மகள் தலைமையில் தாய்க்கு ஜாதி மறுப்புத் திருமணம்!

Kanimozhi-Sathyaseelan 03.07.2017

திருச்சியில் பேராசிரியராகப் பணியாற்றுபவர் கனிமொழி. மணவிலக்குப் பெற்றவர். ‘மயூரி’ என்ற பெண் குழந்தைக்குத் தாய். திருச்சியில் Event Management தொழில் நடத்தி வருபவர் குளித்தலையைச் சேர்ந்த சத்தியசீலன். திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். இருவரும் காட்டாறு இதழ் குழுவுடன் தொடர்பில் இருப்பவர்கள். காட்டாறு ஏடு வளரத் துணைபுரிபவர்கள். இந்த ஒற்றுமை அவர்களை வாழ்விலும் இணைத்தது.

கரூரில் வசிப்பவர் Geologist மோகன்தாஸ். அவர் சத்தியசீலனுக்கு நெருங்கிய நண்பர். அவரும் காட்டாறு ஆதரவாளர். அவரிடம் சத்தியசீலன், தனக்கு வாழ்க்கைத் துணை தேவை என்பதைத் தெரிவித்து, தனக்கு வரும் துணைவர் வேறு சாதியில் தான் இருக்க வேண்டும். குறிப்பாக, மணவிலக்குப் பெற்றவர் அல்லது துணையை இழந்தவராக இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார். தோழர் மோகன்தாஸ் திருச்சி பேராசிரியர் புரட்சிக்கொடியை அணுகினார். இப்படித்தான் கனிமொழி – சத்தியசீலன் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் உருவாகியது.

இத்திருமணத்தில் சாதி, மதச் சடங்குகள் பலவற்றை முற்றிலுமாகத் தவிர்த்தனர். பார்ப்பனரை அழைக்கவில்லை. மேடையில் எந்த ஜாதி, மதச் சடங்குகளும் நடத்தப்படவில்லை. சுயமரியாதைத் திருமணங்களில் தலைவர்கள் உரையாற்றுவதைப் போல, கருத்துரைகளும் இல்லை. மைக் வைக்கப்படவே இல்லை. வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தைக்கூட மணமக்கள் அவரவர்களே படித்துக்கொண்டனர். மாலைகளை எவரும் எடுத்துக் கொடுக்கவில்லை. அவரவர்களே எடுத்து சூடிக்கொண்டனர். இந்தத் திருமணம் எப்படி நடக்கப் போகிறது என்பதை 2 நிமிடத்திற்குள் தோழர் தாமரைக்கண்ணன் விளக்கிப் பேசினார். மொத்தம் 5 நிமிடத்திற்குள் திருமண நிகழ்வுகள் இனிதே முடிவடைந்தன.

இந்தத் திருமணத்திற்கு மணமக்கள் இருவரின் பெற்றோர், குடும்பத்தினர், அவர்களது உறவினர்கள், அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்பைக் கொடுத்தனர் என்பது மிகவும் முக்கியமானது. கனிமொழியின் மகள் மயூரி மிகவும் மகிழ்வுடன் தொடக்கம் முதல் இறுதி வரை மேடையிலேயே இருந்தார். இதுபோல, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்படும் ஜாதிமறுப்புத்திருமணங்கள் காட்டாறு குழுவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

திருமணங்களில் நேரம், பணம் போன்றவற்றை வீணாக்க வேண்டாம். பார்ப்பனரை அழைத்து – ஜாதி, மதச் சடங்குகளை நடத்தி நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்ள வேண்டாம். திராவிடர் இயக்கத் தலைவர்களை அழைத்து அவர்களது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்க வேண்டாம். நம் தலைவர்கள், திருமணங்களுக்கு வந்து ஒப்பந்தங்களைப் படித்துக்காட்டிவிட்டுச் செல்வதற்காக, நேரத்தையும், பணத்தையும் செலவழித்து வருகிறார்கள். அந்த நேரம் அவர்களுக்குப் படிப்பதற்கோ, எழுதுவதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ பயன்படும். திராவிடர் இயக்கத் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவசியம் தலைவர்கள் நம் வீட்டுத் திருமணங்களில் பங்கேற்க வேண்டும் என்றால், வீடியோ கான்ஃபரன்ஸில்கூட பங்கேற்கலாம்.

பகுத்தறிவற்ற பக்தர்களின் திருப்பதி லட்டுகூட ஆன்லைனில் கிடைக்கிறது. சபரிமலை தரிசனம் ஆன்லைனில் புக் ஆகிறது. சிறைக்கைதிகளுக்குக்கூட வீடியோ கான்ஃபரன்சில் விசாரணைகள் நடக்கிறது. பகுத்தறிவாளர்கள் மட்டும் தலைவர்களைத் தொல்லைப்படுத்தி வருகிறோம். நாமும் மாறுவோம். சமுதாயத்தையும் மாற்றுவோம். சாதி, மதம், இனம், ஆடம்பரம் அனைத்தையும் தவிர்ப்போம். பார்ப்பான் புகை போட்டு விரட்டுவான். நாம் பேசிப்பேசியே விரட்டுவோம். இரண்டையும் தவிர்ப்போம். செயல்படுத்திக் காட்டுவதைவிடச் சிறந்த பரப்புரை வேறு எதுவும் இல்லை. கனிமொழி – சத்தியசீலன் இணையருக்கு வரும் 09.07.17 ல் திருச்சியில் வரவேற்பு. வாய்ப்புள்ளவர்கள் வரலாம். வேறு முக்கியப் பணிகள் இருந்தால் அதற்கு முதலிடம் கொடுத்து, தொலைபேசியில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.