விவசாயிகளின் மொத்தக் கடன் அளவுக்கு அதானி குழுமத்திற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது: நாடாளுமன்றத்தில் பரபரப்பு வாதம்

தமிழில்: பிரபாகரன் அழகர்சாமி

ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்றக்கட்சி  தலைவர் பவன்குமார் வர்மா, நாடாளுமன்ற மேலவையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடன் குறித்து இன்று கேள்வி எழுப்பினார். அப்போது, அதானி குழுமத்திற்கு இதுவரை 72,000 கோடி ரூபாய்கள் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும்  மொத்தக் கடனுக்கு இணையானது என்று அவர் குறிப்பிட்டார்.

வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டில் பதுங்கியிருக்கும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா குறித்து நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது இதை அவர் குறிப்பிட்டார். அரசு வங்கிகள் மட்டும் இதுவரை  ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதில் 1.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன், அதானி குழுமம் உள்ளிட்ட வெறும் ஐந்து நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதானி குழுமங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் கடன் தொகை மட்டும் சுமார் 72,000 கோடி ரூபாய்கள் ஆகும். நாடு முழுக்க விவசாயிகள் திருப்பிச் செலுத்த வேன்டிய கடன் தொகையும் கிட்டத்தட்ட அதே தொகை ஆகும்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அதானி நிறுவனத்தின் நிகர மதிப்பு 85 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும், அதேசமயம் கடன்களின் மீதான வட்டி செலுத்துவதற்கான அந்த நிறுவனங்களின் திறன் கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், “அதானி நிறுவனத்திற்கும் இந்த அரசுக்கும் இடையில் என்ன உறவு என்பது எனக்கு விளங்கவில்லை, ஆனால் பிரதமர் எங்கு சென்றாலும் கூடவே அதானியும் செல்கிறார். நம்மால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவுக்கான சலுகைகள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில், உயர்நீதிமன்றத்தின் கடுமையான தீர்ப்பையும் மீறி இந்த நிறுவனத்திற்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. இவை குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

-http://www.ndtv.com/india-news/adani-groups-debt-is-equal-to-our-farmers-nitish-kumars-partyman-in-parliament-1403074

1 Comment

Leave a Reply

Your email address will not be published.