திராவிடர் திருமணம்

kaattaaru living together

திராவிடர் திருமணம்

– அதி அசுரன்

தமிழன், தெலுங்கன், கன்னடன், மலையாளி, குஜராத்தி, பீகாரி என இந்தியத் துணைக்கண்டப் பகுதியில் வாழும் எந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழீழத் தமிழனாக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் சிறைப்படுத்தி வைத்திருப்பது பார்ப்பன மனுசாஸ்திரப் பண்பாடு. அதை அனைத்து தேசிய இனங்களின் அடையாளங்களையும் சிதைத்து, பார்ப்பன மேலாதிக்கப் பண்பாட்டை திணித்து இன்றளவும் நடைமுறைப்படுத்தி வருபவர்கள் ஆரியப்பார்ப்பனர்கள். நமது வாழ்க்கையின் முக்கியமான பண்பாட்டு நிகழ்வான திருமணம் என்ற களத்தில் மனுசாஸ்திரம் விதித்த கட்டளை என்ன என்று பார்ப்போம்.

“துவிஜர்கள் ( பிராமணர், க்ஷத்திரியர் ) முக்கியமாக திருமணம் செய்யும் போது தன் ஜாதியிலேயே செய்துகொள்ள வேண்டும்.” -மனு சாஸ்திரம் அத்தியாயம் 3, ஸ்லோகம் 12

“சூத்திரன் தன் ஜாதியில் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும்.” – மனு சாஸ்திரம் அத்தியாயம் 3, ஸ்லோகம் 13

“பிராமணர்களும், க்ஷத்திரியர்களும் தன் ஜாதியில் பெண் கிடைக்காத ஆபத்துக்காலத்திலும் சூத்திரப்பெண்ணைத் திருமணம் செய்யக்கூடாது.”
-மனு சாஸ்திரம் அத்தியாயம் 3, ஸ்லோகம் 14

“தன் ஜாதியைவிட தாழ்ந்த ஜாதியில் திருமணம் செய்பவர்கள் தங்கள் குலத்தையும், குழந்தைகளையும் சூத்திரத்தன்மையை அடைய வைக்கிறார்கள்.” – மனு சாஸ்திரம் அத்தியாயம் 3, ஸ்லோகம் 15

எந்த ஒரு ஜாதிக்காரனும் தன் ஜாதியைத் தாண்டி பெண் பார்க்கக்கூடாது என்ற மனுவின் பார்ப்பனக் கட்டளையை உடைத்தெறிந்தவர்கள் எத்தனைபேர்? ஆரியப் பண்பாட்டை மீறியவர்கள் எத்தனை பேர்?

பார்ப்பன, இந்துப்பண்பாடு திருமணம் குறித்த தனது கருத்தைத் தெளிவாக் கூறியுள்ளது. தமிழ்ப்பண்பாடு திருமணம் குறித்து வரையறுப்பது என்ன? இதோ தொல்காப்பியம் கூறுகிறது.

பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயி
னிறையே யருளே யுணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த வொப்பினது வகையே – தொல்காப்பியம் 1219

பிறப்பு, குடிமை, ஆண்மை அல்லது பெண்மைப் பண்பு, வயது, அழகு, காதல், அறிவு, பரிவு,அடக்கம், செல்வம் ஆகியவற்றில் சரிநிகர்த்தவாராக இருக்க வேண்டும். முதல் பொருத்தம், முக்கியப் பொருத்தமாக பிறப்புப் பொருத்தத்தை முன்வைக்கிறது தொல்காப்பியம். தொல்காப்பியக் காலத்திலேயே திருமணத்திற்கு ஜாதிப் பொருத்தம், ஜாதிக் கடமை, ஜாதிப் பண்பாட்டுப் பொருத்தம் தான் அடிப்படையாகப் பார்க்கப்பட்டுள்ளது.

உடன்போக்கு, களவுமணம் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் கூறும் காதல் திருமணங்கள் சங்க காலத்தில் நடந்திருக்கின்றன. இதோ கலித்தொகை பாடல் வழியாக ஒரு களவுக்காதலைக் காண்போம்.
…காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக் கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்
நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உற தழீஇ போதந்தான் அகல் அகலம்,
வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே;
அவனும் தான், ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரைத்,
‘தேனின் இறால்’ என, ஏணி இழைத்திருக்கும்
கான் அகல் நாடன் மகன்…

‘யாவரும் விரும்பும் விரைந்து ஓடும் காட்டாற்றில், எம்முடன் கலந்து நீராடுகின்ற இவள் தாமரை மலர் போன்ற தன் கண்களை மூடி, அஞ்சி கால் தளர்ந்தாள். நீர் தான்போகும் போக்கில் இவளை இழுத்துச் சென்றது, அப்போது நீண்ட சுர புன்னையின் வாச மலர்களால் ஆன குளிர்ந்த மாலை அசைய, ஆற்றில் பாய்ந்து, நகையணிந்த இவள் மார்பை தன்னொடு தழுவி கரை சேர்த்தன் ஒருவன். அவனுடைய அகன்ற மார்பை இவளது வளர்கின்ற கொங்கைகள் கூடின’ என்று பிறர் கூறுகின்றார். அந்த கூற்றாலே என்னுடைய தோழி நமக்கு அரிய மழையை பெய்விக்க நாம் விரும்பினால் அதை தரவல்ல பெருமை உடையவளே!
அவனும் மட்டும் என்ன? விண்ணைமுட்டும் மரங்களையுடைய அடர்ந்த – அகன்ற காட்டை யுடைய நாட்டு தலைவனின் மகன்.

அதாவது அவனும் நம்மைப் போல வேடர் குலத்தான் தான். கவலைப்படாதே மணம்புரிந்து கொள்ளலாம் என தோழி தலைவிக்குக் கூறவது போல உள்ள விரிவான பாடல் இது. சுருக்கமாகக் கூறியுள்ளோம்.
பத்துப்பாட்டில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் கபிலர் எழுதிய பாடல் ஒன்றில்

கொடுப்பினன் குடைமையும் குடிநிர லுடைமையும்
வண்ணமம் துணையும் பொரீஇ எண்ணாது
எமியேம் துணிந்த ஏமஞ்சால் அருவினை
நிகழ்ந்த வண்ணம் நீநனி யுணரச்
செப்பல் ஆன்றிசின் சினவாது ஈமோ

சங்க காலத் தமிழர்கள் தமது மகன் அல்லது மகள் திருமணத்தின் போது குடிப்பொருத்தம் அதாவது ஜாதிப்பொருத்தம் இருக்கின்றதா? செல்வப்பொருத்தம் இருக்கின்றதா? என எண்ணிப் பார்த்தே மண நிகழ்விற்கு ஒப்புதல் அளித்திருக்கி றார்கள். அதனை எண்ணிப்பார்க்காமல் ஒருவனைக் காதலித்து விட்டாள் தலைவி. அவள்மீது கோபம் கொள்ளாமல் பொறுத்து அருளும்படி தலைவியின் தோழி தாயிடம் கெஞ்சுகிறாள். அதைத்தான் இந்தக் குறிஞ்சிப்பாட்டு தெரிவிக்கிறது.

இதுபோல களவுக்காதல், உடன்போக்குக் காட்சிகள் சங்க இலக்கியங்களில் ஏராளமாக உள்ளன. ஜாதியைக் கடந்தும் காதலித்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் காதல்கள் இளவரசன் – திவ்யா காதலைப் போலவே எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கின்றன. ஒரே ஜாதிக்குள் ஒரே குலத்திற்குள் கொண்ட காதல்கள் திருமணத்தில் முடிந்திருக்கின்றன. அதைத்தான் கலித்தொகையும், குறிஞ்சிப்பாட்டும் நமக்கு உணர்த்துகின்றன.

நம்மை வழிநடத்தும் ஆரியப்பண்பாடோ, தமிழ்ப்பண்பாடோ எதுவாக இருந்தாலும் அவை திருமணங்களில் ஜாதி மீறுதலைக் குற்றமாகத்தான் காட்டியுள்ளன. இவற்றுக்கு மாற்றாக பெரியார் தொடங்கிவைத்த திராவிடர் பண்பாடுத் திருமணங் கள் முதலில் பார்ப்பனச் சடங்குகளை மட்டும் மறுத்த சுயமரியாதைத் திருமணங்களாகத் தான் தொடங்கின. சுயமரியாதைத் திருமணங்கள் தொடக்கத்தில் ஒரே ஜாதிக்குள் தான் நடைபெற்றன. பெரியார் தனது குடிஅரசு ஏட்டில் 1929 ஆம் ஆண்டே எழுதுகிறார்.

“சமீப காலத்தில் எங்கும் சுயமரியாதைத் திருமணங்கள் நூற்றுக்கணக்காய் நடந்ததாக செய்திகள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்…இவ்வியக்கம் தோன்றிய இவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்களை நீக்கிய திருமணங்களும், மூடச்சடங்கை நீக்கிய செய்கைகளும் சந்தோஷமடையத்தக்க அளவு நடந்து வந்தாலும், விதவா விவாகம், கலப்பு மணம் முதலியவைகள் நாம் எதிர்பார்த்த அளவுக்கு 100 ற்கு 1 – பங்கு கூட நடத்தப்பட்டதாய் சொல்வதற்கில்லை. தோழர்கள் அதற்கு முயற்சி செய்யவேண்டும்.” குடி அரசு – 15.09.1929

தொடர்ந்து 1929 ஆம் ஆண்டிலிருந்தே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கிவிட் டன. ஜாதி மறுப்பு, மதச்சடங்குகள் மறுப்பு, பார்ப்பன புரோகித மறுப்புத் திருமணங்கள், குழந்தை குட்டிகளுடன் திருமணம், முதல் கணவன் சம்மதத்துடன் மறுமணம், முதல் மனைவியுடன் மனம் ஒன்றி வாழ விரும்பாத கணவனுக்கு, இரண்டாவது திருமணம் என திருமண முறைகளில் ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக இருந்த இந்து மதத்தடைகளை உடைத்தெறிந்து உண்மையான அறிவியல் முறையி லான திருமணங்களை பெரியார் நடத்திவைக்கத் தொடங்கினார்.

“நாடார் நாடாரையும், வன்னியர் வன்னிய ரையும், நாயுடு நாயுடுவையும், அய்யர் அய்யரையும், முதலியார் முதலியாரையும், ஆதிதிராவிடர் ஆதி திராவிடரையுமே திருமணஞ் செய்து கொண்டிருந் தால், இன்னும் பத்து நூறாண்டுகள் ஆனாலும் ஜாதி ஒழியப்போவதில்லை.” என முழங்கினார்.

அடுத்தபடியாக அடுத்தகட்ட விமர்சனத்தையும் தொடங்குகிறார். தான் உருவாக்கிய புரட்சிகரத் திருமணங்கள் வெறும் சடங்காக – நாகரீக நடவடிக்கையாக – ஆடம்ப விழாக்களாக நடத்தப் பட்டு வருவதை கடுமையாக விமர்சிக்கிறார்.

பதிவுத்திருமணம் மட்டுமே போதும். அதற்கு சாட்சிக் கையெழுத்திற்காக இரண்டு நபர்கள் இருந்தால் போதும். அதற்கு மேல் திருமணத்திற்கு ஆட்களைக் கூட்டுவதையும், செலவு செய்வதையும் குற்றமென்கிறார்.

அப்படி ஜாதி – மதச்சடங்கு – ஆடம்பர மறுப்புத்திருமணம் செய்துகொண்டாலும் அந்த மணவாழ்வில் ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு அறவே கூடாது என்கிறார்.

1929 லேயே ”இன்பத்திற்காக கல்யாணம் என்றால் அதற்கேற்ற முறையில் கல்யாணத்திட்டம் அமைக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றப்படி இன்பமும் காதலும் அல்லாமல் வெறும் உலகத்தை நடத்துவதற்கும் உலக விருத்திக்கு என்று புலபுலென பிள்ளைகளைப் பெறுவதற்கும் ஆண்மக்களுக்கு அவனது வாழ்வுக்கும் கீர்த்திக்கும் திருப்திக்கும் நிபந்தனையற்ற நிரந்தர அடிமையாகப் பெண் இருப்பதற்கும் தான் கல்யாணம் என்பதானால், அம்மாதிரி கல்யாண வாழ்க்கையில் நமது பெண் மக்கள் ஈடுபடுவதை விடக் கல்யாணமே இல்லாமல் வாழுவதையோ அல்லது அவர்கள் இஷ்டப்படி சர்வ சுதந்திரத்தோடு நடந்து கொள்வதையோ தான் நாம் ஆதரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம்” என பெண்கள் தனித்து வாழ்வதை ஆதரித்து எழுதுகிறார்.

திருமணங்களைப் பற்றி மிகக்கூர்மையாக “சம சுதந்திரத்தில் இயற்கை உணர்ச்சியில் சமசந்தர்ப்பம் அளிக்கப் படாத முறையைக் கொண்ட கல்யாணங்களை நாம் விபசார வாழ்க்கை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது”என்றார்.

ஆரியப் பண்பாட்டுக்கு மாற்றாக – சங்கத்தமிழ் இலக்கியங்கள் காட்டும் பண்பாட்டிற்கு மாற்றாக திருமணம் என்னும் களத்தில் பெரியார் காட்டும் திருமண முறைகளையே நாம் முன்மொழிகிறோம்.

ஜாதி மறுத்து – மதச்சடங்குகளை மறுத்து – நமது தினசரி வருமானத்தில் 10 நாள் வருமானத்திற்கு மேல் செலவு செய்யாமல் – பதிவு அலுவலக அளவில் நடக்கும் திருமணங்களே திராவிடர் திருமணங்கள். இவையும் இனி வளர்ச்சிப் போக்கில் லிவிங் டுகெதர், திருமணமுறையின்றி ஒத்த மனமுடைய இணையர்கள் ஒன்றாய் வாழும் நிலைநோக்கிச் செல்ல வேண்டும்.

“ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு ‘திருமணம்’ என்ற ஏற்பாடுதான் நிரந்தரமானது என்று கருத வேண்டியதில்லை. உலக விஷயங்கள் அனைத்திலும் மாற்றங்கள் ஏற்படுவது போல திருமண முறையில் மாற்றம் ஏற்படுவது மட்டு மல்லாது திருமண முறையே மறைந்து போகக்கூடும்”  திராவிடர் திருமண முறை செல்லும் திசை இதுதான்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.