தனிக்கிணற்றில் நீர் குடித்து வாழ்வதைவிட சாவதே மேல்! – தோழர் பெரியார்

ஆதிதிராவிடர்களுக்கென்று தனிக்கிணறுகள் வெட்டுவது அக்கிரமமென்பதே எனது அபிப்பிராயம். இவ்வாறு தனிக்கிணறுகள் வெட்டுவது, ஆதி திராவிடர்கள் நம்மை விடத் தாழ்ந்தவர்கள், அவர்கள் நம்முடன் கலக்கத்தக்கவர்களல்ல என்று ஒரு நிரந்தரமான வேலியும் ஞாபகக்குறிப்பும் ஏற்படுத்துவதாகத்தான் அர்த்தமாகும். எதற்காக அவர்களுக்குத் தனிக்கிணறு வெட்டவேண்டும்? சிலர் ஆதி திராவிடர்களுக்கு நன்மை செய்வதாக வேஷம் போட்டு தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை நிலை நிறுத்திக்கொள்ளத்தான் இவ்வித தர்மங்கள் உதவும். நமது கிணறு குளங்களில் ஆதி திராவிடர்களை ஏன் தண்ணீர் எடுக்க அநுமதிக்கலாகாது? பக்ஷிகளும் மிருகங்களும் குளங்களில் தண்ணீர் சாப்பிடுவதில்லையா? குளங்களுக்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது என்பது உங்களுக்குத் தெரியாதா? அதில் என்னென்ன வருகிறதென்பது உங்களுக்குத் தெரியாதா? இவ்விதத் தண்ணீரை இந்த ஆதி திராவிடர்கள் எடுத்து சாப்பிட்டு விடுவதனால் என்ன கெடுதி ஏற்பட்டுவிடும்.”

– தோழர் பெரியார், குடி அரசு – 25.04.1926

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, “தீண்டப்படாதவர் களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக்கோவில் கட்டிக் கொடு’ என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்’ என்றேன். “அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல’ என்றேன்.

 தோழர் பெரியர், விடுதலை – 09.10.1957

1920, 1924 – ல் பஞ்சமர்களின் தண்ணீர் குடிப்பதற்கு என்று அந்த ஊர் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பணம் வசூலித்து அவர்களுக்குத் தனிக்கிணறு என்று செய்வார்கள். காங்கிரசிலேயிருந்து வெளியே வந்து, நாங்கள் “அவர்களுக்குத் தனிக் கிணறு என்று வைத்து, என்றைக்குமோ அவர்களின் இழிதன்மையை நிலை நிறுத்துகிறாயே” என்று கூப்பாடு போட்டதற்கு அப்புறம்தானே சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதுபோலவே ஆதிதிராவிடர்கள் கும்பிடுவதற்குத் தனிக்கோவில் கட்ட வேண்டும் என்று காங்கிரசுக்காரர்கள் ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மட்டும் தனிக்கோயில் என்று வைத்துக் கொண்டு அவர்களை என்றுமே தாழ்த்தி வைக்க முயற்சி செய்ததால் அதையும் நாங்கள் கண்டித்தோம்.

தோழர் பெரியார்- 29.5.1950 விடுதலை

http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/2971-2010-02-01-04-43-44

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.