அருந்ததியர்களை அழிக்கும் அண்ணன்மார் விழாக்கள்

சேவூர்.கு.செந்தில்குமார்

தமிழ்நாட்டின் உள்ள இடைநிலை ஜாதிகளான வேளாளக் கவுண்டர்களும் – வேட்டுவக் கவுண்டர்களும்  தங்களது குலப்பெருமையைக் காட்ட தங்களுக்குள் ஒருவருக்கொருவர்  வெட்டிக்கொண்டு அழிந்த ஒரு கதைதான் பொன்னர் – சங்கர் வரலாறு எனப்படுகிறது. கல்வெட்டு ஆதாரங்களோ, செப்புப்பட்டய ஆதாரங்களோ, குறிப்பிடத்தக்க வரலாற்று அறிஞர்களின் குறிப்புகளோ இல்லாமல் பரப்பப்படும் இந்தக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அண்ணமார்கோவில்களும், அண்ணமார் திருவிழாக்களும், வீரப்பூர் சுற்றுப்பயணங்களும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் வேதனையான உண்மை என்னவென்றால் இந்த விழாக்களை முன்னின்று நடத்துபவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்தான்.  தலித்துகள் முன்னின்று இரு கவுண்டர் ஜாதிகளின் வரலாற்றைப் பரப்புவது ஏன்? அதற்கு அடிப்படையான பொன்னர் – சங்கர் கதையைப் பார்ப்போம்.

வேளாளக் கவுண்டர்கள் பரப்பும் கதை

கொங்குவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த குன்றுடையாக் கவுண்டன் தனது பங்காளிகளால் ஏற்பட்ட சண்டையில் பொன்னி வளநாட்டுக்குக் குடிபெயர்கிறார். குன்றுடையாருக்கும் அவரது மனைவி தாமரைக்கும் பொன்னர்- சங்கர் என்று இரு ஆண்குழந்தைகளும், அருக்காணித்தங்காள் என்கிற பெண் குழந்தையும் பிறக்கிறார்கள். பங்காளிகள் மறுபடி சூழ்ச்சி செய்து குழந்தைகளைக் கொல்லப் பார்க்கின்றனர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரான சாம்புகர் குழந்தைகளைக் காப்பாற்றி வளர்த்து ஆளாக்குகிறார். அண்ணன்மார் பெரியவர்களானதும் அவர்களுடைய குலவரலாற்றைச் சொல்லி தாய் தந்தையிடம் சேர்ப்பிக்கிறார் சாம்புகன்.

தலையூர்க்காளி என்கிற வேட்டுவ சிற்றரசன் அண்ணன்மாரின் அருக்காணித் தங்கத்தை பெண்டாளன் முயற்சிக்கிறான். தொடர்ந்து கொடுமைகள் செய்து கொண்டேயிருக்கிறான். அவனது காட்டுப்பன்றிக்கூட்டம் அண்ணன் மாரின் வெள்ளாமைக் காட்டை  அடிக்கடி அழிக்கிறது.

பெரியண்ணன் சின்னண்ணனிடம் அருக்காணித் தங்கம் முறையிட்டுத் தீமைகளைச் சொல்லியழ, அண்ணன்மார் போருக்குப் புறப்படுகிறார்கள். அழிக்க முடியாத காட்டுப் பன்றியைக் கூட்டத்தை தலித்தான சாம்புவனின் நாய்ப்படைக் கொண்டு அழித்தொழிக்கிறார்கள். இதனால் வெகுண்டெழுந்த தலையூர்க்காளி போருக்கு ஆயத்தமாக, போர் நடக்கிறது. வேட்டுவர் படையை அழித்தொழிக்கிறார்கள் அண்ணன்மார்.  ஆனால், தலையூர்க் காளியின் சூழ்ச்சியால் பொன்னர் சங்கருக்கு மரணம் நேர்கிறது.

அருக்காணித் தங்கம் தங்களது குலதெய்வமான பெரியகாண்டியம்மனை வேண்டி அண்ணன் மாரை உயிர்ப்பிக்கிறாள். அவர்களும் உயிர் பெற்றெழுந்து வந்து தங்காளுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.. பிறகு ‘மாண்டவர் மீண்டால் நாடு தாங்காது’ என்று சொல்லிவிட்டு உயிர் துறக்கிறார்கள்.

வேட்டுவக் கவுண்டர்கள் பரப்பும் கதை

காட்டை வசிப்பிடமாகக் கொண்ட வேட்டுவர்களின் நிலத்தை மண்ணாசை பொங்க ஆக்கிரமிப்புச் செய்தவர்கள்தான் அண்ணன்மார். வேட்டுவர்களின் குடியிருப்பான காட்டை அழித்து நிர்மூலமாக்கி வெள்ளாமை செய்ய ஆரம்பித்ததால், காட்டில் சுதந்தரமாகத் திரிந்த அவர்களது பன்றிகளும், விலங்குகளும் வெள்ளாமைக்காட்டில் புகுந்ததில் வியப்பென்ன? தலையூர்க்காளிக்கும் அண்ணன்மாருக்கும் இப்படி வந்த பகைதானே தவிற பெண் இச்சையால் வந்த பகை அல்ல.

அண்ணன்மார் வேட்டுவர்களை முற்றாக நீர்மூலமாக்கிய நிலை கண்டு, காளியிடம் போய்க்கதறி வேண்டுகிறான். உடனே காளி பிரசன்னமாகி, ‘உன்குலம் இனி அழியாது வெட்ட வெட்டத் தழையும் உன் குலம்’ என்று வரம் கொடுக்கிறாள். ஒரு வஞ்சகனை, பெண்பித்தனை கடவுள் எப்படி ஏற்றுக் கொண்டு வரம் கொடுக்கும்? அண்ணன்மார் காட்டை அழித்ததால்தான் காட்டின் தெய்வம் வெகுண்டெழுந்து அவர்களை அடித்துப்போட்டு விட்டது.

அருக்காணித்தங்காள் அழுது புலம்பி, “காட்டைச் சீர்திருத்தி வெள்ளாமை செய்து பிழைக்கும் வெள்ளாளர்கள் தானே நாங்கள்… இதில் என்ன தவறு?” என்று நியாயம் கேட்டாள். காட்டுத் தெய்வமும் மனமிரங்கி “காட்டை உண்டதால் நீங்கள் காஉண்டர் ( கவுண்டர்) என்ற அவச் சொல்லுக்கு ஆளானீர்கள். காட்டை அழிக்காமல் விலங்குகளுக்கும், காட்டில் வசிக்கும் வேடர் களுக்கும் தொல்லை தராமல் வாழ்வீர்களாக…’ என்று அண்ணன்மாரை உயிர்ப்பித்து விட்டது.

தாரம்: மே 2010 உன்னதம் இலக்கிய இதழ், கீற்று.காம்

அடிமைத்தனத்தில் பெருமை என்ன?

ஆக, நடந்தது இரண்டு இடைநிலைஜாதிகள் தனது முதன்மை எதிரியான பார்ப்பனர்களுடன் போராடாமல் தங்களுக்குள் வெட்டிக்கொண்டு செத்துப் போனார்கள். அந்த இடைநிலை ஜாதிகளின் ஒரு ஜாதிக்கு தாழ்த்தப்பட்டவர் தளபதியாக இருந்து போரிட்டுக்கிறார். கொங்கு வேளாளர்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்று நிரூபிக்க நடந்ததாகச் சொல்லப்படும் கதையில் அவர்களுக்குச் சிறந்த அடிமையாக சாம்புவன் திகழ்ந்துள்ளார் என்பதைத்தான் இக்கதை உறுதிப் படுத்துகிறது.

பொன்னர் – சங்கரின் நாய்ப் படைக்கு தாழ்த்தப்பட்டவர் தளபதியாக இருந்துள்ளார். நாய்கள் பஞ்சமர்களுடைய (தாழ்த்தப்பட்டவர்கள்) விலங்கு என மனுசாஸ்திரம் சொல்கிறது.

“சண்டாளர்களும், ஸ்வபாக்களும் கிராமத்துக்கு வெளியே தான் வசிக்க வேண்டும் அவர்கள் உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் தீண்டிய பாத்திரத்தைச் சுத்தம் செய்ய இயலாது.  நாய்களும், குரங்குகளும் தான் அவர்களுடைய செல்வங்கள்.”

-மனுசாஸ்திரம்,  அத்தியாயம் 10, ஸ்லோகம்51

முதலில் இது கதை. உண்மை வரலாறு அல்ல. அந்தக் கற்பனைக் கதையிலும் தாழ்த்தப் பட்டவர்கள் சிறந்த அடிமையாகத்தான் காட்டப்பட்டுள்ளார்கள். இந்தக் கதையை உண்மை வரலாறு என்ற யாராவது உறுதிப்படுத்த முனைந்தால் அவர்களுக்கு ஒரு கேள்வி. தாழ்த்தப்பட்டவர்கள் தளபதியாகவே உயர்ந்தாலும் அவர்களுக்கு மனு விதித்த கட்டளையை மீறமுடியாமல்தான் வாழ்ந்தார்கள் என்றால், சாம்புவனில் படைத்திறத்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டவர் களுக்கு என்ன நன்மை இருந்திருக்கும்? அந்தச் சாம்புவனுக்குக் கொடுக்கப்பட்ட பெருமையைத் திருவிழாவாகக் கொண்டாடுவதால் இன்றிருக்கும் தாழ்த்தப்பட்டவருக்குத்தான் என்ன முன்னேற்றம் வந்துவிட முடியும்?

சாம்புவன் எனப்படும் தோட்டி, பொன்னர்-சங்கருக்கு முரசடித்துச் செய்தி சொல்வது, கொம்பூவது போன்ற வேலைகளைச் செய்துள்ளார். இதுபோன்ற செயல்களை இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் (சக்கிலியர்) செய்துகொண்டுள்ளார்கள். இந்த இழிதொழிலைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறார்கள்.

இதற்கு ஆதாரமாக அன்னன்மார் கோவில்களின் வெளியே சாம்புவன் மண்டியிட்டு முரசடிப்பது போன்ற சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இரு ஜாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் கடவுள்தன்மையைத் திணித்து, தாழ்த்தப்பட்ட மக்களிடையே பரப்பி, அவர்களையே  விழாக்களைக் கொண்டாடச் செய்து, இன்றவும் தமது சமுதாய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வைத்துள்ளனர் கொங்குவேளாளர்கள்.

நல்ல அடிமையைப் பெற்றது ஆதிக்கக்காரனுக்குப் பெருமையாக இருக்கலாம். ஆதிக்கக் காரனிடம் நல்ல அடிமையாகப் பெயர் பெறுவது எந்த இனத்துக்கும் பெருமை இல்லை. எந்த இனத்துக்கு விடிவும் இல்லை.

பஞ்சமர் பிரிவைச் சேர்ந்த  வேறுசில ஜாதியினரும் அண்ணன்மார் விழாக்களைக் கொண்டாடு கின்றனர். கோபி அருகே அயலூர் கிராமத்தில் கவுண்டர்கள் பன்றியைக் குத்தி பலியிடுகிறார்கள். ஆனால் இரத்தக்காவு குடிப்பது, பன்றிக் கறியைச் சமைத்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள்.  கோபி அருகே நாதிபாளையம், அவினாசி சேவூர்(கிளாகுளம்) மூப்பன் தோட்டம், திங்களூர் ஆகிய பகுதிகளில் வண்ணார்களும், நாவிதர்களும் கொண்டாடுகிறார்கள்.  குள்ளம்பாளையத்தில் நாடார்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், மிகப்பெரும்பான்மையாக சக்கிலியர் சமூகத்தினரே இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர்.

கல்வி – பொருளாதாரச் சீரழிவு

தமது அடிமைத்தனத்தைத் தாமே விழாவாகக் கொண்டாடும் சமுதாயம் எவ்வாறு விடுதலை பெறமுடியும்? இன்றைய நிலையிலும், சக்கிலியர்களுக்கு இந்த அண்ணமார் விழாக்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரும் சுமையாகவும், தடையாகவுமே விளங்குகின்றன.

பெரும்பாலும் மார்ச், ஏப்ரல், மே(மாசி, பங்குனி, சித்திரை) மாதங்களிலேயே விழாக்கள் நடைபெறுகின்றன. திருவிழா தொடங்கும்முன், இந்த ஊர் கோயிலின் பொறுப்பாளர்களான வேளாள ஜாதியினர் அல்லது வேறு இடைநிலை ஜாதியினரிடம் தாழ்த்தப்பட்ட மக்கள் (சக்கிலியர்) சென்று அனுமதி கேட்க வேண்டும். அவர்கள் அனுமதித்த ஏதாவது ஒரு நாளில் வேளாள ஜாதியினர் தலைமையில், சக்கிலியர் மக்கள் ஒன்றுகூடுவார்கள்.

திருவிழாவுக்கு நாள் குறிக்கப்படும். கோயில்வரி நிர்ணயிக்கப்படும். தற்போது நடப்பில் உள்ள வரி ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை இருக்கும் வரி 5,000 ரூபாய் என அறிவித்துவிட்டால் திருவிழா முடியும் முன் 15 நாளில் வரியை செலுத்திவிட வேண்டும். என்ற எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது.

திருவிழாச் செலவை ஈடுகட்டப் பெற்றோர், பள்ளி, கல்லூரி மாணவர்களை பனியன் கம்பெனி மற்றும் இதர வேலைகளுக்கு அனுப்புகின்றனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறுகின்றன. திருவிழாக்களால், தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மனம் திசை திரும்புகிறது. இதனால் படிப்பு கேள்விக்குறியாகிறது. திருவிழாவின் பெயரால் வீணாகும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் குறைந்தபட்சச் செலவுப்பட்டியல்:

கோவில் வரி 5000 ரூபாய், வீட்டில் உறவினருக்கு விருந்து வைக்க, மதுச் செலவு உட்பட20, 000 ரூபாய், 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 10 நாள் ஏற்படும் வேலை இழப்பு நஷ்டம் 5000 ரூபாய், புத்தாடைச் செலவு- ரூ.10,000. ஒரு வீட்டுக்கு மொத்தம் சுமார் 40,000 ரூபாய் செலவாகிறது. ஒரு கிராமத்தில் 100 குடும்பங்கள் எனில், 40,00,000 சுமார் நாற்பது இலட்ச ரூபாய் இந்த விழாக்களின் மூலம் வீணாகிறது.

தன்மான இழப்பு

வரி கட்டாதவரை பலபேர் முன்னிலையில் அவமானப்படுத்தி பணம் வசூலிக்கப்படுகிறது. அதையும் மீறி வரி செலுத்த முடியாதவர்களை ஊரைவிட்டுத் தள்ளி வைக்கப்படுகிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டு உள்ளன. இந்த நடவடிக்கைகளுக்குப் பயந்து கொண்டு, அதிக வட்டிக்கு அவர்களிடமே பணம் பெற்று வரியைச் செலுத்தி விடுகிறார்கள். கோவில் வரி செலுத்தவில்லையெனில், சேரியில் (ஊர்) வாழ்வதற்கே அர்த்தமில்லை என சேரி வாழ் பெரியவர்கள் சொல்வதை இன்றும் கேட்கலாம்..

ஊரைவிட்டு வேறு ஊருக்குச் சென்றவர்கள்கூட பூர்வீகம் வேண்டுமென்று, கோவில் வரியைக் கொடுத்துவிடுகிறார்கள். மதம் மாறிய கிறிஸ்தவர்களிடமும் கட்டாய வரி வசூலிக்கிறார்கள். வரி செலுத்த முடியாதவர்களை மைக்கில் அறிவித்தும் அவமானப்படுத்துகிறார்கள்.

எது எப்படியோ, இந்த நவீன யுதத்திலும் வரி கொடுக்க வேண்டும் என்ற பழக்கத்தைப் பழக்கி வைத்துள்ளனர். சேரி மக்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக கவுண்டர்கள் அந்தக் கோவில்களுக்கு ஆடு, கோழி, பன்றி மற்றும் இதரப் பொருட்களை இலவசமாகத் தருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அண்ணன்மார் கோவில் பூசாரிகளாகச் சேரிவாழ் மக்களே இருக்கிறார்கள். பூசாரிகளாக இருப்பதைச் சிறந்த கெளரவமாக நினைக்கிறார்கள். இதுபோன்ற பதவிகளின் மூலம் மரியாதை கொடுக்கப்பட்டுத் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.

கோபி பகுதியில் மட்டும் பொலவகாளிபாளையம், தொட்டிபாளையம், முத்து காளிமடை, நாதிபாளையம், கோட்டுப்புள்ளாம்பாளையம், காசிபாளையம், அரசூர், அய்யம்பாளையம், ஆயிபாளையம், கலிங்கியம் ஆகிய 10 கிராமங்களில் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தக் கிராமத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஒரு கிராமத்திற்கு 40 இலட்சம் ரூபாய் எனில் 10 கிராமங்களுக்கு நான்கு கோடி ரூபாய் செலவாகிறது.

ஒரு ஆண்டுக்கு இவர்களது மூடநம்பிக்கைக்காக – அடிமைத்தனத்திற்காகச் செய்யும் செலவை வைத்து இப்பகுதி மக்களுக்கான கல்விக்கோ, சுயமரியாதையான வேலை வாய்ப்பிற்கோ உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து விடலாம். சக்கிலியர் இனம் தான் துப்புரவுப் பணியிலும், மலமள்ளும் பணியிலும் உயிரைப் பணயம் வைத்து வேலைசெய்கிறது. மாற்று ஏற்பாடுகளுக்கு அரசுகளையும், அரசியல் கட்சிகளையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தம்மிடமே உள்ள  பொருளா தாரத்தை – செல்வத்தை தமது அடிமைத்தன்மையை நிலைநிறுத்திக்கொள்ளவே பயன்படுத்து கிறது.

திருவிழா அரசியல்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்கள் வெற்றிபெற வேண்டி அண்ணன்மார் கோவில் உள் மற்றும் வெளிக்கட்டுமான வேலைகளைச் செய்து தருவது, சிலைகளை வாங்கி (அ) கட்டித்தருவது, ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற விலங்குகளைப் பலியிட இலவசமாகத் தருவது போன்றவற்றால் மக்களை ஏமாற்றுகிறார்கள். கோவில்களில் நடைபெறும் சண்டை, சச்சரவுகளைக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தாமல், இடைநிலை ஜாதியினர் தாமாகவே முன்வந்து அரசியல் சுயலாபத்திற்காக கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர்.

தாழ்த்தப்பட்ட சக்கிலிய இன மக்கள் தீண்டாமை வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும்கூட, அண்ணன்மார் திருவிழாவைக் காரணம் காட்டியும், இலவசங்கள் மற்றும் அன்பளிப்புகள் கிடைக்காதென்று மிரட்டியும் வாபஸ் பெற வைக்கின்றனர். முயற்சியும் செய்துள்ளனர்.

சமுதாயச் சட்டங்களிடம் தோற்கும் அரசியல் சட்டங்கள்

வழக்கு 1:    கூதாம்பி அர்ஜூன், மூர்த்தி ஆகியோர் தொடுத்த வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்கு. மதுரைவீரன் கோயில் வேளாளக் கவுண்டர் இடத்தில் இருந்ததால், அதைத் தாழ்த்தப்பட்ட மக்களின் இடத்திற்கு எடுத்துச் செல்லுங்கள் இல்லையெனில் வழக்கை வாபஸ் பெறுங்கள் என நிர்பந்திக்கப் பட்டார்கள்.

வழக்கு 2:    கோபி காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் கொடுத்த வன்கொடுமைத் தடுப்புச்சட்ட வழக்கு.              வழக்கை வாபஸ் பெறவேண்டும். இல்லையெனில் ஊரைவிட்டு (சேரி) விரட்டிடுவோம் என மிரட்டப்பட்டார்.

வழக்கு 3 : திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல் நிலையத்தில் பஞ்சலிங்கம்பாளையம் குமரேசன், பொன்னுசாமி கொடுத்த வழக்கு.  சேரி  மக்களே காவல்நிலையம் வந்து இருவரையும் கெஞ்சி இடைநிலை ஜாதியினர் திருவிழாவிற்கு அனுமதி தரமாட்டார்கள் எனக்கூறி வழக்கை வாபஸ் பெற வைத்துவிட்டனர்.

இதுபோன்று தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக அரசியல், பொருளாதார ரீதியாகச் சுரண்டப்பட்டும், அடக்கப்பட்டும் வருகிறார்கள். இதில் வேதனையான, வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், அம்பேத்கர் பெயரைச்சொல்லிக் கொண்டு செயல்படும் அமைப்புகளின் சில பொறுப்பாளர்கள், கோயில் பூசாரிகளாகவும், வரிவசூல் குழு தலைவர்களாகவும் இருந்து வருகிறார்கள். பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறை, அவற்றிலிருந்து விடுதலை இவைகளை நடைமுறைப்படுத்த தோழர் அம்பேத்கர் காட்டும் வழியை பார்ப்போம்.

“ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சாஸ்திரங்களின் தளைகளில் இருந்து விடுவியுங்கள். மக்களின் மனங்களில் சாஸ்திரங்கள் உருவாக்கி வைத்திருக்கிற நாசகரமான கருத்தமைவுகளை நீக்கி தூய்மைப்படுத்துங்கள். இதை நீங்கள் செய்து முடித்துவிட்டால், மக்கள் தாமாகவே முன்வைத்து நீங்கள் சொல்லாமலேயே கலப்பு மணம் செய்வார்கள். சமபந்தி விருந்து நடந்துவார்கள்.

சாஸ்திரங்கள் சொல்வதாக மக்கள் நம்புகிற கருத்துக்களை உண்மையில் சாஸ்திரங்கள் சொல்லவே இல்லை என்று நீங்கள் ஆயிரம் விளக்கங்கள் தந்தாலும், ஆயிரம் வியாக்கியனாம் செய்தலும் அதனால் எந்தப் பயனும் இல்லை. சாஸ்திரங்களை மக்கள் எப்படி புரிந்துகொண்டு இருக்கிறார்கள். என்பதுதான் முக்கியம், புத்தரும், குருநானக்கும் எடுத்த நிலைப்பாடை நீங்களும் மேற்கொள்ள வேண்டும். சாஸ்திரங்களை நிராகரித்தால் மட்டும் போதாது. சாஸ்திரங்களின் அதிகாரத்தை மறுக்க வேண்டும். சாதி புனிதமானது என்ற கருத்தை, இந்துமதம், இந்துகளிடம் உருவாக்கியிருக்கிறது. இந்து மதமே அவர்களிடம் உள்ள குறை என இந்துக்களிடம் சொல்வதற்கான துணிச்சல் உங்களுக்கு வேண்டும். அந்த துணிச்சல் உங்களுக்கு உண்டா?” – ஜாதியை ஒழிக்கும் வழி நூல் பக்கம்-91

இன்றளவிலும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனிய இடைநிலைஜாதிகள் ஆகியோரிட மிருந்து மிகக் கொடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகும் தலித் மக்கள் இந்து மதத்திலிருந்தும் – இந்து அடையாளங்களிலிருந்தும் வெளியேறுவதே சமூக விடுதலைக்கு அடிப்படையாகும்.  நமது சமுதாய விடுதலைக்கு எதிரான இந்து மதத்தை நாமே பின்பற்றிக்கொண்டு – இந்தச் சட்டங்களும், அரசுகளும் நம்மைக் காப்பாற்றும் என எண்ணிக்கொண்டு வாழும் அடித்தட்டு மக்களுக்களைப் பற்றி பெரியார் கூறுவது,

“…ஒரு மனிதன் தன்மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக்கூடாது. என்னை எட்டிப்போ என்று யாரும் சொல்லக் கூடாது” என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப் படக்கூடாது எட்டி நில் என்று சொல்லக் கூடாது” என்று இந்தியன் பினல் கோடில் அதாவது கிரிமினல் சட்ட புÞதகத்தில் ஒரு செக்ஷன் போட்டு அதற்கு ஒரு வருஷ தண்டணை என்றும் போட்டு விட்டதினாலேயே அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்துவிட்டதினாலேயே அசிங்கப்படும் குணத்தை மக்களிடமிருந்து மாற்றிவிட முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே நம்மவர்கள் தங்களுக்கு சூத்திரப்பட்டமும், தீண்டாதார், பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில் எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளு கின்றானோ அவனெல்லாம் சூத்திரப்பட்டமும், பஞ்சமப்பட்டமும் தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை”  குடி அரசு 25.10.1931

இந்து மதப் பண்பாட்டின் ஒரு அங்கமாக, அடையாளமாக உள்ள அண்ணமார்சாமிகளையும், மதுரைவீரன் விழாக்களையும் தூக்கிச் சுமந்தது போதும். காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன்களுக்கு விழா எடுத்தது போதும். குலதெய்வம் என்ற பெயரில் ஜாதித் தன்மையையும், இந்துப் பண்பாட்டையும் தவறாமல் பின்பற்றியது போதும். அம்பேத்கரின் மதமாற்றத்தைக் கையிலெடுப்போம். பெரியாரின் பண்பாட்டுப் புரட்சியைக் கடைபிடிப்போம். விடுதலை பெறுவோம். – காட்டாறு ஏடு, 2016 ஏப்ரல்

நன்றி: சேவூர் முதலிபாளையம் ஆ.ரமணி, இரா.இரவி, கோபி ஆனந்தராஜ்,  கூதாம்பி அர்ஜூனன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.