பெண்களுக்காக, பெண்களால்… மலையேற்றப் பயணம் தொடரட்டும்

வி.மு.எழில் அமுதன்

இந்தியாவில் – இந்துமதத்தில் பெண்களுக்கு சுற்றுப்பயணம் என்பது மதவாத மற்றும் ஆணாதிக்கச்சிந்தனைகளிள் அடிப்படையில் தடைசெய்யப்பட்ட பண்பாடு. அதுவும் இயற்கையை ரசிக்கவும், இயற்கையிடமிருந்து கற்கவும் என்ற நோக்கத்தில் பெண்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றம் என்பதை பாலின சமத்துவத்தில் அக்கறை கொண்ட அனைவரும் வரவேற்க வேண்டிய ஒரு பண்பாடு.

உழைக்கும் பெண்கள் நாளை முன்னிட்டு, பெண்களுக்காக, பெண்களாலேயே ஏற்பாடு செய்யப்பட்ட குரங்கணி மலையேற்றப் பயணம் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இந்த விபத்திலிருந்து நாம் இன்னும் தெளிவாக, பாதுகாப்பு குறித்து கூடுதலாகத் திட்டமிட்டு, பயணங்களைத் தொடரவேண்டும். குரங்கணியில் பல உயிர்களை இழந்துவிட்டதால் இனி இந்த மலையேற்றப்பயணங்களே வேண்டாம் என அவற்றைத் தடைசெய்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

ரிஷிகேஷ் யாத்திரை, பத்ரிநாத் யாத்திரை, சபரிமலைப் பயணம் போன்றவற்றிலும் இதைவிடப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் பலியாகி உள்ளனர். அதற்காக அந்த மதவாதப் பயணங்களை எந்த அரசும் தடைசெய்ததில்லை என்பதை பல சூழலியலாளர்கள் சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர். மதவாதப் பயணங்களில் கடைபிடித்த அதே அணுகுமுறைகளை, இந்த இயற்கை வாழ்வியல் தொடர்பான, பெண்களின் பயணங்களிலும் கடைபிடிக்க வேண்டும்.

குரங்கணி விபத்திற்குப் பிறகு அதை ஏற்பாடு செய்த எந்த அமைப்பானாலும் துவண்டுவிடாமல், தொடர்ந்து அரசை அணுகி, தடைகளைத் தகர்த்து மீண்டும் மலையேற்றப்பயணங்களைத் தொடர வேண்டும் என்பதே காட்டாறு குழுவின் பேராசை. காட்டாறு குழு குழந்தைகளுக்காக இப்படி மலையேற்றங்களை நடத்தியுள்ளது. ஆனால், பெண்களால் பெண்களுக்காக என்ற அளவில் ஒரு மலையேற்றத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இந்த 2018 கோடை விடுமுறையில் உறுதியாகப் பெண்களுக்கான மலையேற்றத்தை காட்டாறு ஏற்பாடு செய்யும். எந்தப் பகுதியில் அனுமதி கிடைக்கிறதோ அந்தப் பகுதியில் நடத்தும்.

குரங்கணி மலையேற்றம் மற்றும் சி,டி,சி அமைப்புகள் தொடர்பாக இந்தியா முழுவதும் மலையேற்றப் பயணங்களில் ஈடுபட்டுவரும் நமது தோழர் எழில் அமுதன் ஒரு விரிவான கட்டுரையை வழங்கியுள்ளார், அவசியம் தொடர்ந்து படியுங்கள். – காட்டாறு.

எழில் அமுதன்

பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னை ட்ரெக்கிங் குழு சார்பாக தேனியில் உள்ள குரங்கனி மலையில் ட்ரெக்கிங்கிற்கு நிஷா தமிழ்ஒளி மற்றும் திவ்யா இருவரும் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்தனர். இவர்கள் இருவரும் ட்ரெக்கிங்கில் முன் அனுபவம் கொண்டவர்கள். மேலும் இவர்களுடன் முன் அனுபவம் கொண்ட விபின் மற்றும் அருண் சென்றனர். மொத்தம் 27 நபர்கள் 2நாள் ட்ரெக்கிங்காக சென்றிருந்தனர். உடன் வழிகாட்டி ஒருவரும் சென்றிருந்தார்.

மார்ச் 10 காலை ட்ரெக்கிங் குழு, வன சோதனை சாவடியில் அனுமதி சீட்டை உரிய தொகை செலுத்தி பெற்றுக்கொண்டு புறப்பட்டது. அந்த ட்ரெக்கிங் பாதை உள்ளூர்வாசிகள் அடிக்கடி உபயோகிக்கும் பாதை. அன்று செல்லும் போது தீ குறித்த எந்த அறிகுறிகள் தென்படவில்லை. அவர்கள் ட்ரெக்கிங் செய்து மாலை அங்குள்ள கொழுக்குமலை தேயிலை தோட்டத்தில் அன்றிரவு தங்கினர். பின்னர் மறுநாள் மதியம் மலையில் இருந்து கீழே அதே பாதையில் இறங்க ஆரம்பித்தார்கள். 

அங்குள்ள மலையடிவார கிராமவாசிகள் அறுவடை செய்த பின்னர் இருந்த காய்ந்த புல்லை எரித்துள்ளனர். காற்று பலமாக வீசியதில் தீ மலையில் மேல்நோக்கி பரவியுள்ளது. தீ அவர்களை சூழ்ந்து பரவியது. வேறு வழியை தேர்தெடுக்க முடியாத அளவிற்கு தீ பரவியுள்ளது. பின்னர் வன பகுதி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கப்பட்டது. 

அருண் மற்றும் விபின் இருவரும், அனைவரையும் காக்க முயற்சித்து இறுதியில் இறக்க நேரிட்டது. இருவரும் இந்தியா முழுதும் ட்ரெக்கிங் சென்றவர்கள். உயிர்காக்கும் உத்திகள் தெரிந்தவர்கள். பெண்களுக்கு மனதிடம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு பெற பெண்கள் தின நாளில் ஒருங்கிணைக்கப்பட்ட ட்ரெக்கிங் இது. 

சென்னை ட்ரெக்கிங் குழு

இது 10 வருடமாக செயல்பட்டு வருகிறது. பெல்ஜியமில் இருந்து வந்து சென்னையில் பணி புரிந்த பீட்டர் வான் கெயிட் இக்குழுவை ஆரம்பித்தார். இக்குழு மாரத்தான் போட்டிகள், மரம் நடுதல், இரத்த தானம், சுற்றுச்சூழல் தூய்மை உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகளை அக்குழுவில் உள்ள இணைந்துள்ள நண்பர்கள மூலம் செய்து கொண்டிருக்கிறது. வருடா வருடம் சென்னை கடற்கரை தூய்மை தினத்தை கடந்த 8 வருடமாக செய்து வருகிறது.ஒவ்வொரு வருடமும் 10,000 அதிகமானோர் அதில் பங்கு கொள்வர். 50டன் குப்பைகள் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தபடுகிறது மரம் நடுதல் மற்றும் அதனை பாதுகாத்தலை ஐந்திணை என்ற கிளை குழு செய்கிறது. இரத்தம் மற்றும் உடனடி தேவைகளை சென்னை ரெட் நைட்ஸ் குழு செய்கிறது. 2 மாதத்திற்கு ஒருமுறை இரத்ததானம முகாம் நடத்தப்படும். சென்னை ட்ரெக்கிங் முகநூல் குழு 40,000 உறுப்பினர்கள் கொண்டது.

இதில் இணைவதற்கு எந்த கட்டணமும் இல்லை. சென்னை ட்ரெக்கிங் குழுவின் ஐந்திணை இதுவரை 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு அதனை பாதுகாத்து வருகிறது. 2015 சென்னை வெள்ளத்தில் பல மீட்பு பணிகளை செய்துள்ளது. மேலும் இதுவரை அடையார் ஆற்றில் 300 முறை சுத்தம் செய்யும் பணியை தன்னார்வலர்கள் உதவியுடன் செய்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் 4000 இரத்ததான முகாமை நடத்தியுள்ளது.

சென்னை ட்ரெக்கிங் குழுவில் தன்னார்வலர்களில் அனுவமிக்கவர்கள் மூலம் ட்ரெக்கிங் குழு செயல்படுகிறது. ட்ரெக்கிங்கிற்கு ஆகும் செலவு அதில் பங்கெற்போரிடம் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதன் மூலம் எந்த இலாபமும் ஈட்டப்படுவதில்லை. ஒவ்வொரு ட்ரெக்கிங் முன்னர் அதில் உள்ள சவால்களை விளக்கி அவர்களின் கையொப்ப அனுமதி மற்றும் வன அனுமதி பெற்று அழைத்து செல்லப்படுவார்கள். மாராத்தான் செலவுகள் மீதமுள்ள தொகை மூலம் திருவள்ளூர் மாவட்டம் புலிகேட்டில் 200+ மாணவர்கள் பயிலும் பள்ளி சீரமைக்கப்பட்டுள்ளது. சென்னை சீனிவாசபுரத்தில் மக்கும் குப்பை மக்காத குப்பை குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வீடு தோறும் இரு குப்பை தொட்டி வழங்கப்பட்டது. விரிவாக அதன் செயல்பாடுகளை காணலாம்.

PETER என்கிற ஒற்றை பெயர், என்னை போல் பல நபர்களை இயற்கையின் மீது காதல் வயப்பட வைத்திருக்கிறது. இவர் ஒருவன் மட்டும் இல்லையெனில், பல பேர் இந்த இயந்திர தனமான வாழ்கையில் மூழ்கி தனது காலங்களை கழித்து கொண்டு இருப்பர். இவர் இந்த இயற்கையின் மீது கொண்ட தீராத காதலால் உருவானதுதான் Chennai Trekking Club – CTC. பெயரில் club என்று வருவதனால் என்னவோ பல பேர் இது ஒரு சுற்றுலா சம்மந்தமான ஏற்பாடுகளை அமைத்து தரும் நிறுவனம் என்று எண்ணி விட்டார்கள் போல. CTC என்பது ஒரு நிறுவனம் அல்ல அது சுயநலமற்ற தன்னார்வலர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு என்று தான் சொல்ல வேண்டும், இன்னும் சொல்லப்போனால் அது ஒரு குடும்பம். அந்த குடும்பம் இந்த சமுதாயத்துக்கு செய்தவை எண்ணில் அடங்காதவை. அவற்றை எனக்கு தெரிந்த மட்டிலும் பட்டியல் இடுகிறேன் இங்கே,

 1. Chennai Coastal Cleanup

மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்று மார் தட்டி சொன்னவர்கள், இல்லை சொல்ல நினைக்கும் எத்தனை பேர், அதனை சுத்தம் செய்ய தங்கள் கரங்களை அழுக்கு ஆக்கியிருப்பீர்கள்? மெரினா தொடங்கி அக்கரை வரை உள்ள 16-20KM கடற்கரையை வருடம்தோறும் சுத்தம் செய்வது இந்த CTC தான். சுத்தப்படுத்துவது என்றால் விளம்பரத்துக்காக செய்பவர் போல் அல்லாமல், கிட்டத்தட்ட 6000-8000 வரை தன்னார்வலர்கள் கொண்டு 50TON வரை குப்பைகளை சேகரித்து இருக்கிறது CTC. சேகரிப்பதோடு பணி முடிவடைந்துவிடாது, சேகரித்த குப்பையை மறுசுழற்சி செய்ய பிரித்து வைத்து அதை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு சேர்ப்பது வரை அணைத்து வேலையும் CTC தன்னார்வலர்கள் தான். 20KM கொண்ட கடற்கரையை 8000 நபர்கள் கொண்ட குழுவால் சுத்தம் செய்வதென்பது ஒரே நாளில் நடத்த கூடிய விசயம் அல்ல. இதற்கு எவ்வளவு திட்டமிடலும் முன்னேற்பாடுகளும் இருக்க வேண்டும் தெரியுமா! இது என்னவோ ஒரு ஆண்டோ இல்லை இரு ஆண்டோ CTC செய்த காரியம் அல்ல, தொடர்ந்து எட்டு ஆண்டுகள் செய்திருக்கிறது. ஒன்பதாவது ஆண்டாக இந்த வருடமும் அது நடக்கும்.

 1. Ainthinai

CTC இயற்கையின் மீது கொண்ட தீராத அன்பாலும் அதை காப்பாற்றும் நோக்கிலும் உருவாக்கியது தான் இந்த பச்சை சிறகு முளைத்த சிட்டுக்குருவி. இந்த அமைப்பால் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பள்ளி, நெடுஞ்சாலை, மயானபூமி, ஏரி குளம்களில் மரம் வைக்கப்பட்டு இருக்கிறது. மரம் வைப்பதோடு இதன் கடமை நின்றுவிடுவதில்லை. நட்ட மரத்தை பேணி காத்து அது வளர்ந்து தன்னிலை அடையும் வரை அதற்கு தேவையான அணைத்து பராமரிப்புகளையும் செய்வது CTC. இதுவரை இவர்களால் 25000+ அதிகமான மரங்களை நட்டு அதில் 80% உயிர் பிழைக்க வைத்து இருக்கிறார்கள்.

 1. Chennai Red Knights

இந்தியாவில் பெரும்பாலும் தானம் அளிக்கும் ரத்தம் கடைசியில் காசுக்காக விற்கப்படுகிறது. அதை தடுக்கும் நோக்கிலும், ரத்தம் தானம் செய்பவருக்கு சரியாக வழிகாட்டவும் CTCயில் தொடங்கப்பட்டதுதான் இந்த அமைப்பு. சென்னை வெள்ளம் ஏற்பட்டு டெங்கு தாக்கி ரத்தம் தேவைப்பட்ட போதும், உயிர்க்கு போராடும் அவசர நிலையிலும், கோடைகால ரத்த தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையிலும் , மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளில் ரத்த வங்கிக்கு தேவையான ரத்தம் அளிப்பதற்கு தேவையான முகாம்களை நடுத்துவதும் இதே CTC தான். இதுவரை இவர்களால் 44 முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 12000 உயிர்களை காக்க வல்ல 4000 யூனிட்கள் ரத்தம் அளித்ததும் இதே CTC தான்.

 1. Zero kuppai

வருடம் முழுதும் அடையார் ஆற்றை [சீனிவாசபுரம், Theoshophical Society] சுத்தம் செய்வதனாலும் சரி, சுமார் 600 குடும்பம் வாழும் நொச்சிக்குப்பம் போன்ற பகுதியில் பிளாஸ்டிக் குப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு குப்பையை தனித்தனியாக பிரித்து வைப்பது பற்றியும் முகாம்கள் நடத்தி அதற்கு தேவையான குப்பை தொட்டிகளையும் வழங்கி அதன்பின் தொடர்ச்சியாக அதை கண்காணிப்பதும் அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் இதே CTC தன்னார்வலர்கள் தான்.

 1. Marathon

மராத்தான் போன்ற தொடர் ஓட்டங்களை நமது தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியதோடு இல்லாமல், வருடந்தோறும் பல இடங்களில் மாரத்தான் எனும் தொடர் ஓட்டத்தை நடத்துவதும் இதே CTC தான். அவற்றில் சில முக்கியமான தொடர் ஓட்டங்கள் இவை,

 1. Javathu Hill Ultra
 2. Chennai Trail Marathon
 3. Kodai Hill Ultra

இவற்றில் பங்கு பெற வசூலிக்கப்படும் கட்டணத்தில், செலவு போக மீதமுள்ள பணத்தை ஐந்திணை செயல்களுக்கும், மிகவும் பின் தங்கிய இடத்தில் இருக்கும் பள்ளிக்கு கழிவறை போன்ற வசதி அமைத்துதரவும் கொடுக்கப்படுகிறது. மேலே சொன்ன தொடர் ஓட்டத்தில் பங்கு பெற்ற ஒருவரையேனும் கேட்டு பாருங்கள் CTCயை பற்றியும் அதன் தன்னார்வலர்களை பற்றியும்.

 1. Triathlon

எங்களை விமர்சித்த பலருக்கு இந்த பெயரை கேட்பது இதுவே முதல் முறையாக கூட இருக்கலாம். இது தொடர் ஓட்டம் போல் அல்லாமல் சற்றே வித்தியாசமான ஒன்று. நீச்சல், சைக்கிள், ஓட்டம் இப்படி மூன்று கட்டமாக நடக்கும் போட்டி. ஒலிம்பிக்கில் மட்டுமே பார்த்து வியந்த இது மாதிரியான போட்டிகளை இங்கே சென்னையில் அறிமுகம் செய்துவைத்ததோடு நில்லாமல் அதை வருடம் தோறும் நடத்தி வருவதும் இதே CTC தான்.

 1. Trekking

காடுகள் மேல் காதல் கொண்டவர்கள் ஒரு குழுவாக இணைந்து நல்ல பரிட்சயமான காடுகளுக்குள் பயணம் செய்து, இந்த இயந்திர தன்மையான வாழ்கையை விட்டு இயற்கையோடு சேர்ந்து வாழ வழி வகுத்து தருவதும் இதே CTC தான்.

 1. Biking

காடுகளை போல் தமது பைக்கின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு குழுவாக இணைந்து பயணம் செய்வதற்காக தொடங்கப்பட்டது. இது நீங்கள் தினம் தோறும் தெருக்களில் காணும் பந்தயம் போன்று இருக்கும் என்று எண்ணிவிடாதீர்கள். மிகவும் கட்டுகோப்பாக சாலை விதிமுறைகளை பின்பற்றி நடக்கும் பயணம். இதில் பங்கு பெற முழு தலை கவசம், உடல் மற்றும் கால் கவசம், கையுறை, கால்களை முழுதும் காக்கும் வண்ணம் அமைந்த காலணிகள் அவசியம்.

 1. Photography

மற்ற விசயங்களை போலவே, புகைப்பட விரும்பிகள் ஒரு குழுவாக இணைந்து சென்னையை சுற்றி உள்ள இடங்களிலோ, வெளி ஊரில் உள்ள இடங்களுக்கோ சென்று புகைப்படம் எடுக்க வழி செய்ய தொடங்கப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தனக்கு தெரிந்த விசயங்களை பரிமாறிக்கொண்டு இந்த நிஜ உலகை தங்கள் கேமராவில் நிழல் உலகாக படம் பிடித்து திரியும் குழு.

 1. Natural Disaster:

 சென்னை வெள்ளத்தின் போது அரசு மற்றவர்களுக்கு உதவி செய்யும், நான் பிழைத்தால் போதும் என்று எண்ணாமல் தன் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றியதும் இவர்கள் தான். வெள்ளம் வடிந்து போனதும், இந்த சென்னை தெருக்களில் சேர்ந்து கிடந்த குப்பைகளையும் கழிவுகளையும் கண்டு நீங்கள் மூக்கை பிடித்து கொண்டு கடந்து செல்கையில் அந்த சாக்கடைக்குள் இறங்கி சுத்தப்படுத்தியது இதே CTC தான். அதோடு மட்டும் நில்லாமல், தமது வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்த மக்களுக்கு, மீண்டும் அவர்களுக்கு புனர்வாழ்வு அமைத்து கொடுத்ததும் இதே CTC தான். vartha புயல் தாக்கியபோதும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து, கீழே விழுந்த மரங்களை மீண்டும் நடவு செய்து அதற்கு புத்துயிர் அளித்ததும் இதே CTC தான்.

நான் பட்டியல் இட்ட விசயங்கள் அனைத்தும் நான் அறிந்தவை, இதில் இன்னும் கூட சில விசயங்களை நான் தவறவிட்டு இருக்கலாம். CTCயில் எந்த ஒரு விசயமும் இந்த இயற்கையை சார்ந்தும், சக மனிதன் ஆரோக்ய வாழ்வு வாழவும், நமது எதிர்கால சந்ததி வாழ வழி செய்யும் நோக்கிலும் நடத்தப்படுபவை. CTCயில் நடத்தப்படும் எந்த ஒரு பயணத்திலும் இறுதியில் செலவு கணக்கு அதில் பங்கேற்ற நபர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அந்த பயணத்தில் வரும் ஒரு நபர் தானாக முன்வந்து அந்த கணக்குகளை பார்த்து கொள்வார். அந்த பயணத்தில் பங்கு பெற்ற அனைவரும், அந்த நிகழ்வில் செலவாகும் தொகையை தங்களுக்குள்ளாகவே சமமாக பிரித்து பகிர்ந்து கொள்வர். இது தான் CTC செயல்படும் விதம். இங்கு அனைத்துமே தன்னார்வலர்கள் தான்!

மலையேற்றத்தின் அவசியம் : 

 1. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும்

 

 1. மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து விடுபட,

 

 1. புதிய சவால்களை எதிர்கொள்ள

 

4.இதய தசைகளை வலுப்படுத்த

 

 1. புதிய நட்பு வட்டங்களைப் பெற

 

6.ட்ரெக்கிங் செல்லும் இடத்தின் கலாச்சாரம் மற்றும் தட்பவெப்பநிலை அறிய

 

7.எலும்பு மற்றும் உடல் எடை கட்டுக்குள் வைக்க

 

8.இயற்கை அழகை கண்டு இரசிக்க

 

நன்றி!

 

அன்புடன் எழில் அமுதன் 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.