இழப்பிலும், மகிழ்விலும் திராவிடர் பண்பாட்டைச் செயல்படுத்தும் இணையர்

தாராபுரம் பூங்கொடி – பெரியகுளம் குமரேசன்

செப்டம்பர் 17. தோழர் பெரியாரின் பிறந்தநாள். பெரியாரியல் என்பது ஏதோ ஒரு நாள் ஞானஸ்நானம் பெற்று விட்டு, வீட்டிற்கு வந்து தன் ஜாதியையும், இந்துமதச்சடங்குகளையும் தவறாமல் பின்பற்றும் முறையோ – புத்த மதத்தில் சேர்ந்து விட்டேன், தம்மம் ஏற்றுவிட்டேன் என்று கூறிவிட்டு, சொந்த வாழ்க்கையில் இந்துமத வாழ்வியலைத் தவறாமல் பின்பற்றும் முறையோ அல்ல. பிறப்பு தொடங்கி இறப்பு வரையும் இந்து மதம் உருவாக்கியுள்ள அனைத்து பண்பாடுகளுக்கும் எதிரான திராவிடர் பண்பாட்டைச் செயல் படுத்திக் காட்டுவதே பெரியாரியலின் தனித் தன்மை.

‘சொல்லுக்கு முன் செயல்’ என்பார்கள். அது போல, எந்த ஒரு கொள்கையையும் பேசிக் கொண்டிருக் காமல், தம் வாழ்க்கையிலேயே முன்மாதிரியாகச் செய்து காட்டுவதும், வாழ்ந்து காட்டுவதும் பெரியாரியல் தான். அந்த வகையில் இலட்சக்கணக்கான பெரியார் தொண்டர்கள் தங்களது வாழ்க்கையிலேயே இந்து மதப் பண்பாடுகளுக்குச் சாவு மணி அடித்துள்ளனர். அவர் களில் பலரை ‘காட்டாறு’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இதழில் ஜாதி-தாலி-சடங்குகள் மறுப்பு மறு மணம் செய்து கொண்ட தோழர்களின் அறிமுகம்.

என் பெயர் பூங்கொடி, ஊர் தாராபுரம். எனக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பியும் இருக்கிறார்கள். எனது பெற்றோர்கள் காதலித்து ஜாதி மறுப்புத்திருமணம் செய்தவர்கள். தந்தை வயோதிகம் காரணமாக ஒரு வருடத்திற்கு முன் இறந்துவிட்டார். அம்மா என்னுடன் தான் இருக்கிறார்.

முதல் திருமண வாழ்க்கை: விடுபட முடியாத கொடூரம்

எனது முதல் திருமணம் 17 வயதில் எனது விருப்பமில்லாமல், பெற்றோரின் வற்புறுத்தலால் நடத்திவைக்கப்பட்டது. எனது படிப்பும் பாதியில் நின்றது. நின்றது படிப்பு மட்டுமல்ல, எனது கனவு களும்தான். திருமண வாழ்க்கையும் படு கொடூரமாக இருந்தது. அனுபவித்த கொடுமைகளுக்கு அளவில் லாமல் போய்விட்டது. அக்கொடுமையிலிருந்து விடு படவும் முடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்த வறுமையின் காரணமாக எனது வலிகளைச் சகித்துக் கொண்டேன்.

தினமும் சண்டையும், சச்சரவுமாக ஐந்தாறு வருடங்கள் ஓடிவிட்டன. அந்தத் திருமண வாழ்க் கையில் எனக்கு ஒரு பையனும் பிறந்தான். அவன் இப் பொழுது சட்டம் படித்துக்கொண்டிருக்கின்றான். எனது சகோதரர் வழக்கறிஞர் கிருட்டிணகுமார் மூலம் இந்தக் கொடுமையிலிருந்து விடுபட்டு அவரது குடும்பத்துடன் நானும் எனது பையனும் வாழ ஆரம்பித்தோம்.

ஒரு புழுக்கமான சூழலிருந்து ஒரு மெல்லிய காற்றை சுவாசித்த அனுபவம். பிறகு விட்டப் படிப்பை முடித்து, அழகு நிலையம் தொடங்கி வாழ்க்கையை அடுத்த இடத்திற்கு நகர்த்தினேன். இதற்கு எனது அண்ணன் மற்றும் அவரது துணை வியாரின் உதவியும் பக்கபலமாக இருந்தது. தனித்தே வாழலாம் என்று முடிவில் வாழ்க்கையை நகர்த்தினேன்.

அண்ணனும் மகனும் நடத்தி வைத்த இரண்டாவது மணம்

ஓரிரு வருடங்கள் கழிந்தபிறகு, எனது தோழிகள் மற்றும் எனதருமை மகன் ஆகியோரின் தூண்டுதலால் இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று அரை மனதுடன் ஒத்துக்கொண்டேன். எனது அண்ணனின் மூலம்தான் எனக்குப் பெரியாரியல் அறிமுகமானது. பெரியாரை ஒரு கடவுள் மறுப்பாள ராகத்தான் நான் நினைத்திருந்தேன். முதல் திருமணம் சகல சம்பிரதாயங்களுடன் நடந்துதான் என் வாழ் வை நாசப்படுத்தியது. ஆதலால் இரண்டாவது திருமணம் ஒரு சீர்திருத்த திருமணமாக இருக்க ஆசைப்பட்டேன். எதிர்பாராத விதமாக, ஜாதியை – தாலியை – ஜாதி, மதச் சடங்குகளை மறுத்த திருமணமாக எனது இரண்டாம் மணம் இனிதாக நிறைவேறியது.

தோழர் குமரேசனின் அறிமுகம் எப்போது கிடைத்தது அவரைத்தேர்வு செய்யக் காரணமென்ன?

தோழரின் அறிமுகம் 2009 இல் சகோதரர் குமார் மூலம் ஏற்பட்டது. தோழர் குமரேசன் ஒரு பெரியார் பற்றாளர். எனது வாழ்க்கைக்கு ஏற்றவர் என்றும் அண்ணன் சொன்னார். எனது அண்ணனுக்கு தோழர் தாமரைக்கண்ணன் மூலமாக குமரேசன் அறிமுகமானவர். அதனால் குமரேசனைச் சந்தித்து என்னுடைய நிலைப்பாடு என்ன, விருப்பங்கள் என்னவென்று தெரிவிக்கலாம் என நினைத்து, சந்திக்க முடிவு செய்தேன். நான், எனது மகன் நிஜந்தன், தோழர் குமரேசன் மூவரும் சந்தித்துப் பேசி, வாழ்க்கையைத் தொடங்கலாம் என நினைத் தோம்.

அவரைத் தேர்வு செய்ய மிக முக்கிய காரணம் அவரின் வாய்த்திறமைதான். அப்படி அழகாகவும் தெளிவாகவும் பேசி, எனது வாழ்க்கைக்குச் சரியாக வருவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினார். எனது வேண்டுகோளாகிய இன்னொரு குழந்தை வேண்டாம், ஊரையும், சொந்தத் தொழிலையும் விட்டு வரமாட்டேன், போன்ற நிபந்தனைகளுக்குச் சரியென்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எங்கள் வாழ்வும் இனிதே தொடங்கியது.

உங்கள் திருமணத்தை நீங்களே முடிவு செய்திருக்கிறீர்கள். பெண்களே அவர்களது வாழ்க்கை குறித்து முடிவு செய்வது நல்லதா? குமரேசனுடன் நடந்த அந்தச் சந்திப்புக்கு உங்கள் அண்ணனை ஏன் அழைத்துச் செல்லவில்லை?

வாழப்போவது நான் தான். நான் தானே முடிவு செய்யனும்? நன்மையோ, தீமையோ நான் பார்த்துக் கொள்வேன். எத்தனை காலம் அண்ணன், தம்பி, அப்பாக்களின் மறைவில் நாங்கள் வாழ முடியும்? பெண்கள் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கின்ற நிலையிலிருந்தால் தான், தங்கள் வாழ்வு முறையை தங்கள் விருப்பப்படி சுயமரியாதையுடன் தேர்ந்தெடுத்து வாழ முடியும். முடிவெடுக்கும் அதிகாரம் பெண்களுக்கு எங்கெல்லாம் இருக்கின்றதோ அந்த நாடு, வீடு, கல்வி, வேலை, தொழில் நிறுவனங்கள் சிறப்புடன் இருக்கும். பெண்களைத் தலைமை அதிகாரிகளாகக் கொண்ட நிறுவனங்கள் சிறப்புடன் செயல்படுகின்றன.

உங்களின் திருமணம் எப்போது நடந்தது? அதில் உங்கள் பெற்றோரிடமும், உறவினர்களிடமும், எதிர்ப்பும், வரவேற்பும் எப்படி இருந்தது?

முதலில் எங்களது இணையேற்பு நிகழ்வு, கோவையில் அப்போதைய பெரியார் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் மற்றும் நெருங்கிய தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பின் பதிவுத்திருமணம் தாராபுரத்தில் நடைபெற்றது. பின்னர் பெரிய குளத்தில் பெரியார் திராவிடக் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில், டிசம்பர் 6 அன்று மாலையில் அம்பேத்கர் நினைவு தினத்தில், உற்றார், உறவினர்கள் மத்தியில் வாழ்க்கைத் துணை நல ஏற்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பெற்றோர்கள் தரப்பி லிருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஒரு சில உறவினர்கள் மட்டும், இது உனக்குச் சரியாக வராது. இன்னொரு திருமணம் வேண்டாம், பையன் இருக்கிறான். அவனைப் பார்த்துக்கொண்டு வாழ்க் கையை நடத்து என்று அவர்களின் அடிமனதில் படிந்துப் போயிருக்கும் இந்துத்துவச் சிந்தனையை வெளிப்படுத்தினார்கள். ஒரு சிலர் இந்த வயதி லிருந்து எப்படி தனித்து வாழ்வாய், உனக்கென்று ஒரு துணை வேண்டும் என்று சொல்லி ஆதரவு தெரிவித்தனர்.

இந்து மத சமூகப் பெண்கள் தங்கள் வாழ்வில் ஜாதியை ஒழிக்க நினைத்தால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?

காலம் காலமாக ஜாதியைப் பின்பற்றி வரும் பெண்கள், ஜாதிகள் உருவானதே நம்மைப் பிரித்தாளப் பார்ப்பனர்கள் கண்டுபிடித்த வழி என்பதை முதலில் உணரவேண்டும். நம் முந்தைய தலைமுறை எப்படியோத் தொலையட்டும். நாமும், நமது அடுத்த தலைமுறையும் ஜாதியற்றவர்களாக மாறவேண்டும். அதற்கு நாம் பார்ப்பனியப் பழக்க வழக்கங்களை நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஆட்டுமந்தைகள் போல் பின் தொடராமல் பகுத்தறிவுகொண்டு சிந்தித்து இந்தப் பழக்க வழக்கங்கள் நமக்கானதல்ல என்றும் நம்மால் உருவாக்கப் படவில்லையென்றும் உணர்ந்து பெரியார் வாழ்வியல் முறையப் பின்பற்ற வேண்டும். நமது பிள்ளைகளின் ஜாதி கடந்த காதல் திருமணங்களை வரவேற்க வேண்டும். நாமும் ஜாதி மறுப்புத்திருமணத்தை நமது பிள்ளைகளுக்கு செய்து வைக்க வேண்டும்.

பெண்கள் சுயமாக முடிவெடுப்பதில் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் பெண்களின் நிலைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

மற்ற மாநிலங்களை ஒப்பிடும் பொழுது நமது பெண்கள் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும், ஏன் திருமண விசயங்களில் கூட சுயமாகவும், சுயமரியாதையுடனும் முடிவெடுக்கிறார்கள். அதற்கு இந்த மண்ணில் பெரியார் போட்ட விதைதான் காரணம் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மற்ற மாநிலங்களில் உயர்தட்டு மக்களுக்கு மட்டுமே கிடைக்கின்ற எல்லா வசதியும், சுதந்திரமும், இங்கு இயல்பாகவே எல்லாத் தரப்புப் பெண்களும் பெறுகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. அதற்கு காரணம் தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பும், அவரைப் பின் தொடர்ந்த திராவிட இயக்கங்களின் ஆட்சியும் ஒரு காரணம். இதைப் பற்றிய முழுமையான புள்ளிவிபரம் நம்மிடம் இல்லை. இது தொடர்பான தகவல்களை நாம் திரட்ட வேண்டும்.

பெரியகுளம் குமரேசன்:

எனது ஊர், தேனி மாவட்டம் பெரியகுளம். என் உடன் பிறந்தவர்கள் அக்காள் ஒன்று, தம்பி ஒன்று. என் தாயார் கேன்சர் நோயினால் பாதிக்கப் பட்டு இறந்துவிட்டார். தந்தை என்னுடன் உள்ளார்.

பெரியார் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

இதற்கான பதிலை சொல்லுவதற்கு முன் என்னுடைய ஆரம்பகாலத்தையும் சொன்னால் மிகவும் நன்றாக இருக்கும். என்னுடைய இளம் வயதில் எனது தாய்மாமன் திராவிடர் கழகத்தி லிருந்தவர். அவரைப் பார்க்கும் போதெல்லாம் சற்று ஆச்சரியமாக இருக்கும். இவர் எப்படி கடவுள் இல்லை என்று சொல்கிறார் என்று ஒரு வித வியப் போடு தான் அவரை அணுகுவேன். ஆனால் அவர் பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் பார்த்த தின் விளைவு இன்று முழு நேர பக்திமானாக மாறி விட்டார். அதை விட்டுவிடுவோம். அதன் பிறகு பெரியாரின் மீதான காதல் என்னுள்ளே ஒரு மூலையில் ஒளிந்து கொண்டது. காலம் நகர்ந்து என் படிப்பை முடித்து சுயமாகத் தொழில் தொடங்க ஆரம்பித்தேன்.

அப்போது தான் செம்பட்டியில் தோழர்கள் இராசா, தாமரைக்கண்ணன் ஆகியோரின் நட்பு கிடைத்தது. அதன் பிறகு தான் என்னில் உறைந்து போயிருந்த பெரியாரியம் துளிர்விட ஆரம்பித்தது. தோழர்கள் மூலமாகத்தான் மணிஅண்ணனின் அறிமுகமும் பெரியார் திராவிடர்கழகத்தில் வேலை செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

பெரியாரியலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அதைப் படித்தால் மட்டும் போதாது. செயலில் காட்டும்போது தான் பெரியாரையும், சமுதாயத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். அப்படி ஏதாவது ஒரு நிகழ்வைக் கூற முடியுமா?

எனது தாயாரின் மரணம். அவர் கேன்சர் நோயினால் அவதிப்பட்டு இறந்துவிடுகிறார். அந்த இறப்பு நிகழ்வில் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக சாஸ்திர சடங்குகளைப் புறக்கணிக்கிறேன். சடங்குகளை மறுப்பது என்றால் அது எப்படிப்பட்டது என்பதை நேரடியாக அனுபவிக் கிறேன். இறுக்கமான ஒரு சாதியச் சூழலில் வாழ்ந்து வரும் என் உறவினர்களுக்கு என்னுடைய செயல் ஒரு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒருபுறம் தாயின் இழப்பு, மறுபுறம் உறவினர் களின் கோபம், வெறுப்பு. இறப்புக்குரிய சடங்கு களைச் செய்யாவிட்டால் உறவுகளையும் இழப் போம் என்ற சூழல். இவற்றுக்கிடையே நிதானமாக நான் முடிவெடுக்க பெரியாரியல் துணையாக நின்றது. நமது தோழர்களின் அறிவுரைப்படி நான் மிகவும் அமைதியாக இருந்து எனது கொள்கையில் உறுதியாக நின்றேன்.

வந்தவர்கள் அனைவரும் முதன் முறையாக பெரியாரின் வாழ்வியல் முறையைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள். இறுதி நிகழ்வுக்கு வந்தவர்களின் முக்கால்வாசிப் பேர் இவன் திருமணத்தை எப்படி நடத்துகிறான் என்று பார்ப்போம் என வாழ்த்திவிட்டுச்சென்றார்கள்.

இறப்பிலும், இழப்பிலும் தெளிவாக இருந்து விட்டோம். வாழ்க்கைத் துணை என்பது ஒரு மகிழ்வான காரியம். அதிலும் கொள்கை வழி நிற்போம் என்று உறுதியாக இருந்தேன். எனக்கு துணை தேடும் பொறுப்பைத் தோழர் தாமரைக்கண்ணன் எடுத்துக் கொண்டார். கணவரை இழந்த பெண்ணை அல்லது விவாகரத்தான பெண் ணையோ வாழ்க்கைத் துணையாக தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்து தேட ஆரம்பித்தோம். வாழ்வது ஒரு முறை, அந்த வாழ்க்கையைச் சமுதாய மாற்றத்துக்குப் பயன்படும்படிதான் வாழவேண்டும் என்று தேடியபோது கிடைத்தவர் தான் தோழர் பூங்கொடி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.