அந்தணர் அந்நியரே! ஆரியரே! – 3

அந்தணர் அந்நியரே! ஆரியரே! – 3

அதி அசுரன்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வரலாற்று அறிஞரான எஸ்.கே. பிஸ்வாஸ் அவர்கள் ‘பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டுகளாக மார்க்சியம்’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதிய மிகச்சிறப்பான மார்க்சிய ஆய்வுநூல் ஒன்று தலித்முரசு இதழில் தமிழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கிறது. அதில் அந்த ஆய்வாளர் கூறுகிறார்,

“இந்து மதம், ஒரு சமத்துவமற்ற மதம். வெறுப்பு, பயங்கரவாதம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றின் ஆதரவோடு ஒடுக்குமுறையின் முன்னோடியாக திகழும் இந்து மதம், தனது ஆற்றல் மிக்க எதிரிகள் அனைத்தையும் கடத்தி ஆரியமயமாக்குவதன் மூலமே பல்லாண்டு காலமாக நிலைத்து வருகிறது. இந்தத் திட்டமே உள்வாங்குதல் என்று அழைக்கப்படுகிறது. ஆரிய படையெடுப்பினை எதிர்த்து தனது தாய் நாட்டை காக்கப் போரிட்ட போது வேத படையெடுப்பாளரான போர்த்தலைவன் இந்திரனால் கொல்லப்பட்ட பூர்வ குடி நாயகனான கிருஷ்ணனை பார்ப்பனியம் ஆரியமயமாக்கியது. நாட்டுப்பற்றுமிக்க கிருஷ்ணா, வெளி நாட்டு ஊடுருவாளரான இந்திரனை எதிர்த்து பத்தாயிரம் போர் வீரர்களுடன் போரிட்டார். இறுதியில் எரித்துக் கொல்லப்பட்டார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிகள் ஆரிய போர்த் தலைவனான இந்திரனால் கொல்லப்பட்டனர்.

பிற்காலத்தில் இந்த புகழ் பெற்ற மண்ணின் தலைவனின் பெயரால், சதுர் வர்ண தத்துவம் கீதையில் போதிக்கப்பட்டது. ரிக் வேத காலத்தின் தொடக்கத்தில், பெரும்பான்மை மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த பூர்வ குடித் தலைவனான மனு ஒரு கிராம தலைவராக இருந்தார். அவரது ஆளுமை கடத்தப்பட்டது. பிருகு என்ற பார்ப்பனன் அளித்த சட்டங்கள், மனுவின் பெயரில் எழுதப்பட்டு, மனு ஸ்மிரிதியில் சட்டமாக்கப்பட்டு, இந்தியாவின் பூர்வ குடி மக்களை சுரண்டி அடிமைப்படுத்தப் பிரச்சாரம் செய்யப்பட்டன. மண்ணின் போர்ப்படையை வீழ்த்தவும், இந்திய உழவர்களிடையே பார்ப்பனியத்தை பிரச்சாரம் செய்யவும் நடைமுறைப் படுத்தவும் அவர் ஆரியமயமாக்கப்பட்டார்.

புரட்சியாளரான அசுர மன்னன் பாலாவின் மகனான அக்னியை, இந்திரனின் முகாமில் சேர்ந்து, நாட்டிற்கு துரோகியாக நடிக்க காரணமாக இருந்தது மனுவாகும். ஆரிய காலத்திற்கு முந்தைய சிந்து-ஹரப்பா-மொகஞ்சதாரோ பகுதிகளில் நிலவிய, மண்ணின் மதமான பெளத்தத்தை பிரச்சாரம் செய்த, பழமையான சிரமண பண்பாட்டை ஏற்றுக் கொண்ட சாக்கிய பழங்குடியைச் சேர்ந்த கவுதமரையும் உள்வாங்கியது. புத்தர் இந்து மதக் கடவுளான விஷ்ணுவின் 9-ஆவது அவதாரமாக ஆக்கப்பட்டுள்ளார். பார்ப்பனியம் முகமது மற்றும் இஸ்லாத்தையும் கூட கடத்த முயற்சித்தது (அலோபனிஷத், பவிஷ்ய பூரண் ஆகியவற்றை பார்க்கவும்) சூத்திரரான சிவாஜி சிவ சேனை உருவாக்கியதன் மூலம் மிக செறிவாக இந்துமயமாக்கப்பட்டுள்ளார். டாக்டர் அம்பேத்கரை இந்துமயமாக்கி ‘ஒரு உண்மையான ஆரியன்” எனவும், விஷ்ணுவின் 10-ஆவது அவதாரம் (கல்கி) எனவும் வழங்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

இப்படிப்பட்ட ஆரியப் படையெடுப்பிற்கும், பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப் பிற்கும் தமிழர் வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் ஏராளமான ஆதாரங்களில்  சிலவற்றை ஏற்கனவே பார்த்தோம். பார்ப்பனர்களுக்கு எதிரான திராவிடர் என்ற சொல்லும் இப்படித்தான் ஆரியர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் என்றால் தென்னாட்டு பிராமணர் என்று பொருள் என காஷ்மீர வரலாற்று நூலான இராஜதரங்கினி சொல்வதாக போராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். அந்த நூலின் காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு. அதற்கு முன் கி.மு வில் இராஜதரங்கினி காலத்துக்கு முன்பாக சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தொகுக்கப்பட்ட மனுதரும சாஸ்த்திரத்தில் திராவிடர் என்றால் பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் என்றே குறிப்பிடப்படுகிறது. சமஸ்கிருதத்தில் இருந்த அந்த மனு சாஸ்த்திரத்தை 1919 இல் திருவைந்திரபுரம், கோமாண்டூர் இராமாநுஜாச்சாரியார் தமிழில் மொழிபெயர்த்து ‘அசல் மனுதரும சாஸ்த்திரம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அந்த நூலில் திராவிடர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்த்ரீகளிடத்தில் பிறந்த புத்திராளுக்கு விதிப்படி காலத்தில் உபநயந முதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச் சொல்லப் படுகிறார்கள். ( அத்தியாயம் 10; ஸ்லோகம் 20)

விராத்திய க்ஷத்திரியனுக்கு அவ்வித க்ஷத்திரிய ஸ்த்ரீயினிடத்தில் சல்லன் பிறக்கிறான். அவனுக்கு மல்லன், நிச்சு விநடன், கரணன், கஸன், திராவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெயருண்டு. ( அத்தியாயம் 10; ஸ்லோகம் 22)

பிராமணிடத்தில் வணங்காமையாலும், உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மையை யடைந்தார்கள். ( அத்தியாயம் 10; ஸ்லோகம் 43)

பெளண்டரம், ஒளண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், பாரதம், சீகம், கிராதம்,தரதம், கசம் இந்தத் தேசங்களையாண்டவர்கனைவரும் மேற்சொன்னபடி  சூத்திரர்களாய்விட்டார்கள்.( அத்தியாயம் 10; ஸ்லோகம் 44)

மேற்கண்ட சலோகங்களின்படி க்ஷத்திரிய ஜாதிகளுக்கு என விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யத் தவறியவர்களும் – க்ஷத்திரிய ஜாதிகென்ற வரையறைகளை மீறியவர்களும் சூத்திரர்கள் ஆகி விடுகிறார்கள். அந்த சூத்திரர்கள் திராவிடர்கள் என அழைக்கப்படுவார்கள். அவர்கள் ஆண்ட தேசங்களில் ஒன்று திராவிடம் என்றுதான் மனுதருமம் கூறியுள்ளது.

மனு தர்மத்தையோ, ஸ்லோகங்களையோ நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. புராணங்களையும் சாஸ்திரங் களையும் கரைத்துக் குடித்து, ஆய்ந்தறிந்து, “புராணங்களில் வரலாற்று உண்மைகள் ஒளிந்து கிடக்கின்றன” என்று கண்டுபிடித்த வரலாற்றுப் பேராசிரியருக்கு மேற்கண்ட அசல் மனுதருமத்தில் இருக்கும் வரலாற்று உண்மை தெரியாதது எப்படி?

சாஸ்த்திரத்தில் திராவிடர் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பதைப் பார்த்தோம். வரலாற்றிலும் அப்படி ஒரு சான்று உள்ளது. சமணமதம் தமிழ்நாட்டுக்குள் வந்து, வளர்ந்து, இந்து மதத்தில் தேய்ந்து, மறைந்த  வரலற்றை  மயிலை.சீனி.வேங்கடசாமி அவர்கள் ‘சமணமும் தமிழும்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். கிறிஸ்து பிறப்புக்கு முன்பே தமிழ்நாட்டுக்குள் சமணம் வந்துவிட்டது. ஆரம்ப காலங்களில் இந்து மதத்துக்கு எதிராகவே சமணம் இருந்தது. பார்ப்பனர்களுக்கு எதிரான – கடவுளுக்கு எதிரான மதமாகவே சமணம் இருந்தது. சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கின்றனர். எனவே கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே  சமண மதத்தில் நந்திகணம், சேன கணம், சிம்ம கணம், தேவ கணம் என நான்கு பிரிவுகள் உண்டாயின. அந்தப் பிரிவுகளில் ஒன்றான நந்திகணத்திலிருந்து திரமிள சங்கம் அல்லது திராவிட  சங்கம் உருவானது என்று மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று கூறுகிறது. ( EC.Vol.V.Hassan Taluk, 131, Arsikera Tq, IEC. Vol IV. Gundlupet Tq.27)

மேலும் கி.பி. 470 ஆண்டு சமண சமயத்தவரான வச்சிரநந்தி என்பவர் திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவ சேனர் என்பவர் எழுதியிருக்கிறார். சமண மதத்தின் இந்த திராவிட சங்கம் மதுரையில் தான் தொடங்கப்பட்டது என்றும், கி.பி 900 வரை அந்த திராவிட சங்கத்தைச் சேர்ந்ததுறவிகள் வாழ்ந்தனர் என்றும் வரலாற்றுக் குறிப்புகளை ஆதாரம் காட்டி மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதியுள்ளார். ஆக 5 நூற்றாண்டின் இறுதிவரைகூட திராவிடர் என்ற சொல் ஆரியர்களுக்கு – பார்ப்பனர் களுக்கு – இந்து மதத்துக்கு எதிரான சொல்லாகவே இருந்திருக்கிறது. பேராசிரியர் ஜெயராமன் குறிப்பிடும் காஷ்மீரத்து இராஜதரங்கினி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்திருக்கும் என நம்பப்படும் நூலாகும்.

தமிழ்நாட்டு வரலாற்றை ஓரளவு மேலோட்டமாகப் படித்தாலே 6 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அதாவது களப்பிரர்கள் காலத்தில் அடங்கியிருந்த பார்ப்பனர்கள் அதன் பிறகு முழுவீச்சில் செயல்பட்டு வெகு வேகமாக தன் பழைய அடிமைகளாகிய தமிழ்மன்னர்களையும், தமிழ்ச்சமுதாயத்தையும் முழுமையாக ஆரியமய மாக்கினர். இக்கால கட்டத்தில்தான்  ஆதிசங்கரர் என்ற நம்பூதிரிப் பார்ப்பான் தோன்றி இந்துமத மறுமலர்ச்சிக் காலம் உருவானது. வாழ்ந்தால் பார்ப்பன அடிமையாக – இந்துவாக வாழ வேண்டும். அல்லது அழிய வேண்டும் என்ற நெருக்கடியை பார்ப்பனர்கள் உருவாக்கினர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் அனைவரும் பார்ப்பனதாசர்களாக பார்ப்பனர்களின் தளபதிகளாகச் செயல்பட்டு ஆரியத்துக்கு எதிரான அனைத்தையும் அழித்தனர். ஆரியத்துக்கு எதிரான சமண, புத்த மதங்கள் அழிக்கப்பட்டன. சமணர்களும் பெளத்தர்களும் திட்டமிட்டுக் கொல்லப்பட்டனர். கழுவேற்றப்பட்டனர். புத்த கோவில்கள் இந்துக் கோவில்களாக்கப்பட்டன. அல்லது இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. ஆரியத்துக்கு எதிரானவர்களின் அடையாளங்கள் சிதைக்கப் பட்டன.  அவை ஆரியர்களின் அடையாளங்களாக மாற்றப்பட்டன.

தற்காலத்தில் ஆரியர்களின் பாசறையாக இயங்குவது ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கரமடம். அந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் சின்னம் ஸ்வஸ்திக். நான் ஆரிய இனத்தைச் சேர்ந்தவன் என இறுமாப்புடன் பெருமை யாகப்பேசி வாழ்ந்த கொடுங்கோலன் ஹிட்லரின் சின்னம் ஸ்வஸ்திக். அந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் சிறு மாற்றத்தைச் செய்து தமிழ்நாட்டில் இந்துமுன்னணி இராமகோபலனும் தனது அமைப்பின் அடையாளமாக வைத்திருப்பது ஸ்வஸ்திக். இந்துமத்தின் அடையாளமாகவும், ஆரியக்கொடுங்கோலனின் அடையாளமாகவும் இந்துப்பாசிச, காவி பயங்கரவாதத்தின் அடையாளமாகவும்  பல நூற்றாண்டுகளாக நாம் அறிந்திருக்கும் இந்த ஸ்வஸ்திக் சின்னம் உண்மையில் இந்து மதத்திற்கு எதிரான சமணமதத்தின் சின்னமாகும். ஸ்வஸ்திகம் என்றும் பிறவிச்சக்கரம் என்றும் தமிழ்இலக்கியங்களில் இந்த சமணச் சின்னத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுரையில் ஆனைமலைப் பகுதிகளில் உள்ள சமணர்களின் பாறைச் சிற்பங்கள் மற்றும் பிராமிக் கல்வெட்டுக் களிலும் இச்சின்னம் காணப்படுகிறது.

இதேபோல ‘சங்கம்’ என்ற சொல் ‘புத்தர்களின்குழு’  அல்லது ‘புத்த துறவிகளின் கூட்டம்’ என்ற பொருளில்தான் வழங்கிவந்தது.  ஆனால் ஆனால் இந்து சமய மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு நம் காலத்தில் சங்கம் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்ஸைத் தான் குறிக்கிறது. ‘ராஷ்ட்ரியம் ஸ்வயம் சேவக் சங்,’  ‘சங் பரிவார்’ என புத்தர்களின் ‘சங்கம்’ பார்ப்பன ஆதிக்கத்திற்காக உழைக்கும் ‘சங்’ ஆகிவிட்டது.

புத்தருக்கு ‘சாஸ்தா’ என்ற ஒரு பெயரும் உண்டு. அமரகோசம், நாமலிங்கானசாசனம் போன்ற வடமொழி நிகண்டுகளில் இதற்கான ஆதாரம் உண்டு. அந்த ‘சாஸ்த்தா’ என்ற சொல்லின் திரிபு ‘சாத்தன்’ எனப்படும். தமிழில் சங்க இலக்கியங்களில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சாத்தனார் என்றே அழைக்கப் பட்டுள்ளனர். மதுரைக்கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனாரைப் போல பல புத்த சமய இலக்கியவாதிகள் சாத்தன் என்ற பெயரில் வாழ்ந்திருக்கின்றனர். இன்றும் நம் தமிழ்நாட்டு கிராமங்களில் சாத்தப்பன் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் இன்று பல தலைமுறைகளாக நமக்கு ‘சாஸ்தா’ என்றால் ஹரி ஹர புத்திரன் ஐயப்பனைத் தானே தெரியும்.

புத்தருக்கு ‘விநாயகன்’ என்றும் ஒரு பெயர் உண்டு. கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் கோவிலோ விநாயகர் வழிபாடோ கிடையாது என்று மறைமலைஅடிகளும் கருத்துத் தெரிவித்துள்ளார். வடமொழி நிகண்டுகளில் ‘விநாயகன்’ என்ற பெயரில் புத்தர் அழைக்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.  அதுபோல போதி மரத்தடியில் புத்தருக்கு ஞானம் வந்தது என்பதால் புத்த மதத்தினர் போதி மரத்தையும் முக்கியமானதாகக் கருதினர். போதிமரம் என்றால் வேறொன்றுமில்லை. அரச மரம். சங்க இலக்கியங்களில் இளம்போதியர் என்ற பெயரில் ஒரு புலவர் வாழ்ந்திருக்கிறார். புத்த மதத்தினரைக் குறிக்க சில சங்க இலக்கிய வரிகளில் ‘போதியர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தர் போதி மரத்தை அதாவது அரச மரத்தை சுற்றிவரும் வழக்கமுள்ளவர் என்று ஒரு காரணத்தைச் சொல்லி புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அரச மரத்தை வலம் வரும் வழக்கத்தைக் கடைபிடித்துவந்தனர். ஆனால் இன்று ‘விநாயகன்’ என்ற சொல் புத்த மதத்துக்கு நேர் எதிரான இந்து மதத்தின் காவிக் கூட்டத்தின் காலிக்கூட்டத்தின் அடையாளமாகவும், அரசமரத்தைச் சுற்றிவரும் வழக்கம் இந்துமத மூடநம்பிக்கையின் சின்னமாகவும் மாறிவிட்டது.

இந்துமதத்திற்கு மாற்றாக இருந்த கிறிஸ்தவ மதமும், இஸ்லாம் மார்க்கமும் தமிழ்நாட்டில் கி.மு காலத்திலிருந்து இயங்கிவந்த ஆசீவகம், சமணம், பெளத்தம் போன்ற மதங்களைப் போல முற்றாக அழிந்து விடாமல் ஓரளவு தாக்குப்பிடித்து இயங்கிவருகின்றன. ஆனால் இந்து மதத்தின் முதுகெலும்பான – அடிநாதமான வர்ணாஸ்ரமத்தை – ஜாதிப் பிரிவினைகளை ஏற்றுக்கொண்டு, தத்தம் மதங்களிலும் பார்ப்பன ஆதிக்கத்தை அனுமதித்து, ஆரியச்சுரண்டலுக்கு தத்தம் மதங்களையும் பலியாக்கிவிட்டுத்தான் இந்தியாவில் நீடித்து உயிர்வாழ்கின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆரிய ஆட்டம் இன்னும் அடங்கவில்லை. மார்க்சின் பொதுவுடைமைத் தத்துவம்கூட பார்ப்பன மண்ணில் செரிக்கப்பட்டுவிட்டது என்பதைத்தான் அறிஞர் எஸ்.கே. பிஸ்வாஸ் தனது நூலில் நுணுக்கமாக ஆய்ந்துள்ளார்.

பல நூற்றாண்டாக நடந்துவரும் இந்து சமய வெறியாட்டத்தில் அதை எதிர்த்த அனைத்தும் அழிக்கப்பட்டன. உள்வாங்கப்பட்டன. அந்த வரிசையில்தான் ‘திராவிடர்’ என்ற சொல்லும் 10 ஆம் நூற்றாண் டிற்குப் பிறகு பார்ப்பனர்களால் அவர்களது அடையாளமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றி பெறாமல் போய்விட்டது.  ஏதோ ஒரு வரலாற்று நூலிலும் பார்ப்பனர்கள் இயற்றிய ஓரிரு நூல்களிலும், ஆதி சங்கரன் போன்றோரின் வரிகளிலும்  அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பார்ப்பனர்கள்  முயன்று, தோற்றுவிட்ட ஒரு செயலை மாயவரத்துக் குணாவும் ஆர்.எஸ்.எஸ் ஸின் ரகஸ்ய கார்யவாஹ் களும் தற்போது மீண்டும் தேடிப்பிடித்து பார்ப்பான் காலடியில் வெற்றிக்கனிகளைக் கொட்டிட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள்.

அந்த முயற்சிகளில் நேர்மை இல்லை என்பதை அவர்களது ‘மனு என்பவன் திராவிட அரசன்’ என்ற ஆய்விலேயே பார்த்தோம். அந்த ஆய்வின் பித்தலாட்டத்தை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று கிடைத் துள்ளது. “நம் தமிழ் மன்னர்களான சோழர்கள் மனுவின் வாரிசுகளே,” “ சோழர்களின் மூத்தவர், முன்னோர் மனு ஆவான்” என்பதற்கு ஒரு சான்று கிடைத்துள்ளது.  ஆதாரமாக, சங்க இலக்கிய வரிகளை இதில் மேற்கோள் காட்டவில்லை. லீடன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களிலேயே இதற்கான சான்று உள்ளது. பிற்காலச் சோழர்களையோ அல்லது தெலுங்குச் சோழர் களையோ அல்லது மனுநீதிச் சோழனையோ  சொல்லவில்லை. காவிரிக்குக் கரை கட்டிய கரிகால் பெருவளத் தான் என்ற பண்டைச்சோழனே, முற்காலச்சோழனே மனுவின் வாரிசுதான் என ஆனைமங்கல பெரிய செப்பேடு தெரிவிக்கிறது. மயிலை.சீனி.வேங்கடசாமி தனது ‘பெளத்தமும் தமிழும்’ என்ற நூலில் அந்த  லீடன் சாசனமான ‘ஆனைமங்கலச் செப்பேட்டுச் சாசனங்களை அப்படியே பதிவு செய்துள்ளார்.

சங்க இலக்கியங்களைப் போல வரலாற்றுச் செப்பேடுகளிலும், கல்வெட்டுக்களிலும் ஆரியம் தன் கைவண்ணத்தைக் காட்டியுள்ளது என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  இந்த ஆனைமங்கலச் செப்பேட்டைச் சான்றாகக் கொண்டு மனு தர்மம் என்பது சோழர்களின் தத்துவம், தமிழர்களின் தத்துவம், சங்க காலத்திலிருந்து தமிழர்கள் அனைவரும் பார்ப்பனர்களே என்றெல்லாம்கூட வரலாறு எழுதலாம். மனு தர்மத்திலேயே ‘திராவிடன்’ என்றால் சத்திரியன், சூத்திரன் என்று சொல்லிவிட்டான். எனவே நாங்கள் ‘திராவிடர்கள்’ எனவும் எழுதலாம். பெங்களுர் குணாவின் புதிய அடிமைகளைப் போல நம்மாலும் மயிர்பிளக்கும் சொல் ஆராய்ச்சிகளிலும், பார்ப்பனத்தனமான வரலாற்று ஆராய்ச்சிகளிலும் ஈடுபடமுடியும் என்பதற்கு ஒரு சுருக்கமான முன்னுரை தான் ( Synopsis) மேற்கண்ட பத்திகள்.

12 ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர்கள் தம்மை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என ஆராயத் தெரிந்தவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனர்கள் தம்மை தமிழர்களாக, அந்தணர்களாக அடையாளப்படுத்தப்படுத்துவதைப் பார்க்க முடியவில்லை. அமிதாப்பச்சனுக்கும் தங்கர்பச்சனுக்கும் பொதுவாக பச்சன் என்ற சொல் வருவதால் இருவரும் ஒரே இனத்தவர் என்பது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக,  தற்போது ஆரியன் என்பதற்கும், அந்தணன் என்பதற்கும் யார் உரிமை கோருகிறார்கள் எனப் பாருங்கள். இன்றைய காலகட்டத்தின் அந்த ஆரியத்தை எதிர்த்துப் போரிடும் தத்துவம் எது எனப் பாருங்கள்.  “அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்” என்று காஞ்சி சங்கராச்சாரி  நூல் வெளியிடு கிறான். தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்து நாட்டைக்கெடுத்த அனைத்துப் பார்ப்பனர்களைப் பற்றியும் பெருமையாக அதில் பட்டியலிடுகிறான். இப்போதும் இந்த வாரமும் ஆனந்தவிகடன் இதழில் $ரங்கப் பார்ப்பான் வாலி “நினைவு நாடாக்கள்” என்ற பெயரில் ஒரு தொடர் எழுதுகிறான். அதில் “நான் ஒரு அந்தணன்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளான்.  செத்துப்போன சங்கராச்சாரி இந்து தர்மங்கள் என்ற தனது நூலில் திராவிடர் என்ற சொல்லைக் கண்டு அலறுவதைப் பாருங்கள்,

“மேனாட்டு வரலாற்று ஆசிரியர்கள் ஆரியர் என்ற சொல்லால் இந்தியாவிலுள்ள பிராமணர்களைக் குறிக்கிறார்கள். திராவிடர் என்ற சொல்லால் பிராமணரல்லா தவரைக்குறிக்கிறார்கள் இப்படி ஆரியர் – திராவிடர் என்ற பேதத்தை ஏற்படுத்தி அதன்மூலம் பிராமணர் – பிராமணரல்லாதார் என்ற வேற்றுமையை வளர்த்து அதன்மூலம் இந்து மதத்தினுடைய ஒற்றுமைக்கே உலை வைக்க முயற்சிசெய்கிறார்கள்.” (வானதிபதிப்பகம் இந்து தர்மங்கள் 6-ஆம்பதிப்பு பக்கம் 94)

இந்து மத ஒற்றுமைக்காக சங்கராச்சாரி துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பேராசிரியர் ஜெய ராமனும் மணியரசனும் துடிப்பது என்? தமிழ்த்தேசிய தமிழர் கண்ணோட்டத்தின் இணையாசிரியர் வெங்கட்ராமன் ஒரு  பார்ப்பனர் என்பதால் ஒரு இனத்தின் வரலாற்றையே மாற்றமுனைவது ஏன்? அந்தணர் என்றும் ஆரியர் என்றும் நம் கண்முன்னே அடையாளப்படுத்திக்கொள்ளும் பார்ப்பனர்களை எதிர்த்து – அவர்களின் ஆயுதமான மனுதர்மம், சாதி, இந்துமதம், கடவுள்கள், இராமாயணம், மகாபாரதம், சமஸ்கிருதம், இந்தி, இந்தியா ஆகியவற்றை எதிர்த்து தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் தொடுத்த போர்கள் யாவை? அந்தப் போர்களில் எந்த விதத்தில் வீரியம் குறைந்த தன்மையில் திராவிடர் என்ற கருத்தியல் போராடியது? அந்தப் பட்டியலைப் போடுங்கள். எந்தக் கருத்தியல் தமிழனை அடிமைத் தளையிலிருந்து மீட்குமோ அதையே நம் போர்க்கருவியாக்கலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.