விவசாயிகளின் போராட்டம் ஏற்கத்தக்கதில்லையா? – மெள.அர.ஜவஹர், பழனி

விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்டமாட்டோம் என்று சொல்வது சரியா?கட்ட இயலாமைக்குக் காரணம் பார்ப்பன மய்ய அரசா??

     வாங்கிய கடனை திருப்பிக் கட்டவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.அதே நேரத்தில் விவசாயிகளுக்குக் கடன் கொடுத்த அரசாங்கமே விவசாயிகள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாதவாறு சூழ்ச்சிகரமான ஏற்பாடுகளைச் செய்து வைத்த பின் விவசாயிகள் கடனைத் திருப்பிக் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல.

அந்த சூழ்ச்சிகரமான ஏற்பாடுகள் என்ன?

  1. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களான நெல், தானியங்கள், காய்கறி, கரும்பு (இதில் கரும்புக்குப் பணப்பயிர் என்று வேறு பெயர்) போன்றவற்றின் விலை ஏற்றத்தைவிட, விவசாயி விவசாயத்திற்கு வாங்கும் உரம், பூச்சி மருந்து போன்ற விவசாய உள்ளீடு [INPUT] பொருட்களின் விலை ஏற்றமும், விவசாயி தன் வாழ்க்கைக்கு வாங்கும் துணிமணி, மருந்து, சோப்பு போன்ற பொருட்களின் விலை ஏற்றமும் மிகமிக அதிகமாகும். எனவே விவசாயிகளின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது.
  2. விவசாயிகளின் செலவுக்கணக்கைக் கணக்கிடும்போது, இடுபொருள் செலவை மட்டும் கணக்கிடுவது தவறு. இதில் விவசாயிகளின் உழைப்பு, மேற்பார்வை (தொழிற்சாலைகளில் மேற்பார்வையாளர்களின் சம்பளம் 25 ஆயிரத்திலிருந்து அந்தத் தொழிற்சாலையின் தகுதிக்கேற்ப), நிலத்தின் மூலதன மதிப்பு இவற்றை கணக்கில் கொள்வதில்லை.மேலும் ஒரு வருடத்திற்கு என்று கணக்குப் பார்க்காமல் குறைந்தது 10 வருடத்திற்கு கணக்கிட்டுப் பார்க்க வேண்டும்.
  3. இந்த சூழ்ச்சிக்கெல்லாம் அடிப்படை, பார்ப்பன மய்ய அரசு விவசாயத்தைத் தொழிலாக அங்கீகரிக்காமல் இருப்பதே. அப்படி அங்கீகரித்தால்தான் நலிந்த தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்படும் கடன் தள்ளுபடி, மின்கட்டணத்தை எவ்வளவு பாக்கி வைத்திருந்தாலும் இணைப்புகள் துண்டிக்கப் படாமல் இருப்பது போன்ற நியாயமான சலுகைகளால் விவசாயம் நட்டம் அடையாமலிருக்கும்.
  4. விவசாயிகள் பயன்படுத்தும் விவசாய இடுபொருள், அன்றாடம் பயன்படுத்தும் துணிமணி, சோப்பு, பவுடர், உடல் நிலை சரி இல்லாமல் போனால் வாங்கும் மருந்துப் பொருட்கள் போன்ற அனைத்திற்கும் உற்பத்தி செய்பவனே விலை நிர்ணயம் செய்கிறான். மாறாக இத்தனை நட்டத்தோடு உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களுக்கு விவசாயிகள் விலை நிர்ணியிக்க முடியாது.

ஆடை அவிழ்ப்புக்குக் காரணம் பார்ப்பன ஆதிக்கமே!

விவசாயத்தில் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தியதால் விவசாயிகளின் நண்பனாகிய மண்புழுக்கள் அழிந்துவிட்டன. மண்ணுள் நீர், காற்று செல்வதற்கு ஏதுவாக மண்புழுக்கள் மண்ணை நெகிழச் செய்துவிடும். மண்புழுக்களின் அழிவால் நிலம் கெட்டி பட்டு, காங்ரீட் தரை போல ஆகி , பெய்யும் மழை நீர் வீணாகிக் கடலில் கலந்துவிடுகிறது. இதனால் வருடா வருடம் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயமும் விவசாயிகளும் செத்து செத்துப் பிழைக்க வேண்டியதாகிறது.

இந்த செயற்கை உரத்தையும் பூச்சிக்கொல்லி மருந்தையும் நமக்கு அறிமுகப்படுத்தியது எம்.எஸ்.சுவாமிநாதன் என்கிற பார்ப்பனர்தான். இவருக்கு இந்தப் பார்ப்பன மய்ய அரசு முழு ஒத்துழைப்புக் கொடுத்தது. இதன் காரணமாக விவசாயிகள் காலப்போக்கில் இந்த செற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளையே கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இவற்றின் விலை உயர்வு, தண்ணீர் போதாமை போன்றவற்றால் தொடர்ந்து விவசாயம் பெரு நட்டத்திற்குள்ளாகிவிட்டது. மண்ணை மலடாக்கி, மக்களை நிரந்தர நோயாளியாக்கி விவசாயத்தைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக் காடாக்கியது இந்த பார்ப்பன மய்ய அரசும் எம்.எஸ்.சுவாமிநாதனும்தான். இதன் காரணமாகத்தான் நம் விவசாயிகள் அதீத நட்டத்துக்குள்ளாகி இன்று ஆடை அவிழ்ப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள்.

விவசாயிகளின் எதிரி யார்?

வேறு யார்? பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளையர்கள் தான். விவசாயம் என்பது ஒவ்வொரு மாநிலம் சார்ந்ததாகும். அது அந்தந்தத் தேசிய இன அடையாளங்களைக் கொண்டிருக்கும் (அது முற்போக்கா இல்லையா என்பது வேறு விசயம்). விவசாயத்தை இந்தியா முழுமைக்கும் மய்யப்படுத்திவிட முடியாது.எனவே விவசாயத்தைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலங்கள் கையாள்வதுதான் சரியாக இருக்கும்.

ஆனால், மாநில அரசுகளின் நிலையோ, முனிசிப்பாலிட்டிகளின் அதிகாரத்தைவிடக் கேவலமான அதிகாரத்தைக் கொண்டுள்ளன. இதில் பார்ப்பன மய்ய அரசானது, வருமான வரித்துறை என்ற அமைப்பைக் கையில் வைத்துக் கொண்டு, மாநில அரசு மந்திரிகள், அதிகாரிகளை நிம்மதியற்ற நிலையில் வைத்து, இந்தக் குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட பயன் படுத்த விடாமல் செய்து வருகிறது.

மேலே சொன்ன விவசாய இடுபொருள் கொள்ளை மற்றும் அன்றாடம் விவசாயிகள் பயன்படுத்தும் துணி, சோப்பு, பவுடர், வண்டிகள், பல் துலக்கும் பேஸ்ட், பிரஷ் போன்று இன்னும் பல பொருட்களால் நம்மை அடிமைப்படுத்தி – அவற்றை விருப்பம்போல விலை ஏற்றிக் கொள்ளை அடிக்கின்றனர்.

மய்ய அரசில் உள்ள அதிகாரம் படைத்த 55 துறைகளில் – அமைச்சரகங்களில் நாட்டின் போக்கை திட்டமிடும் அதிகாரம் படைத்த பதவிகளில் பார்ப்பன ஆதிக்கம்.

Group       Total             OBC                 SC        ST       பார்ப்பன உயர் சாதியினர்

Group A    74,866             8,316                      10,434    4,354       51,762

Group B     1,88,776           20,069                    29,373   12,073   1,27,261

                   (வாசிக்கவும் இடஒதுக்கீட்டு உரிமை :- காட்டாறு வெளியீடு)

பார்த்தீர்களா எப்படி உள்ளது பார்ப்பன ஆதிக்கம்!

விவசாயிகள் என்ன செய்ய வேண்டும்?

  1. விவசாய சங்கங்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இந்த மாநில அரசு உரிமை அற்ற கையாலாகாத அரசு. மேலும் அரசியல் கட்சிகளில் உள்ள பலவீனங்கள் விவசாய சங்கங்களிலும் நுழைந்து பதவி வெறி, பொறாமை, தன்னலம் ஆகியவை வளர்ந்து சங்கத்தை பார்ப்பன அடிமை அமைப்பாக்கிவிடும்.
  2. கிராமப் புறங்களில் நடைபெறும் சாதிய நடைமுறைகளைத் தவிர்த்து சம உரிமை அடிப்படையில் தீர்த்து ஒற்றுமை ஏற்படுத்துவதில் விவசாய சங்கங்கள் முன்னணியில் நிற்க வேண்டும். இந்த ஒற்றுமைதான் வெற்றிக்கு வழி வகுக்கும்.
  3. விவசாயிகளின் எதிர்ப்பு வெறும் அரசு எதிப்பு என்கிற நிலையை மாற்றி உண்மையான ஆதிக்கச் சக்தியை எதிர்த்து இருக்க வேண்டும்.
  4. விவசாய சங்கங்கள் இது போன்ற நடைமுறையால் சமூக இயக்கமாகி, சமூக அழுத்ததை ஏற்படுத்தி அரசை செவிசாய்க்கச் செய்ய வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.