சமையல் மறுப்புப் போராட்டம் #Boycott kitchen #Boycott Cooking 24.12.17

காட்டாறு ஏடு, kaattaaru2014@gmail.com

தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், வகுப்பறைகளில் மாணவர்கள் ஆண் – பெண் என தனித்தனியாக அமரவைக்கப்படும் முறையைத் தடை செய். அகர வரிசைப்படி (alphabetical order) ஆண் – பெண் மாணவர்கள் கலந்து அமரும் முறையை நடைமுறைப்படுத்து! பள்ளிக் கல்வியிலிருந்தே பாலியலையும் ஒரு பாடமாகக் கற்பி!

புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ‘இருபால் பொதுவிடுதி’ முறையை (Co – Hostels or Unisex Hostels) பள்ளி – கல்லூரிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்து!

பெண்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக மட்டுமே உருவாக்கும் வகையில், குழந்தைப் பருவத்திலேயே நடத்தப்படும் காதுகுத்து விழாக்களைத் தடைசெய்!

பெண்களை இழிவு படுத்தும் பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடைசெய்!

திருமணங்களில் பெண்களின் சம்மதத்தையும், பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கு!

பெண்கள் திருமணத்திற்கு முன் தந்தையின் குலதெய்வத்தையும், திருமணத்திற்குப் பிறகு கணவனின் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள, மிகப்பெரும் பாலினப்பாகுபாடான ‘குலதெய்வ வழிபாடு’களைத் தடைசெய்!

உடல்அழகே முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கும் அனைத்து விளம்பரங்களையும் தடைசெய்! பெண்களின் அலங்காரத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படாத மலர் விவசாயம், மலர் வணிகம் ஆகியவற்றைத் தடைசெய்.

பெண்களுக்கு என தனியாக இருசக்கர வாகனங்கள் வடிவமைப்பதையும், தயாரிப்பதையும், அதன் வணிகத்தையும் தடைசெய்!

‘திருமணம் தேவையில்லை’ என்றும், ‘குடும்ப அமைப்பே வேண்டாம்’ என்றும் முடிவெடுத்துத் தனித்துவாழத் துணிந்த பெண்களுக்கு, அரசு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கு!

திருமணங்கள் உறுதிசெய்யப்படும் போதே, அந்த மணமக்களுக்குத் ‘தனிக்குடித்தனம்’ என்பதைக் கட்டாயமாக்கு! ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும், அந்தத் தம்பதிகள் இடையில் எக்காரணம் கொண்டும், எந்தச் சூழலிலும் இரு தரப்புப் பெற்றோர்களும் தலையிடுவது சட்டப்படிக் குற்றமாக அறிவிப்பு செய்!

பெண் விடுதலை நோக்கிலும், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஆண் – பெண் இருபாலரும் திருமணத்திற்கு முன்பே கருத்தடைச் சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்!

திருமணத்திற்கு முன்பே கருத்தடை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கும் – பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் ஆண், பெண் இருபாலருக்கும், நாட்டின் எதிர்கால நலன்கருதி அரசின், கல்வி- வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கு!

இல்லப்பராமரிப்பிலும், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சமஉழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்கு!

திருமணத்திற்கு முன்போ, திருமணத்திற்குப் பிறகோ, பெண்ணின் உடல் மீதுள்ள உரிமை முற்றிலும் பெண்களுக்கே! திருமணத்தின் பெயரால் – கணவன் என்ற உரிமையால் நடக்கும் (Marital Rape) பாலியல் வன்முறைகளைக் கடும் குற்றமாக்கு!

மேற்கண்ட அனைத்துப் பாலினப் பாகுபாடுகளுக்கும் எதிராக – ‘பாலினத் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்’ என்ற பெயரில் தண்டனைகள் வழங்கும் அதிகாரங்களோடு கூடிய, புதிய பாலின சமத்துவ நோக்கிலான சட்டங்களை உருவாக்கக் கோரி, ஒரு அடையாளமாக, முதற்கட்டமாக, 2017 டிசம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் “சமையல் மறுப்புப் போராட்டம்” #Boycott Cooking #Boycott Kitchen நடத்துவோம்.

யாரும் தெருவுக்கு வரவேண்டாம். வெளியில் யாருடனும் போராட வேண்டாம். காவல்துறையோடும் நீதிமன்றங்களோடும் போராட வேண்டாம். சிறைசெல்ல வேண்டாம். இதுவரை வீட்டில் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அடிமைப் பணிகளையும் புறக்கணித்தால் மட்டும் போதும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.