“குஷ்பு கோவிலும் கண்ணகி சிலையும் ஒன்றுதான்”

குஷ்புவுக்கு கோவில் கட்டியதற்கும் கண்ணகிக்குச் சிலை வைத்ததற்கும் எந்த வேறுபாடும் இல்லை. குஷ்பு என்பவர்கூட உயிரோடு நம்மிடையே வாழ்ந்து வருபவர். அப்படி ஒரு உயிர் வாழ்வதற்கு ஆதாரம் இருக்கிறது. ஆனால் கண்ணகி என்பவரோ, கோவலன் என்பவரோ வாழ்ந்ததற்கான ஆதாரம் என்ன? பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள – வாழும் ஒரு கதாநாயகிக்குக் கோவில் கட்டியதைவிட, இல்லாத ஒரு கற்பனைக் கதா நாயகிக்குச் சிலை வைப்பதும், அந்தச் சிலையை முன்வைத்து அரசியல் நடத்துவதும் மிகவும் கேவலமான – அறிவுக்குப் பொருந்தாத செயலாகும்.

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும் – கண்ணகி பக்தர்களின் செயல்களையும் தமிழ்நாட்டில் உள்ள பெரியார் தொண்டர்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். 1968 இல் கண்ணகிக்குச் சிலை வைத்ததற்காக அண்ணா, கலைஞர் ஆகியோரையும் அதன்பிறகு அந்த சிலையை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த்தேசிய அமைப்பினர் அனைவரின் செயல்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நேரத்தில் கண்ணகியைப் பற்றியும், அவரைக் கதாநாயகியாக்கி எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தைப் பற்றியும் பெரியார் என்ன பேசினார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பெரியாரின் கட்டுரை தனியாக வெளியிடப் பட்டுள்ளது. படியுங்கள். பரப்புங்கள். – காட்டாறு 2015 மே இதழ்

கண்ணகிக்குச் சிலை வைத்தது பெண்களைக் கேவலப்படுத்துவதாகும்!

பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருப்பதற்கென்றே பிறப்பிக்கப்பட்டவர்கள். அவர்கள் உரிமையோடு ஆண்களுக்குச் சமமாக வாழக் கூடாதவர்கள் என்பதை வலியுறுத்தத் தான் நம்முடைய இலக்கியங்கள் என்பவைகள் இருக்கின்றன.

நம் அரசு கண்ணகிக்குச் சிலை வைத்தது நம் சமுதாயத்தை – குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டேன். ஏன் இப்படிக் குறிப்பிடுகின்றேன் என்றால், எதற்காக ஒரு பெண், தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் போனதற்காக உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்க வேண்டும்? இது மடத்தனத்தைக் காட்டுகிறதே தவிர, கற்பைக் காட்டுவதாக இல்லை.

எந்த ஆணும் தன் மனைவி இன்னொருவனுடன் சென்றுவிட்டாள் என்பதற்காக எவனாவது உணவருந்தாமல், பாயில் படுக்காமல் இருக்கின்றானா? இருந்திருக்கின்றானா? என்றால் கிடையாது. மனைவிக்குக் கொஞ்சம் உடல் நிலை நலம் இல்லை என்று தெரிந்தாலே ஆண்கள் வேறு பெண்ணைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். கண்ணகிக் கதை பெண்களை மடைச்சியாக்கப் பயன்படுமே தவிர, அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாது.

தமிழகத்தில், கற்புடையவள் கண்ணகி – அவளைப் பின்பற்றி அவளை வழிகாட்டியாகக் கொண்டு பெண்கள் வாழ வேண்டும் என்றால், தமிழகத்திலிருக்கிற மூன்று கோடி பெண்களில் கண்ணகி ஒருத்தி தான் கற்பு உடையவள் என்றால், மற்றப் பெண்கள் எல்லாம் விபசாரிகள் என்பதுதானே பொருள். இதை மானமுள்ள எவனும், அறிவுள்ள எவனும் ஒத்துக் கொள்ள முடியாதே. எதற்காக ஒரு பெண் ஆணிற்கு அடிமையாக இருக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.

( 09.03.1969 அன்று பூதலூரில் நடைபெற்ற திருமணத்தில் தோழர் பெரியார் அறிவுரை – ‘விடுதலை’,17.03.69)

1 Comment

 1. குஸ்ப்புக்கு கோவில் கட்டியது சரியாம்.கண்ணகிக்கு கோவில்(சிலை) கட்டியது தவறு. இது தான் திராவிட அறிவாளிகளின் இலட்சனம்.
  ஐம்பெரும் காப்பியங்களில் இப்பொழுது
  இருக்கும் சாட்சியே கண்ணகி கோயிலே கண்ணகி,கோவலன், மாதவி, மாசாத்துவன்,வாழ்ந்ததுக்கான ஆதாரம் கேட்பது இளங்கோவையும் பாண்டிய
  சோழ,சேர மூவேந்தரையும் புறக்கணிப்பதே, சத்திரிய வைசிய சண்டையாக மட்டும் சிலப்பதிகாரத்தை பார்க்கும் வந்தேறி
  (அ) (Immigrant) குடியேறி திராவிடர்களுக்கு தெரியாது ஆதாரம்.
  ஆதாரம் பின்வருமாறு இரண்டாம் தமிழ்ச்சங்கம் மலர்ந்த கபாடபுரமும், காவிரிப்பும்பட்டினமுமாகும். தமிழர்கள், வானவியல் அறிவில் சிறந்து விளங்கிய இடமாகிய பூம்புகார் “சக்கரவாளக்கோட்டம்” என்ற பெயரோடு அழைக்கப்பட்டு வந்தது. பண்டையத் தரவுகள் மற்றும் இலக்கியச் சான்றுகள் இவற்றின் அடிப்படையில் சக்ரவாளக்கோட்டம் எனப்படும் பூம்புகார் நாகரீகமானது 10,000 ஆண்டுகளுக்கு மூத்த நாகரீகமாக இருப்பதோடு அல்லாமல் சிந்துசமவெளி மற்றும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ நாகரீகத்திற்கு முந்தைய நாகரீகமாகும். இத்தகைய தொன்மம் வாய்ந்த நாகரீகம் கடலினுள் கிடப்பதை முதன் முதலில் இங்கிலாந்தை சேர்ந்த கிரஹாம் ஹான் காக் என்ற கடலாய்வு அறிஞர் கொச்சின் தேசிய கடலாய்வு மையத்தின் உதவியோடு 1990-1993 வரை ஆய்வு செய்து பல தடயங்களைக் கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்தார். அவரின் தொடர் கடலாய்விற்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை. கடலாய்விற்கு தேவையான நிதி இல்லை என்று மத்திய அரசு சொன்ன பிறகு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘சேனல் 4’ என்ற தொலைக்காட்சி நிறுவனமும், அமெரிக்க ‘’லர்னிங் சானல்’ என்ற தொலைக்காட்சி நிறுவனமும் இணைத்து பொருளாதாரத்தை திரட்டி மத்திய அரசின் ஒப்புதலோடு 2001 இல் கடலாய்வு செய்தது. அவற்றில் மிகப்பெரிய மாடமாளிகை கொண்ட, பெரிய பரப்பளவினை உடைய பெருநகரம் மண்ணில் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டது. தாங்கள் கண்டறிந்ததை இரண்டு தொலைக்காட்சி நிறுவனமும் வெளியிடவே உலகக் கடலாய்வாளர்களின் கவனம் பூம்புகாரை நோக்கி திரும்பியது. இதனைக் கவனித்த இந்திய அரசானது தமிழினப் பகையுணர்ச்சியால் வெளிநாட்டு கடலாய்வு அறிஞர்கள் பூம்புகாரில் கடலாய்வு செய்வதற்கு கோரிய அனுமதியையும், பயண குடியுரிம அனுமதியையும் இன்றுவரை வழங்க மறுக்கிறது. மேலும், பூம்புகார் கடலாய்விற்கு போதிய நிதியில்லை என்று திட்டத்தையும் கிடப்பில் போட்டது. தஞ்சையில் உள்ள கரந்தை புலவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் ஐயா கோவிந்தராசனார். சிலப்பதிகாரத்தை முறைப்படி கற்று, கண்ணகி பயணித்த பாதையை சரியாக கண்டுபிடிக்கும் நோக்கில், பேராசிரியர் பணியில் கிடைத்த வருமானம் மட்டுமின்றி, தனது குடும்ப சொத்துக்களை விற்று ஏறக்குறைய 17 வருடங்கள் கடல் முதல் காடுகள் வரை நடந்தே சென்று, தனது வாழ்நாளில் 33 வருடங்கள் ஆய்வினை மேற்கொண்டு கண்ணகி பயணித்த வழித்தடத்தை இலக்கிய ஆய்வுகள் மற்றும் பயணித்த இடங்களில் கிடைத்த தடயங்கள் மூலமாக ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் கோவிந்தராசனார். அவருடைய ஆவணம் போதுமா அல்ல்து மேலும் ஆதாரம் தேவையா வேண்டும் என்றால் தருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published.