தேசியம், தேசிய இனம்: பெரியார் பார்வை

தேசியம், தேசிய இனம்: பெரியார் பார்வை

அதி அசுரன்

திராவிடர் என்ற கருத்தாக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெளத்தர் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாயங்களை ஒன்றிணைத்து மேற்கண்ட அனைத்து சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த எதிரிகளான பார்ப்பனர்களை அடக்கிவைத்து, அவர்களது ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி திராவிடர் சமுதாயத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது என்பதற்கும், திராவிடர் என்ற சொல்லை பெரியார் எதற்காகப் பயன்படுத்தினார் என்பதற்கும் பக்கம்பக்கமாக பல்வேறு தோழர்கள் பலகட்டுரைளிலும், நூல்களிலும் விளக்கங்களைக் கொடுத்துவிட்டார்கள். பெரியாரைக்கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகளுக்கு மறுப்பு, திராவிடம் – தமிழ்தேசியம் ஒருவிளக்கம் ஆகிய பெரியார் தி.க வின் நூல்களுக்கு இன்றுவரை நேர்மையான எந்தபதிலும் வரவில்லை. மாயவரத்து குணாகூட தனது இனவியல் கட்டுரையின் தொடக்கத்தில் திராவிடர் என்ற கருத்தாக்கம் சமூகத்தளத்தில் உரிமைகளைப் பெற்றுத்தந்தது என்பதை ஒப்புக்கொண் டுள்ளார். பெரியாருக்குப்பின் பெரியார் என்ற மணியரசனின் கட்டுரையில்,

“பெரியாரின் பார்ப்பன ஆதிக்க ஒழிப்புக் கருத்துகள் மதிப்பு மிக்கவை. சாதி ஒழிப்பு, பெண்விடுதலை போன்றவற்றில் அவருடைய கருத்துகள் சாரத்தில் முற்போக்கானவை. தமிழ்நாடு விடுதலை குறித்து அவர் அவ்வப்போது வெளிப்படுத்திய கருத்துகள் தமிழ்த் தேச விடுதலைக் கருத்துகளுக்குத் துணை செய்பவை. அவரது கடவுள் மறுப்புப் பரப்புரைகளும் மூட நம்பிக்கை எதிர்ப்புப் போராட்டங்களும் தமிழ்நாட்டில் பரந்துபட்ட மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின. பெருந்திரளான மக்களிடம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு சேர்த்தன. கணிசமான மக்கள் சக்தியைத் திரட்டியிருந்த அவர், அரசுப் பதவிக்கு ஆசைப்படாமல் சமூக-அரசியல் பணியாற்றியது அரிய செயல்.”

என்று கூறியுள்ளார். சமூகத்தளத்திற்குத்தானே திராவிடர் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது.  அந்த சமூகத்தளத்தில் சரியாகத்தானே திராவிடம் இயங்கியுள்ளது. அதை துரோகக்கூட்டமான மணியரசன் கும்பலே ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு என்ன மயிர் பிளக்கும் ஆராய்ச்சி? சொல்லாராய்ச்சிகளின் யோக்கியதையைப் பார்த்துவிட்டோம். அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை இனி பார்ப்போம்.

 “பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை.”

“இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித் ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

இந்தக் கோட்பாட்டுக் கோமான்கள், சமூக அறிவியல் விஞ்ஞானத்தாலும் தமது திறமையான உத்தி களாலும் இந்த தமிழ்ச்சமுதாயத்துக்கு ஒரு குண்டூசி அளவாவது, ஒரு குண்டுமணி அளவாவது இன்றுவரை பயன்பட்டிருக்கிறார்களா? அதற்கான பட்டியல், மன்னிக்கவும் ஒரு சிறு குறிப்பாவது இருக்கிறதா? தேசிய இன விடுதலை நோக்கிலான புள்ளிவிபரங்கள் சேகரிப்பு, ஆவணங்கள் உருவாக்கம் எதாவது நடந்திருக் கிறதா? எதைச் சொல்லிப் பிழைக்கிறோமோ அந்த தமிழ்த்தேசியஇன விடுதலைக்கான ஒரு சிறு நகர்வாவது நடந்துள்ளதா? எதுவுமே இல்லாமல், களப்பணியில் இறங்காமல் காகிதப்பணியில்கூட தேவையானவற்றைச் செய்யாமல்,  தமிழர் சமுதாயத்தின் வரலாற்றில் மறுக்கமுடியாத முற்போக்கான மாற்றங்களைச் செய்த திராவிடர் என்ற கருத்தியலைக் கொச்சைப்படுத்துவதிலேயே காலத்தை வீணடிப்பது ஏன்?

19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை தேசியம், தேசிய இனம் என்பவை போன்ற வரையறைகளே உலகில் இல்லை. அப்படிப்பட்ட வரையறை களைக் கொடுத்த முதலாளித்துவ நாடுகளிலோ, பாட்டாளி வர்க்க சோசலிச நாடுகளிலோ உலகில் வேறெங்குமோ “உழைக்காமல் சுரண்டிப் பிழைப்பதற்கு பிறவி அடிப்படை யிலேயே உரிமை பெற்ற ஒரு இனம் இருந்ததில்லை” உலகின் அனைத்து பாகங்களிலும் ஒடுக்கும் தேசிய இனம், ஒடுக்கப்படும் தேசியஇனம் என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தேசிய இனம் இன்ற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால் அதை எதிர்த்து தேசிய இன அடிப்படையில் அடக்கும் தேசியஇனத்தை எதிர் கொண்டு போராடலாம். நிற அடிப்படையில் ஒடுக்குமுறைகள் நடந்தால், நிற அடிப்படையில்தான் ஒடுக்கப் படும் இனம் ஒன்றிணைய முடியும். நிற அடிப்படையில்தான் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு போராடமுடியும். பொருளாதார அடிப்படையில் ஒடுக்கப்பட்டால் பொருளாதார அடிப்படையில் வர்க்கப்புரட்சி நடக்கும். இதுபற்றி தமிழ்ச்சான்றோர் பேரவையின் செய்திமடலில் இளவேனில் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையின் குறிப்பில்,

“இனம் என்கிற கருதுகோளில் இருவித தன்மைகள் உண்டு. ஒன்று நிற இனம். மற்றொன்று தேசிய இனம். தேசிய இனம் என்கிற கொள்கை புதிதாக அரும்பும் முதலாளித்துவ எழுச்சியுடன் தொடர்புடையது. தேசிய இனக்கொள்கைக்கு முன்பும் இப்போதும் கூட ஆதிக்க சக்திகளின் வலிமைவாய்ந்த கொள்கையாய் விளங்குவது நிற இனக்கொள்கையே. காலனிய ஆதிக்கத்திலிருந்தும் முடியரசின் பிடியிலிருந்தும் விடுதலைபெற விரும்பும் தேசியஇனங்களின் போராட்டங்களைக் கூட நிறவெறிக் கொள்கை நசுக்கிவிடத் துடிக்கிறது. வெள்ளை நிறத்தவர் உயர்ந்த இனத்தவர். மஞ்சள் நிறத்தவரும், கருப்பு நிறத்தவரும் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து இன்று வரையிலும் முன்நிறுத்தப்படுகிறது.

மேற்குலகில் அய்ரோப்பிய ஆதிக்கச்சக்திகளுக்கு உதவும் இந்த நிற இனக்கொள்கை இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உதவுகிறது. வருணாசிரமதர்மம் என்று இன்றும் இங்கே அது போற்றப்படுகிறது. நீ என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலாக நீ என்ன வர்ணம் என்று பல கிராமங்களில் இப்போதும் கேட்கப்படுவது உண்டு.

பார்ப்பனர் அல்லாதார் யாவரும் தாழ்ந்தவர்களே என்பதுதான் வேதங்களும், கீதா உபதேசங்களும், மனுதர்மங்களும் வலியுறுத்தும் கோட்பாடாகும்.  உயர் வர்ணத்தவரான பார்ப்பனர்களே சாத்திரப்படியும், சமூக ஏற்பாட்டின்படியும் வணக்கத்திற்குரியவர்கள்: தெய்வீக உரிமைபெற்றவர்கள் என்கிற சனாதானக் கருத்தை அரசியல் சாசனத்தால் கூட மீற முடிவதில்லை.

ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறு ஆகும் என்றால் இந்தியாவில் அது பார்ப்பனர் – பார்பனரல்லாதார் போராட்டங்களாகவும் அமைந்திருக் கின்றன. பார்ப்பனியம் அல்லது   மனுதர்மம் அல்லது நிற இனக்கொள்கை என்னும் வர்ணாச்சிரமதர்மத்திற்கு எதிராக பார்ப்பனர்களால் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் போராட்ட வடிவமாக எழுந்ததுதான் பார்ப்பனரல்லாதார் இயக்கம் அல்லது திராவிடர் இயக்கம்.

திராவிடர் என்கிற நிலைப்பாடு ஒரு தேசியஇனத்தைக் குறிப்பதாக பெரியாரோ, திராவிட இயக்கமோ சொன்னதில்லை. நிறபேதக் கொள்கையின் எதிர்ப்பு நிலையில் பார்ப்பன ஆதிக்க சக்திகளையும் பார்ப்பனியச் சிந்தனைகளையும் மறுக்கும் எதிரணி- எதிரினம் என்கிற பொருளிளேயே திராவிடஇனம் என்கிற கருதுகோள் முன்வைக்கப் படுகிறது. பார்ப்பனிய நிறவெறிக்கொள்கையின் அவலங்களையும், அபாயங்களையும்  மூடிமறைக்க விரும்புவோர்க்கு திராவிடஇனம் என்பது அறிவியல் அடிப்படை அற்ற தாகவே தோன்றும்.”

என்று மிகத்தெளிவாக பார்ப்பன மனவியல் அறிவியல் அறிஞர்களை அம்பலப்படுத்துகிறார் இளவேனில். அந்த அறிவியலாளர்கள் சொல்லும் தேசம், தேசிய இனம், தேசியம்  குறித்த அறிவியல் பார்வை பற்றியும் பார்ப்போம்.

தேசம் என்றால் என்ன?

வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, நிலையான வாழ்க்கையினைப் பெற்ற மக்கள்சமூகம், மக்கள் அனைவராலும் வழங்கப்படும் பொதுமொழி, பொருளாதாரப் பிணைப்பும் ஆட்சியும், பொதுவான நோக்கங்களும் உறவுகளும் ஏற்படுத்தித்தரும் மனஇயல்பு ஆகியவரை வரலாற்று அடிப்படையில் தொடர்நிலைகளாக இணைந்து உருவாவதே ‘தேசம்’ ( Country Of State)

தேசிய இனம் என்றால் என்ன?

ஒரு பொது மொழி, பொதுபிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகமே தேசியஇனம். – ஆதாரம்: ‘சோவியத் யூனியனின் தேசங்களும், தேசிய இனங்களும்’ நூல்

தேசியம் என்றால் என்ன? ( Nationalism or Nationality )

ஒருவனால் தனது நாட்டின்மீது மதச்சார்பற்ற நிலையில் உணர்வுப்பூர்வமாக வைக்கப்படும்பற்று.

ஆதாரம் : என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா 1981

பார்ப்பன மனவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டும் அறிவியல் பூர்வமான சமூகவரையறகள்தான் இவை. தேசிய இனம் என்பதற்கு பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு, பொது பிரதேசம் என்பவற்றோடு வரையறைகள் முடிந்துவிடவில்லை. “பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வரலாற்று ரீதியாக உருவாகிய மக்கள் சமூகம்” என்ற வரிகள் முக்கியமாக உள்ளன. தமிழ்த்தேசியம் என்ற வரையறையில் பொதுவான பண்பாடோ, பொதுவான மனஇயல்புடன் கூடிய உறவுகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்பண்போ எங்கே இருக்கிறது? ஒவ்வொரு சாதியும் இங்கே ஒவ்வொரு தேசிய இனம் என்ற அளவில் வேறுபட்டுத்தானே நிற்கிறது?

தேசிய இனங்களுக்கு இடையேகூட கொள்வினை, கொடுப்பினைகள் நடந்து விடுகின்றன. சாதிகளுக்குள் திருமண உறவுகள் இயல்பாக இருக்கிறதா? விவேக் ஓபராய் குடும்பமும் தமிழ்நாட்டு மன்றாடியார்( கவுண்டர்)  குடும்பமும் திருமண உறவு வைத்துக்கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் மன்றாடியார் வீட்டுக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் நுழையக்கூட முடியாது.  பிறப்பு முதல் இறப்பு வரை, இன்னும் சொல்லப்போனால் கற்பனையான சொர்க்கம், நரகம் ஆகியவற்றிற்குச்  சென்றடையும் வரைகூட ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனி பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், வெவ்வேறுபட்ட அங்கீகாரங்கள் என தமிழ்ச் சமுதாயம் பல்வேறு தேசிய இனங்களாகப் பிரிந்துதானே உள்ளது. தில்லைவாழ் அந்தணர்களின் பண்பாடும், மனஇயல்பும் ஆறுமுகநாவலரின் சொந்தங்களின் பண்பாடும், மனஇயல்பும் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்?

“நாங்கள் அந்தணர்கள்” இருமாப்புப் பேசிக்கொண்டு ஆதிக்கத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சங்கராச்சாரிக்கும் – உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றிபெற்ற பின்பும் தான் அமர வேண்டிய உள்ளாட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஒரே அடிப்படையில் மொழி அடிப்படையில் தேசிய இன விடுதலை கோருவதானால் அந்த தேசிய இன விடுதலை யாருக்கு இலாபமாக இருக்கும்? அப்படிப்பட்ட முயற்சி எப்படி அறிவுப்பூர்வமானதாக இருக்கும்?

பெரியார் தேசீயம் குறித்தும் தேசம் குறித்தும் பேசிய மிக விரிவான உரை ஒன்று குடி அரசில் உள்ளது.  1932 ஆம் ஆண்டில் ஐரோப்பியநாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு கொழும்பு வழியாக தமிழ்நாட்டுக்கு வந்தார். கொழும்பு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை போன்ற பல இடங்களில் பேசிய உரை களின்  தொகுப்பு இது.

தேசீயம்

தேசீயம், தேசீயம் என்பதும் முற்கூறியவைகளை போன்ற ஒரு போலி உணர்ச்சிதான். ஏனெனில் தேசீய உணர்ச்சி என்பதானது இன்று உலக பொது மக்கள், அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையாய் இருந்து வரும் மக்கள் தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்கும் வாழ்விற்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் ஒரு உண்மையை மறைப்பதற்கும் மற்றும்  அப்படிப்பட்ட கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்கு பரிகாரம் தேடுவதை தடைப் படுத்தவும் ஆங்காங்குள்ள செல்வந்தர்களால் அதிகாரப் பிரியர்களால் சோம்பேறி வாழ்க்கை சுபாவி களால் கற்பிக்கப்பட்ட சூøயாகும். தேசீயம் என்பதும்  மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.

தேசம் என்றால் எது?

தேசம் என்றால் எது? உலகப் பரப்பு ஐந்து கண்டங்களாகப் பிரிக்கப் பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு  மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக் கின்றன. இவைதவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும் மாகாணத்திலும் பல மாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்பிரிவுகளும், பல பழக்க வழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வக் கட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசீய கொள்கை என்றும் தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாது என்றும் இவைகளில் எதையும் காப்பாற்ற உயிர் விட்டாவது முயற்சிக்க வேண்டும் என்றும் கருதிக்  கொண்டிருப்பதாகும். இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய் பார்க்கின்றோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி, ஏழை – பணக்காரன், கீழ் நிலை – மேல் நிலை, கஷ்டப் படுகின்றவன் – கஷ்டப்படுத்துகிறவன் முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தை பிரித்துக் கொண்டு தங்களுக்கென தனித்த தேசம் தேசீயம் என்ற ஒன்றைச் சொல்லிக் கொள்ளுவது என்பது எனக்கு புரிய வில்லை. நமது தேசம் என்று எந்த விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதிலுள்ள மனிதர்களின் நிலை என்னென்னவோ, அதுதான் மற்ற எந்த தேசம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களா கவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றார்களோ அவ்வளவு நிலையில் தான் மற்ற தேசத்தார் என்கின்ற மக்களும் இருந்து வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்த விதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கின்றோமே, அந்த விதமான துயரம் கொண்ட மக்கள் அன்னிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகின்றார்கள். நம்முடைய தேசீயம் என்பதிலேயே எந்த விதமான மக்கள் சோம்பேறி களாகவும் சூழ்ச்சிக் காரர்களாகவும், செல்வவான்களாகவும் அரசாங்க ஆதிக்கக் காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொது ஜனங்களை பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கி பட்டினி போட்டு வதைத்து தாங்கள் பெருஞ் செல்வம் சேர்த்து வாழ்ந்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ அது போலத்தான் அன்னிய தேசம் என்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டு பெரும் பான்மையான மக்களை கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். இந்த நிலைமையில் என்னக் கொள்கையைக் கொண்டு எந்த லட்சியத்தைக் கொண்டு உலகப் பரப்பில் ஒரு அளவை மாத்திரம்  பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேள்க்கின்றேன்.

துருக்கி தேசத்துக்கும், இந்தியா தேசத்திற்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதரா பாத்துக்கும் மைசூருக்கும் யுத்தம்  தொடங்கினால் ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே தேசம் தேசாபி மானம் என்கின்ற வார்த்தைகளும் கடவுள் மதம் என்பது போன்றே ஒரு  வகுப்பாருடைய சுய நலத்திற்கு ஏற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்ல வேண்டியிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலா ளியும் மற்ற தேச  முதலாளிகளுடன்  சண்டை போட்டு தங்கள் தங்கள் முதலை பெருக்கிக் கொள்ள ஏழை மக்களை – பாமர மக்களை பலி கொடுப்பதற்காக கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

உதாரணமாக இங்கிலாந்து  தேச முதலாளிகள் அமெரிக்கா நியூயார்க் தேச  முதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்று தங்கள் செல்வத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஆசை ஏற்பட்டால் அல்லது நியூயார்க் முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேசத்துக்கு முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை  கொள்ள முயற்சிப் பதாயிருந்தால்  இங்கிலாந்து தேசத்து முதலாளிகள் இங்கிலாந்து தேசது ஏழைமக்களையும் பாமர மக்களையும் பார்த்து “ஓ இங்கிலாந்து தேசீய வீரர் களே, தேசாபிமானிகளே தேசத்துக்கு நெருக்கடி வந்து விட்டது. இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள் ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை  அமர்த்தியும் வயிற்றுப் பிழைப்பு பத்திரிகை காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரசாரம் செய்விப்பார்கள். இது போலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடி நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமர மக்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்ப தாகவும், கூவிக் கொண்டு கூலி கொடுத்து பிரசாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழை மக்களும் மற்றும் சாப்பாட்டிற்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்று கொள்ளுவார்கள் சிறைப்பிடிப்பதின் மூலம் இரு தேச சிறையையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால் இரு கøயிலும் பத்து லக்ஷக் கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் ராஜியாகப் போயோ அல்லது யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.

ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும், அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில்  பத்திர மேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்கு சுடுகாடும் அவர்கள் பெண் ஜாதிகளுக்கு சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசித்துப் பாருங்கள். அமெரிக்கா  குடி அரசு நாடாவதற்கும் அன்னிய ஆøயைத் துரத்துவதற்கும் அமெரிக்க ஏழைமக்கள் தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடு பட்டிருப்பார்கள் எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள்  என்பதை அமெரிக்கா “விடுதலைச் சரித்திரத்தை புரட்டிப் பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான் களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்கும் குறைந்ததல்ல.

தோழர்களே! அமெரிக்கா தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்கா அன்னிய ஆட்சியை ஒழித்தாலும் ஒரு அரசனையே விரட்டி விட்டு “குடிகளின் ஆட்சி” ஏற்படுத்திக் கொண்டதாலும் ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்பட்டது என்பதை மற்றொரு தரம் யோசித்துப் பாருங்கள்.

இந்த லங்கையில் இருந்து கொண்டு இந்திய தேசாபிமானம் பேசும் தேசீய வீரர்களைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்,  அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேருக்கும் 100க்கு 90 பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தை சுரண்டிக் கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர் களாய் – அடிமைகளாய் இருப்பவர்களும் ஆகும்.

லேவாதேவிகாரர்கள் பெரிதும் மாதம் 100க்கு 12 வரை வட்டி வாங்கி ஏழை மக்களையும் இலங்கைவாசிகளையும் பாப்பராக்கி கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், விவசாயக் காரர் பெரிதும் இலங்கை பூமிகளை ஏராளமாய் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்து பொருள் சேர்த்து கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கை செல்வத்தை கொள்ளை கொண்டு போக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆøயில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டு பணம் சுரண்டிக் கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம் பிடித்த வன்னெஞ்ச பார்ப்பனர்களு மாகக் கூடிக் கொண்டு இந்திய தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.

வெள்ளைக்காரனான அன்னியன் 100 -க்கு வருஷம் 6 வட்டிக்கு கொடுத்தால் கருப்பனான அன்னியன் 100க்கு ¯மாதம் 6 வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால் கருப்பன் ஏழைகளிடம், கூலிகளிடம் வட்டி வாங்கி கொடுமைப் படுத்துகிறான்.

இந்தப்படி மக்களை சதித்து கொள்ளை அடிப்பவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம் மதாபிமானம் தேச அபிமானம் பேசுகிறார்கள்.

ஆகவே இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம், என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்து விடுங்கள். அவை ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்காது, உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புக்கள் இருக்கவும் ஏழைகளைத் தொழிலாளிகளை, பணக்காரரும் சோம்பேரிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும் தான் பயன்படும். – குடி அரசு- 20.11.32

தேசியம், தேசம்  என்பவைகளின் யோக்கியதையை ஆழமாக, தன் அனுபவ அறிவின் மூலமாக அறிவுப்பூர்வமாக விளக்கிவிட்டார் பெரியார். இந்த உரை மட்டுமல்ல, குடி அரசில் தேசியம் குறித்து பல்வேறு கட்டுரைகளையும் எழுதி தேசிய இன விடுதலை என்பதில் உள்ள பித்தலாட்டத்தை நாம் எளிதில் புரிந்துகொள்ள வைக்கிறார் பெரியார்.

முதலாளித்துவ சுரண்டல் தத்துவமாகவே இருந்தாலும், தேசிய இன விடுதலை பேசும் ஐரோப்பிய, உலக நாடுகளில் ஒடுக்கும் தேசிய இனத்துக்கென்று ஒரு பொது மொழி இருக்கும், பொதுப் பண்பாடு இருக்கும். பொதுவான நிலப்பரப்பும் இருக்கும். ஆனால் இந்தியாவில் அனைத்து தேசிய இனங்களுக்குள்ளும் மோதலை உருவாக்கி, தேசிய இனங்களுக்கிடையே போரை உருவாக்கி அந்த மோதலில், அந்தத் வெப்பத்தில் கதகதப்பாகச் சுரண்டலை நடத்திவரும் பார்ப்பனர்கள் ஒரு தனித்த தேசிய இனமும் கிடையாது. எந்த தேசிய இன வரையறைகளும் அவர்களுக்குப் பொருந்தவும் பொருந்தாது. இந்தியா முழுமைக்கும் அவர்களை இணைப்பது, இந்தியாவையும் இணைப்பது  அவர்களது சுரண்டல் ஆயுதமான சமஸ்கிருதம், வர்ணாஸ்ரமம், மனுதர்மம்,  இந்துமதம், இராமாயண, பாரத புராணங்கள், இந்துக் கடவுள்கள் ஆகியவைகளே. அனைத்து தேசிய இனங்களுக்கும் எதிரியான ஆரிய இனத்தையும் அவர்தம் அடையாளங்களையும் அழிக்க திராவிடர் என்ற தத்துவமே தேவையானது. அறிவியல் பூர்வமாக நிருபிக்கவும்பட்டது.

இந்தியா முழுவதிலும் கிளைகளைப் பரப்பி அனைத்து மாநிலங்களையும் சுரண்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு அந்தணனான டி.வி.எஸ் அய்யங்கார்களுக்கும், $ராம் குழும பார்ப்பனர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் ஸையும், பார்ப்பனர்களையும் தோள்மீது தாங்கிக்கொண்டு அவர்களுக்குச் சேவகம் செய்துகொண்டு அதன் பயனாக கர்நாடகாவிலும்  பல்வேறு வடமாநிலங்களிலும்  பல்லாயிரங்கோடி முதலீடுகளில் தொழில்களை நடத்திவரும் பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற பார்ப்பன அடிமைகளுக்கும் இந்தத் தேசிய இனவிடுதலை பயனாக இருக்கலாம். அதே பொள்ளாச்சி பகுதியில் டீக்கடையில்கூட தனி இடத்தில் மறைவாக உட்கார வைக்கப்பட்டு சிரட்டையில் டீ குடிக்க வைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தேசியஇன விடுதலையால் என்ன பயன்?  உணவகங்களில் தரையில் உட்கார வைக்கப்பட்டு சிற்றுண்டி உண்ணவைக்கப் படும் சமுதாயத்துக்கு என்ன பயன்? கவுண்டர் டீஸ்டால் உங்கள் தேசிய இனப் புரட்சியால் கவுண்டர் தேநீரகம் என்று வேண்டுமானால் மாறலாம். கவுண்டர் என்ற இழிவோ, அந்தக் கவுண்டரால் நடைமுறைப்படுத்தப்படும் இழிவோ மாறுமா?

தேசிய இனம் என்ற கருத்தியலால் இதுவரை அப்படி ஒரு மாறுதல் நடந்தது என்ற சிறு குறிப்பாவது, ஒரு செய்தியாவது உள்ளதா? சாணிப்பாலையும், சவுக்கடிகளையும் ஒழித்தது எந்த தேசிய இனப்புரட்சி?   கள்ளுக்கடைகளில்கூட வைக்கப்பட்டிருந்த மூன்று சொம்புகளை உடைத்தெறிந்தது எந்த தேசிய இனப்புரட்சி? மனுதர்மத்தைக் கொளுத்தியது; இராமாயணத்தை எரித்தது; இாரமனை எரித்தது; இந்திய அரசியல் சட்டத்தையே கொளத்தியது இவையெல்லாம் எந்த தேசிய இனப்புரட்சி? அந்த வகையாக புரட்சிதான் தமிழனுக்குத் இன்றும் தேவை. அதைச் செய்து காட்டியதும், இறுதி முடிவு கட்டப் போவதும் திராவிடர் என்னும் கருத்தியலே. அந்தச் சொல் தமிழா? அதை யார் யார் , எதற்காகப் பயன்படுத்தினார்கள், அந்தச் சொல் உங்கள் வரையறைக்குள் வருமா என்பதெல்லாம் அந்தக் கருத்தியலால் பயன்பெறும் ஒடுக்கப் பட்ட மக்களுக்குத் தேவையற்ற ஆராய்ச்சி. எந்த இலக்கணங்களுக்கும் கட்டுப்படாத இலக்கியம் திராவிடம்.

ஒரு தேவை கருதி, சூழல்கருதி, நோய் கருதி பெரியாரால் கையாளப்பட்ட மருத்துவமே திராவிடர் கருத்தியல். அந்த நோயின் அழிவுதான் அதற்கான அறிவியல்பூர்வமான நிருபணம். அந்த நோயின் அழிவிற்குப் பிறகு தான் அந்த மருத்துவத்தின் தேவை அற்றுப்போகும். உலகெங்கிலும் இப்படிப்பட்ட தேவை கருதியே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் சொன்னதற் காகவோ, ஐரோப்பாக்காரன் சொன்னதற்காகவோ அவர்கள் சொன்னபடி இம்மிஅளவுகூட மாறாமல் எந்த நாட்டிலும் தேசிய இனப்புரட்சி நடந்ததில்லை. அது குறித்து தோழர் சுபவீ அவர்கள் தமது “பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்” என்ற நூலில் விளக்கியுள்ளார்.

“ தேசிய இனங்கள் தங்களின் சுயநிர்ணய உரிமை அல்லது தன்னுரிமைக்காக நடத்தும் போராட்டங்களையே நாம் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் என்று அழைக்கிறோம்.  தங்கள் தேசிய இனத்தின் சமூக, அரசியல், பொருளாராரச் சிக்கல்களுக்கான தீர்வை தாமே எடுக்கும் உரிமைதான் தன்னுரிமை.  இத்தகைய போராட்டங்கள் அடிப்படையில் இரு குணங் களைக் கொண்டவை.  அடையாளம், ஜனநாயக உரிமை என்னும் இரு அடிப்படைகளில்தாம் தேசிய இனப்போராட்டங்கள் வலிமை பெறுகின்றன.  அடையாளம் என்பது என்ன, மொழியா, மதமா, மரபினமா, புவியியல் தன்மையா என்னும் கேள்விக்குப் பல்வேறு விடைகள் உள்ளன.  மொழிவழி தேசியம், மதவழித்தேசியம், நிலவழித்தேசியம் என்று எல்லா வகை அடையாளங்களும் உலக நாடுகளில் காணப்படுகின்றன.  ‘அயர்ஷ் மொழி பேசும் நாங்கள் தனித் தேசிய இனம், எங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும்’ என்றுதான் அயர்லாந்துப்போராட்டம் எழுந்தது, அது மொழிவழி தேசியம்.

இஸ்லாமியர்களாகிய எங்களுக்குத் தனிநாடு வேண்டும்’ என்பது தான் இந்திய முஸ்லீம் லீக்கின் கோரிக்கை அப்படித் தான் பாகிஸ்தான் பிரிந்துபோனது. அது மதவழி தேசியம். பஞ்சாபியர்கள் என்னும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள், இந்துக் கள், இசுலாமியர்கள் என்று மத அடிப்படையில் பிரிக்கப்பட்டு கிழக்கு பஞ்சாப் இந்தியாவோடும், மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடும்  இணைக்கப்பட்டது.  இனவழி தேசியத்தை மதவழி தேசியம் அங்கு வென்றது….

…அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கரையோரமாகக் கொண்டுள்ள மொரோக்கோ தொடக்கம், பாரசீக வளைகுடா வரை, 8 கோடி மக்களுக்கு மேலாக, சாராம்சத்தில் ஒரே மொழியைப் பேசுகின்றனட்ச். ஒரே மதத்தைப் பின்பற்று கின்றனர்… ஒரு காலத்தில், ஒரே அய்ரோப்பிய ஏகாதிபத்தியத்தினால் அனைவரும் ஒடுக்கப்பட்டனர்.  இத்தனை ஒற்றுமைகள் இருந்தும் அவர்கள் ஒரு நாட்டினராக இல்லாமல், இன்று பல்வேறு நாட்டினராகப் பிரிந்தே உள்ளனர். இந்த மக்களில் எவரையேனும் பார்த்து, நீங்கள் எந்தத் தேசிய இனத்தைச் சேர்ந்தவர் என்று கேட்டால் ஒருவர் கூட தான் அராபியர் என்று விடையளிக்கமாட்டார். மாறாக, மொரோக்கன் என்றோ, எகிப்தியன் என்றோ, ரோமனியன்  என்றோதான் விடையளிப்பர்”….எனவே அடிப்படையில் தேசிய இனங்களுக்கான நாடுகளை அமைப்பது என்ற கேள்வி இப்போது எழுகின்றது. நில அடிப்படையில் தேசங்களும், நாடுகளும், அமைப்புகளும், கண்டங்களின் அடிப்படையில் ஏழு அரசுகள்தான் உலகில் இருக்க முடியும். மத அடிப் படையில் அமைந்தாலும் ஏழு, எட்டு அரசுகளுக்குள் அதிகம் போனால் பத்து அரசுகளுக்குள் உலகைப் பிரித்து விடமுடியும்.  மொழிக்கு ஒரு நாடென்றால், உலகில் பல்லாயிரம் நாடுகள் தோன்றி விடும். ஒரே மொழிக்காரர்கள் பல நாடுகளாகப் பிரிந்துள்ளனர். ஒரே நாட்டில் பல மொழிகள் பேசப்படுவதும் உண்டு. இனம்,மதம் ஆகிய வற்றிற்கும் இது பொருந்தும். ..

..காஷ்மீரில் மொழி, இனம், மதம் எனப் பல்வேறு அடிப்படையில் போராட்டம் நிகழ்கிறது. நாகலாந்து விடுதலைப் போராட்டம் வேறு மாதிரியானது. அங்கு ‘ஒரு பொது மொழி’ என்னும் கோட்பாடு பொருந்த வில்லை.  ஒன்பது மொழிகளைக் கொண்ட நாகா இனக்குழுவினர் ஒருங்கிணைந்து, நாகாலாந்தின் விடுதலை கோரி இனவழித் தேசியப் போரில் ஈடுபட்டு உள்ளனர். இவை அனைத்தையும் ஒப்பிட்டு பார்க்கும் வேளையில், தேசிய இனப் போராட்டத்தில், பலவிடங்களில் மொழி முதன்மைப் பாத்திரம் வகிப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், மொழியின் அடிப்படையில் மட்டுமோ அல்லது வேறு எந்த ஒன்றின் அடிப்படையில் மட்டுமோ தேசிய இனப் போராட்டம் எழும் என்று கூற முடியவில்லை. தங்களின் அடை யாளத்தைக் காப்பாற்றிக் கொள்வதென்பதே தேசிய இனப் போராட்டத்தின் முதல் அடிப்படை யாக உள்ளது.  தங்களின் முதன்மையான அடையாளம் எது என்பதில் இடம், சூழலுக்கு ஏற்ப வேறுபாடுகள் ஏற்படுகின்றன.”

தோழர் பெரியார், தோழர் சுபவீ ஆகியோரது கருத்துக்களுக்குப் பிறகு, பேராசிரியர் ஜெயராமன், மணியரசன் கும்பல்களின் ஆராய்ச்சிகளை மீண்டும் படித்துப்பாருங்கள்.

“பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை,”  “இனம், தேசிய இனம், தேசம் குறித்த சமூக அறிவியல் வரையறைகளைப் புறக்கணித்ததால், இவை சார்ந்த கருத்தியல் எதையும் பெரியாரால் உருவாக்க முடியவில்லை.”

யாரிடம் கோட்பாட்டுப் பஞ்சம் என்பதும், யாரிடம் சமூக அறிவியல் வரையறைகள் இல்லை என்பதும் பார்ப்பனத்தனமான இந்தக் குற்றச்சாட்டுகளின் யோக்கியதை என்ன என்பதும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.