இந்து வேத வாழ்வியலுக்கு எதிராக, திராவிடர் வாழ்வியல் விழா

இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப்படுத்தும் “திராவிடர் வாழ்வியல் விழா”  -திருப்பூரில் தோழர் கொளத்தூர் மணி பேச்சு

இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைபடுத்தும் விழா திராவிடர் வாழ்வியல் விழா என திருப்பூரில் சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகம் சார்பில், திராவிடர் வாழ்வியல் விழா – திராவிடர் உணவு விழா-  கருந்திணை 2013 நிகழ்ச்சியில் திராவிடர் பண்பாட்டு மலரினை வெளியிட்டு திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி பேசினார்.

சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகம் சார்பில் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் காவேரி அம்மன் திருமண அரங்கத்தில் கருந்திணை 2013 என்ற பெயரில் திராவிடர் வாழ்வியல் விழாவும் திராவிடர் உணவு விழாவும் எழுச்சியோடு நடைபெற்றது. விழாவின் துவக்கத்தில் மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் பறை முழக்கம் அரங்கத்தை அதிரவைத்தது. தொடர்ந்து சுயமரியாதை கலை பண்பாட்டு கழகத்தின் கோவை மாவட்ட அமைப்பாளர் அ.ப. சிவா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால்பிரபாகரன், கழகப் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழக சேலம் மண்டல அமைப்பாளர் கொளத்தூர் குமார் ஆகியோர் திராவிடர் வாழ்வியல் உறுதிமொழியை முன்மொழிய கழகத் தோழர்கள், உரத்தகுரலில் வழிமொழிந்து உறுதியேற்றனர்.

திராவிடர் வாழ்வியல் குறித்து திராவிடர் பண்பாட்டு மலர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் பண்பாட்டு மலரை வெளியிட்டார். ஜாதி மறுப்பு வாழ்வியலை ஏற்றுக்கொண்ட காதலர்களின் பிரதிநிதியாக கோவை இசைமதி மலரைப் பெற்றுக்கொண்டார். நூலின் முதல்படியினை தூத்துக்குடி பால்பிரபாகரன், ஈரோடு இரத்தினசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மலரினை வெளியிட்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி தனது உரையில்,

“சுயமரியாதை கலைபண்பாட்டு கழகத்தின் சார்பில் நடைபெறும் திராவிடர் வாழ்வியல் விழா திராவிடர் உணவுவிழா, திராவிடர் பண்பாட்டு மலர் வெளியீட்டு விழா ஆகியவை சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள், செய்ய  போகிறவர்கள், செய்து வைக்கஉள்ளவர்களுக்கான பண்பாட்டை செயலாக்கும் ஒரு புதிய முயற்சி, இந்து வேத வாழ்வியலுக்கு எதிரான பெரியாரியல் வாழ்வியலை நடைமுறைப் படுத்தும் நிகழ்ச்சியாக திராவிடர் வாழ்வியல் விழா அமைந்திருக்கிறது என குறிப்பிட்டு உரையாற்றினார்.

உடுமலைப்பேட்டை தோழர் மலரினியன் தனது மரண ஆவணத்தை வெளியிட்டார்.  அவர் தனது உரையில் வாழும் காலத்தில் கொள்கை பிடிப்போடு வாழ்ந்த பெரியாரியல் வாதிகள் கூட சாகும் போது உறவுகளாலும், குடும்பத்தாலும் சாதி, மதக்குறிகளுடன் சில நேரங்களில் அடக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த இழிநிலை மாற எனது முயற்சியாக மரண ஆவணம் என்ற ஆவணத்தை எழுதி எனது மரண சாசனமாக சார்பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்துவிட்டேன் என பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.

தலித்முரசு ஏட்டின் ஆசிரியர் தோழர் புனிதப்பாண்டியன், ம.தி.மு.க பனியன் தொழிலாளர் முன்னனேற்றசங்கப் பொதுச்செயலாளர் க.இராமக்கிருட்டிணன், ம.தி.மு.க மாவட்டப் பொருளாளர் மு.ஈசுவரன், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர்பேரவை, தோழர் ஓவியாவின் ‘புதிய குரல்’, விடுதலைச்சிறுத்தைகள், புரட்சிகர இளைஞர் முன்னணி, திராவிடமுன்னேற்றக் கழகம் போன்ற பல்வேறு அமைப்புகளின் தோழர்களும் விழாவில் பங்கேற்றனர்.  திருப்பூர், பல்லடம், கோவை, மேட்டூர், கொளத்தூர், சேலம், ஈரோடு, கோபி, கரூர், உடுமலை, திண்டுக்கல், ஏற்காடு, கணியூர், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து தனி வேன்களிலும், வாகனங்களிலும் தி.வி.க தோழர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழுவின் இன்னிசையும், திராவிடர் கலைக்குழுவின் வீதி நாடகங்களும், நமது கழகக் குடும்பங்களின் குழந்தைகள் பங்குபெற்ற கலைவெளிப் பாடுகளும் மாற்றி மாற்றி அரங்கேற்றப்பட்டன. பழனி திராவிடன் கராத்தே, ஜவஹர் தாய்ச்சி ஆகிய தற்காப்புகலைகளை நிகழ்த்திக்காட்டினர். விழாவில் வந்திருந்த அனைவருக்கும் திராவிடர் உணவான மாட்டுக்கறி பிரியாணி, மாடு வால் சூப்பு, மாட்டுக்கறி மிளகு வறுவல், தேன்நெல்லி சாறு, கொள்ளு ரசம் உட்பட பல்வேறு உணவு வகைகள் பறிமாறப்பட்டன.

பிற்பகல் மூன்று மணியளவில் சுயமரியாதை கலை பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் கோபி அர்ஜுனன் தலைமையில் சாதி, மத, கடவுள், மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியாரியல் கருத்தினை மக்கள் மனதில் எளிய வகையில் பதியவைக்கும் வகையில் வீதி நாடகம் தொடங்கியது. குமரசேன், பிரபு, சந்திரசேகரன், மணிகண்டன், ஆகியோரின் எளிமையான நடிப்பு குழுமியிருந்த மக்களிடம்  விழிப்புணர்வை தூண்டியது. சாதி, மத சடங்குகள், கடவுள் மறுப்பு, உணவு, உடை, இருப்பிடம், கலைஇலக்கியங்களில் தீண்டாமை எதிர்ப்பு குறித்து சுயமரியாதை கலைப்பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட குறும்படப்போட்டியில் வெற்றிப்பெற்ற படைப்புகளுக்கு பரிசளிப்பு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. போட்டியில் தோழர் சைமன் ஜார்ஜ் இயக்கிய செவ்வாழை, மகராஜன் இயக்கிய  போதிவிருட்சா, துளசிதாசன் இயக்கிய அஞ்சனவித்தை, மணிமாறன் இயக்கிய 18 தீக்குச்சிகள், பொன்ராசு இயக்கிய ஒரு ஊருல ஆகிய அய்ந்து படைப்புகள் சிறந்த குறும்படங்களாக தேர்வு செய்யப்பட்டன.

தோழர் கவிக்குமார் இயக்கிய உறவின் கதை, பாலாஜி இயக்கிய டூல் ஆகிய இரு குறுப்படங்கள் சிறப்பு பரிசு பெற்றன. வெற்றி பெற்ற படைப்பாளிகளை பாராட்டி திராவிடர் விடுதலைக்கழக தலைவர் தோழர் கொளத்தூர்மணி தலா இரண்டாயிரம் வீதம் பரிசளித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சிறப்பு பரிசு பெற்ற இரண்டு குறும்படங்களுக்கு தலா ஆயிரம் வழங்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற படைப்பாளிகளின் குறும்படங்கள் பார்வையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இறுதியாக சுயமரியாதைச் சுடரொளி மேட்டூர் கருப்பரசன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

சு.க.ப.க வின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் பரமேஸ்வரி மாவட்டச் செயலாளர் அனுப்பட்டி பிராகாசு, திருப்பூர் மாவட்ட தலைவர் பாரதிவாசன் ஆகியோர் உழைப்பில், திராவிடர்களின் உணவு, உடை, குடியிருப்பு, திருமணமுறை, மரணச்சடங்குமுறை போன்ற பிறப்பு முதல் இறப்பு வரையிலான பண்பாட்டுக்கண்காட்சி பார்வையாளர்களுக்கு பல செய்திகளைக் கூறியிருந்தது. தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் மாநில அமைப்பாளர் திருப்பூர் சிவகாமி தலைமையில் அதன் தோழர்கள் அமைத்த அறிவியல் கண்காட்சியும் பார்வையாளர்களைச் சிந்திக்கத் தூண்டியது.

இறுதியில் திராவிடர் உணவு விழாவின் இரவு உணவுகள்  கேழ்வரகு களி, கம்புதோசை, சம்பா கோதுமை உப்புமா, பிரண்டை சட்னி, வாழைப்பூ குருமா, தென்னம்பால் ( கள் ) ஆகியவை பார்வையாளர்களுக்கு பரிமாறப்பட்டன. ஆண், பெண், குழந்தைகள் போன்ற எந்த பேதமுமின்றி அனைவரும் தென்னம்பாலையும் மாட்டுக்கறி வகைகளையும் சிறுதானிய உணவுகளையும் உண்டு மகிழ்ந்தனர். திராவிடர் உணவு விழாவிற்கான உணவு வகைகளை  அறும்சுவையுடன் மிக சிறப்பாக ஏற்பாடு செய்த ஏற்காடு தோழர் பெருமாள் தலைமையிலான தோழர்களை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி வெகுவாகப் பாராட்டி சிறப்பு செய்தார்.

கருந்திணை 2013 நிகழ்வு திட்டமிடலில் தொடங்கி இறுதிவரை பல தோழர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். குறிப்பாக செயலவைத்தலைவர் துரைசாமி, பல்லடம் விஜயன், திருப்பூர் இராவணன், மேட்டூர் சக்திவேல், சேவூர் செந்தில்குமார், திருப்பூர் முகில்ராசு, அகிலன், சண்முகம், மணிகண்டன், மூர்த்தி, ஜீவாநகர் குமார், நகுலன், பிரசாத், தலைவரின் ஓட்டுநர் தோழர் பாலு, கொடுமுடி பாண்டியன், கடத்தூர் காந்தி, பல்லடம் மணிகண்டன், வடிவேல், சூர்யா, இராவத்தூர் இரமேஷ், சற்குணம், பார்த்திபன், இராயப்பேட்டை  செல்வக்குமார், சென்னை தாமரைக்கண்ணன் ஆகிய தோழர்கள் விழாவைத் திட்டமிட்டு நடத்துவதற்கு பெரும் துணையாக இருந்தார்கள்.

காலையிலிருந்து இரவு வரை 12 மணி நேரமும் சிறிதும் சலிப்புத் தட்டாமல் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடைபெற்றன. நண்பகல் உணவு நேரத்திற்குப் பிறகும், இரவு விழா முடிவடையும் போதும் பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் கலைநிகழ்ச்சிகளில் ஒன்றி, எழுந்து நடனமாடத் தொடங்கினர். தாய், தந்தை – மகன், மகள் – நண்பர் – தோழர் – பொறுப்பாளர் போன்ற அனைத்து நிலைகளையும் கடந்து அனைவரும் ஒன்றாக நெடுநேரம் நடனமாடி விழாவை முடித்துவைத்தனர். நமது தோழர்களுக்கிடையேயும், தோழர்களின் குடும்பங்களுக்கிடையேயும், தோழமை அமைப்புகளின் தோழர்களுக்கிடையேயும் உறவை நெருக்கமாக்கும் நோக்கிலும் – ஜாதி மறுப்புப் பண்பாட்டைச் செயலாக்கும் நோக்கிலும் இதுபோன்ற விழாக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்தப்பட வேண்டும் என பங்கேற்றோர் தெரிவித்தனர்.

திராவிடர் வாழ்வியல் விழாவில் தோழர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி

1.ஆண்டாண்டுகாலமாக நாட்டின் பெரும்பான்மை மக்களை அடக்கி, அடிமைப்படுத்தி வைத்துள்ள – வேத, இந்து மதம் உருவாக்கி வைத்துள்ள – இன்றளவிலும் நடைமுறையில் உள்ள – பிறப்பு முதல் இறப்பு வரையிலான இந்து மதத்தின் அனைத்து வகைச் சடங்குகள், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் அனைத்தையும் அழித்து ஒழிப்போம். இவை எவற்றையும் எமது வீடுகளில் கடைபிடிக்க மாட்டோம். இந்து, கிறிஸ்த்து, இஸ்லாம் போன்ற எந்த மதத்தின் சடங்குகளையும் ஏற்காதவர்களையும், கடைபிடிக்காத வர்களையுமே எமது உறவினர்களாக ஏற்போம்.

2.முருகன், விநாயகன், இராமன், அய்யப்பன், சிவன், மாரியம்மன், காளியம்மன் போன்ற இந்து மதத்தின் கடவுள்களையும் – சிறுதெய்வங்கள், குலசாமிகள் என்ற பெயரில் நடைபெறும் இந்துமத வழிபாடுகளையும், மதப்பண்டிகைகளையும் வெறுத்து ஒதுக்குவோம்.

3.ஜாதியை நிலை நிறுத்தும் ஊர் – சேரி என்ற இரட்டை வாழ்விடங்கள், இரட்டைக்குவளை, இரட்டைச்சுடுகாடுகள் போன்ற அனைத்து வகைத் தீண்டாமைக் கொடுமைகளையும் ஒருஜாதிக்கு ஒரு தொழில் என்ற குலத்தொழில் முறையையும் அழிப்பதற்கு கடுமையாக உழைப்போம்.

4.வெளியிலே ஜாதி ஒழிப்புப் பேசிக்கொண்டு, சொந்த வாழ்க்கையில் சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்வதையும், எமது குடும்பத்தினருக்கு சொந்த ஜாதிக்குள் திருமணம் செய்து வைப்பதையும் கொள்கைத் துரோகமாகக் கருதுவோம்.

5.மனித நேயத்துக்கு முரணான – சமத்துவத்திற்கு எதிரான – பாலின, பொருளாதார, ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமான இந்து மதத்தை விட்டொழித்து, திராவிடர் பண்பாடு செழித்து வளர, உயிரைக் கொடுத்தேனும் உழைப்போம் என உறுதி ஏற்கிறோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.