நீட் டில் பிட் அடிக்க அனுமதிக்க வேண்டும்! பதில்களை போர்டுகளில் எழுதிப்போட வேண்டும்!!

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 07.05.17 ல் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு  உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் வழியாக நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற்றிருந்தது. தொடர்ச்சியாக இவ்வாறு விதிவிலக்குப் பெற முடியும் என்பது உறுதியில்லை என்று தமிழ்நாடு அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும், அனைத்துக் கட்சிகளுக்கும், அனைத்து அமைப்பு களுக்கும் நன்கு தெரியும். அப்படி இருந்தும் நீட் நுழைவுத்தேர்வு நிரந்தரமாகத் தடை செய்யப்படுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எவருமே மேற்கொள்ள வில்லை என்பதை நீட் தேர்வு  நமக்கு உணர்த்தியுள்ளது.

தை எழுச்சி, தமிழ்வசந்தம் என்ற புரட்சிகளில் பங்கேற்றவர்கள் எங்கே போனார்கள் என்று கேட்க விரும்பவில்லை. ஏனென்றால், அவை மிகைப்படுத்தப்பட்ட சொற்கள். அப்படி எந்த எழுச்சியும், எந்தப் புரட்சியும் நடக்கவே இல்லை  என்பதற்கு, நீட் நுழைவுத்தேர்வு நடந்துவிட்டது என்பதே சான்று.

நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், நாங்கள் அறிக்கை வெளியிட்டோம், நாங்கள் பரப்புரை நடத்தினோம், நாங்கள் முகநூலில் எழுதினோம், நாங்கள் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினோம், நாங்கள் சட்டமுன்வரைவு அனுப்பினோம் என்று அனைவருமே  கூறமுடியும். ஆனாலும் நுழைவுத்தேர்வு நடந்து விட்டது… போகட்டும். இனி அடுத்த ஆண்டாவது நீட் நுழைவுத்தேர்வு நடக்காமல் இருக்க என்ன செய்யப் போகிறோம்? என்பதைச் சிந்தித்துச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

அதைவிட்டு விட்டு, செயின ஏன் கழட்டினாய்? மூக்குத்தியை ஏன் பிடுங்கினாய்? வளையல், கம்மல்களை ஏன் கழட்டினாய்? முழுக்கைச் சட்மையை ஏன் கிழித்தாய்? கருப்புக்கயிரை ஏன் கட் பண்ணினாய்? பூணுாலை ஏன் கழட்டவில்லை? பீகாரில் சட்டையைக் கிழித்தாயா? உ.பி.யில் சங்கிலியை அறுத்தாயா? என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பது பார்ப்பனர்களின் வெற்றியை உறுதிப்படுத்தவே பயன்படும். இந்தியா முழுவதிலும்இதுபோன்ற வேலைகள் நடந்துள்ளன. இதில் இணைக்கப்பட்டுள்ள படம்கூட இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எடுக்கப்பட்டதுதான். (25.06.2016 Hidustan Times) பூணூலுக்கு மட்டும் எங்கேயும் எப்போதும் விதிவிலக்கு இருக்கிறது.

உள்ளாடைகளைக் களைந்து ஆய்வுசெய்ததுஅப்பட்டமான மனிதஉரிமை மீறல். அதற்காக மனித உரிமை ஆணையமே முன்வந்து வழக்குத் தொடுக்கிறது. அதில் சம்மந்தப்பட்ட சில அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள். அதற்குப் பிறகு நீட் புனிதமாகிவிடும்.

நீட் தேர்வே வேண்டாம் என்ற நிலையிலிருந்து, நீட் தேர்வு எழுதுபவர்களுக்கு காது, மூக்குத்தி, தங்கச்சங்கிலி, வளையல், கருப்பு, சிவப்புக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு எழுத சுதந்திரம் வேண்டும் என்ற நிலைக்கு நாம் இறங்க வேண்டாம்.

இதுபோன்ற அணிகலன்களை அணிந்து வரவேண்டாம் என்று நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ அதன் விண்ணப்பத்திலேயே குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பத்தோடு இணைந்து வரும் வழிகாட்டும் குறிப்பேட்டில் 25 ஆம் பக்கத்தில் அவை தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரைக்கைச் சட்டைதான் அணிந்து வர வேண்டும் என்று டிரஸ் கோடும் அறிவிக்கப் பட்டுள்ளது. பல்வேறு தினசரி ஏடுகளில் நீட் தேர்வுநாள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த விளம்பரங்களிலும் இந்த ட்ரஸ்கோட் குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


வழிகாட்டும் குறிப்பேட்டைப் படித்துத்தான் அனைத்து மாணவர்களும் விண்ணப்பத்தை நிரப்புவார்கள். தேர்வு என்று நடக்கும் என்ற அறிவிப்பை அனைவரும் படித்துவிட்டுத்தான் பயிற்சிகளுக்குச் செல்வார்கள். அப்படி இருந்தும் எதற்காக அந்த விதிமுறைகளை மீறவேண்டும் என்பது புரியவில்லை.

பல தனியார் பள்ளிகள் நீட் தேர்வுக்காகத் தனியாக 50 ஆயிரம் வரை கட்டணம் வாங்கிப் பயிற்சி தருகிறார்கள். பள்ளிகள் மட்டுமல்லாமல் நீட்டுக்காக பல தனியார் பயிற்சி நிறுவனங்களும் இயங்குகின்றன. இவை அனைத்தும் இந்த அடிப்படையான தகவல்களைக்கூடக் கூறாமல் பணத்தைப் பிடுங்கிக் கொள்வதிலேயே கவனமாக இருந்திருக்கின்றன என்பது தான் தெளிவாகிறது. இவர்கள் நடத்தும் பயிற்சி எந்த இலட்சணத்தில் இருந்திருக்கும் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்கு நிரந்தரத் தடை வேண்டும். கல்வி மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்திற்கு இணையாகத் தமிழ்நாட்டுக் கல்விமுறை மாற்றப்பட வேண்டும். ஏனென்றால் அகில இந்திய அளவில் நடக்கும் அனைத்துத் தேர்வுகளும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடக்கின்றன. அது தரமானதா? தமிழ்நாட்டுக் கல்வி முறை தரமானாதா? என்பதெல்லாம் வேறு வகை விவாதங்கள். அவை அடுத்த கட்டம்.

நமது அடுத்த தலைமுறை மருத்துவம், பொறியியல், சட்டம், விவசாயம், நிர்வாகம், தொழிற்துறைகள் போன்ற எல்லாவற்றிலும் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதே நமது நோக்கம். அதற்கு எந்தக் கல்விமுறை தேவையோ அந்தத் தரத்திற்கு நம் தரத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இதெல்லாம் இப்போதைக்கு முடியாது. இவை நீண்ட காலப் போராட்டத் திட்டங்கள் என்றால், தற்காலிக மாக ஒன்றைக் கடைபிடிக்கலாம். நீட் தேர்வு கட்-ஆஃப் க்கு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மாநில அரசு நடத்தியுள்ள 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில், மதிப்பெண்களைத் தாராளமாகப் போடச்சொல்லி பள்ளிக்கல்வி இயக்குநரகத்திற்கு வாய்மொழி உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். முக்கியமாக தேர்வுத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் மதிப்பெண்களை கணினிக்குள் பதிவேற்றும் பணியாளர்கள் இதை மனதில்கொண்டு மதிப்பெண்களை அள்ளிப்போடவேண்டும்.

இராஜஸ்தான், பீகார் மாநிலங்களைப் போல தமிழ்நாடு அரசும் வினாத்தாள்களை முன்கூட்டியே அவுட் பண்ண வேண்டும். பிட் அடிப்பதைக் கண்டுகொள்ளக்கூடாது. முடிந்தால் விடைகளைத் தேர்வு மையங்களிலேயே போர்டுகளில் எழுதிப் போடவேண்டும். புத்தகங்களையே கொடுத்து விடை எழுதச்செய்ய வேண்டும். நவீனத் தொழில் நுட்பங்களின் வழியாக விடைகளைத் தெரிவிக்க வேண்டும். அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் இவற்றைச் சமுதாயக் கடமையாக – அமைப்புகளின் வேலைத்திட்டங்களாகக்கருதி இதுபோன்ற பணிகளில் ஈடுபடவேண்டும். இவை சட்டப்படி தவறாக இருக்கலாம். நியாயப்படி தவறல்ல.

– இராயல் சேலஞ்ச்

1 Comment

  1. இறுதியாக சொன்ன”தேர்வின் போது விடையை சொல்லிகுடுக்கணும்” கருத்து முன் கூறிய எல்லா கருத்தையும் மறைத்து, நமது பார்வையையே சிதைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.