அய்யா நம்மாழ்வார் என்கிற புனிதப்பசு!

பிரபாகரன் அழகர்சாமி

இன்று தமிழகத்தின் எந்த ஒரு சிறுநகரத்திற்கு போனாலும் அங்கே நம்மால் இயற்கை அங்காடி என்கிற பெயரில் ஏதாவது ஒன்றை பார்க்கலாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில், தெருவுக்கு தெரு அக்குபஞ்சர் தெரபி, ஹெர்பல் கிளினிக் போன்ற பெயர்களில் ஆயிரக்கணக்கான போலி மருத்துவர்கள் கடை விரித்து வைத்திருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்னால் தடுப்பூசிக்கு எதிரான பரப்புரை தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல பரவி, தமிழக அரசின் இலவச தடுப்பூசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றமுடியாத அளவிற்கு முடக்கியது!

சில நாட்களுக்கு முன்னால், ப்ளாஸ்டிக் அரிசி என்கிற புரளி பெரிய அளவில் பீதியை கிளப்பி மக்கள் சோறு திங்கவே அஞ்சும் அளவிற்கு கொண்டு சென்றது!

இந்த ஆண்டின் துவக்கத்தில், ஜல்லிக்கட்டு என்கிற பிற்போக்குதனமான காட்டு மிராண்டித்தனமான ஒரு விசயத்திற்காக லட்சக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி போராடி தங்கள் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சதவிகித தன்னெழுச்சியைக் கூட நீட் தேர்வு போன்ற முக்கியமான பிரச்சனைக்காக நம்மால் ஏற்படுத்தமுடியவில்லை!

இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், இயற்கை வாழ்வியல் என்கிற பெயரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான போலி அறிவியல் செய்திகள் நம் மக்களிடம் சுழன்றடித்துக்கொண்டிருக்கின்றன. அனைத்துவிதமான ஊடகங்களும் இதற்கு துணை போகின்றன.

அய்யா நம்மாழ்வார்தான் இதற்கு ஆரம்பபுள்ளி என்றோ, அவர்மட்டும்தான் இதற்கெல்லாம் காரணம் என்றோ நாம் சொல்லவில்லை. ஆனால், நம்மாழ்வார் என்கிற ஊதி பெரிதாக்கப்பட்ட, புனிதப்படுத்தப்பட்ட ஒரு பிம்பம், பல விதமான போலி அறிவியல் செயல்பாடுகளுக்கும் ஒரு முகமூடியாகவும், கவசமாகவும் இருந்துவருகிறார் என்பதே நம் குற்றச்சாட்டு!

நம்மாழ்வார் என்கிற தனிநபர் மீது நமக்கு எந்த தனிப்பட்ட விரோதமோ வெறுப்போ கிடையாது. அந்த முதியவர், தான் சரியென நம்பிய ஒரு விசயத்திற்காக தன் வாழ்க்கையை அர்பணித்து வாழ்ந்து மறைந்துப்போயிருக்கிறார். ஆனால், அவர் சரியென நம்பிய விசயங்களில் பெரும்பான்மையானவை மக்கள் விரோத மூடத்தனமான கருத்துகள் என்பதை நாம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

அவர் பேசிய அனைத்து பேச்சுகளிலுமே, மாடெல்லாம் கசாப்பு கடைக்கு போகிறது, மாடெல்லாம் கசாப்பு கடைக்கு போகிறது என்று புலம்பியிருக்கிறார். மாட்டு சாணி, மூத்திரம், ஆட்டுப் புளுக்கை ஆகியவற்றுடன் பால், தயிர், நெய் போன்றவற்றை  கலந்து தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் என்கிற ஒன்றை தின்றால் சகல வியாதிகளும் குணமாகும் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார். ஹீலர் பாஸ்கர் போன்ற மூழுநேர ஏமாற்றுப் பேர்வழிகளையும், ஜக்கி வாசுதேவ் போன்ற மோசடி பேர்வழிகளையும் ஆதரித்து அவர்களுடன் பல நிகழ்ச்சி கலந்துக்கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

மொத்தத்தில் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் காரணமான பல அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்து நிராகரித்தும் எதிர்த்தும் வந்திருக்கிறார். பிற்போக்குத்தனமான, மூடத்தனமான, சாதிய – நிலபிரபுத்துவ சமூக அமைப்பை பாதுகாக்கின்ற விசயங்களை இயற்கை என்கிற பெயரில் ஆதரித்து பரப்புவதை தன் வாழ்நாள் கடமையாக கொண்டு வாழ்ந்து முடித்திருக்கிறார்.

நம்மாழ்வார் விதைத்தது முழுக்க முழுக்க மூடநம்பிக்கைகளை மட்டும்தான்!! இப்படிப்பட்டவரை ஈவு – இரக்கமில்லாமல் விமர்சிப்பதும், அவருடைய மூடத்தனத்தை அம்பலப்படுத்துவதும், மனித சமூக வளர்ச்சியல் அக்கறைக் கொண்ட ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்களும், பெரியாரியவாதிகளும் இதில் கூடுதல் கவனத்துடனும், அக்கறையுடனும், வேகத்துடனும் செயலாற்றவேண்டும். பகுத்தறிவு சிந்தனையும், அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும்தான் பெரியார் நமக்கு காட்டிய வழி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.