக உள்ளது என்றும், அதை எடுத்துப் பயன்படுத்தக் கூடாது என்பதும், எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. இது மட்டுமல்லாமல் வீரப்பூர் பகுதியில் உள்ள வேட்டுவக்கவுண்டர் மக்களிடையே உள்ள ஒரு மூடநம்பிக்கை என்னவென்றால், வீரப்பூர்த் திருவிழாவில் அம்புவிடும் நிகழ்வில் அம்பு எந்த திசையில் செல்கிறதோ, அந்தத் திசையில் உள்ள வேட்டுவக்கவுண்டர் சமூகத்தில் ஒரு இறப்பு நடக்கும் எனவும் சொல்வார்கள். பக்தி வந்தால் புத்தி போகும் என்று தோழர் பெரியார் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையாக உள்ளது.
பி.சி.ஆர் (பறப்பயல்) என்னும் தலைப்பில் 230 ம் பக்கம் உள்ள கட்டுரையில் பறையர் சமூக மக்கள் ஜாதி ரீதியாக இழிவு செய்யப்படுவதை நூலாசிரியர் ஆதாரத்துடன் விளக்குகிறார். கள்ளழகர் அம்மானையின் பாடல்களில்,
பார்க்கும் அந்த வேளையிலே
பறப்பயலும் ஓடிவந்தான் (பக் 16)
நித்திரை வெறியோடா
நினைவு கெட்ட பறப்பயலே (பக் 51)
அண்ணன்மார் சாமி கதையில் (பிச்சன்)
அடிமைப் பறையனும் ஐயாவே
என்று சொன்னேன் (பக்286)
என்று பாடல் வரிகள் உள்ளது. அப்பட்டமாக ஜாதி வெறியைத் தூண்டும் பாடல்கள் இடம் பெற்று உள்ளது. இது மட்டுமல்லாமல் வேட்டுவர்களையும், பள்ளர்களையும் இழிவுபடுத்தும் பாடல்களும் உள்ளன. இந்த அண்ணன்மார் கதைப்பாடல்கள் 1948 க்கு முன்பு வெள்ளையர் ஆட்சியில் சேலம் மாவட்ட ஆட்சியரால் தடை செய்யப்பட்டது. ஏனெனில் இந்தக் கதையை ஒட்டி இரு சமூகங்களுக்குள் இடையே நடந்த மோதலில் 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதனால் வெள்ளையர்கள் இந்த நூலைத் தடை செய்தனர். ஆனால் நம்மவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக இதைப் பல்கலைக்கழகத்தில் பாடமாகவே வைத்துவிட்டனர். இதை எப்படி பல்கலைக் கழகத்தில் பாடமாக வைக்கலாம்? சட்டப்படி இந்தப் பாடலை பாடமாக வைக்க அனுமதி கொடுத்த பல்கலைக்கழகத் துனைவேந்தர் மீதும் துறைத்தலைவர் மீதும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
நாட்டார் தெய்வங்களும், குல தெய்வங்களும் தமிழர்களின் கடவுள்கள் என்றும் அவர்களுக்கும் ஆரியக் கடவுள்களுக்கும் தொடர்பில்லை எனவும் பல முற்போக்கு அறிஞர்கள் பேசி வருகின்றனர். இந்த நூலில் அண்ணன்மார் கதை இராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளது என்பதையும் நூலாசிரியர் ஆதாரத்துடன் பதிவு செய்கிறார்.
ஆக, எந்தக் கடவுள் கதைகளாக இருந்தாலும் அது ஆரியக் கடவுளாக இருந்தாலும், நாட்டார் தெய்வங்களாக இருந்தாலும் மூடநம்பிக்கை, பொய், ஜாதிய ஏற்றத்தாழ்வு ஆகியவைதான் நிறைந்து கிடக்கிறது என்பதை பொன்னர் – சங்கர் கதை ஒரு சமூகவியல் ஆய்வு என்ற நூலின் மூலம் மறுக்க முடியாத வரலாற்றுச் சான்றுகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தன்னை பெரியார் தொண்டராக கூறிக் கொள்ளும் டாக்டர் கலைஞர் அவர்களும் எந்த விமர்சனமும் இல்லாமல் பொன்னர் – சங்கர் கதையை எழுதியுள்ளதும் அவருடைய சமூகப் பணியில் ஒரு கரும்புள்ளியே ஆகும். தேர்தல் அரசியல் அவரை ஆட்டி வைக்கிறது.
“சாதி வித்தியாசமோ – உயர்வு, தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும், உயர்வு தாழ்வு வித்தியாசம் கொண்ட மடாதிபதிகளை எல்லாம் சிறையில் அடைக்கவேண்டும்.” (பெரியார் சிந்தனைகள், தொகுதி1, பக் 330 ) என்ற பெரியாரின் கருத்துக்களுக்கு ஏற்ப மக்களை மடமைக் குள்ளாக்கும் புராண இதிகாசங்களையும், கற்பனைக் கதைகளையும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி அறிவுள்ள சமூகம் உருவாக அனைத்து முற்போக்காளர்களும் முன்வர வேண்டும்.
நூல் கிடைக்கும் இடம்: சமூக வரலாற்றுச் சங்கம், பெரியாரியல் கலை இலக்கிய ஆய்வு மன்றம், 9/349 யாசிக்கா இல்லம், சி.ஆ.கோயில் சாலை, கரூர் 639001, தொடர்புக்கு- 94436 73252
An attention-grabbing discussion is price comment. I believe that it’s best to write more on this subject, it may not be a taboo subject however usually individuals are not sufficient to speak on such topics. To the next. Cheers http://hellowh983mm.com